குடும்பத் தொலைநோக்கு திட்டம் ..! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 17.02.2025

குடும்பத் தொலைநோக்கு திட்டம்
நாம் எவற்றையெல்லாம் எழுத்து வடிவில் ஒரு தாளில் எழுதி வைக்கிறோமோ அவற்றையெல்லாம் நாம் சாதிக்க முனைகிறோம்.
எழுதப்பட்ட வார்த்தைகளுக்கு சக்தி அதிகம்.
வெற்றியாளர்கள் அவர்களுக்கு கிடைத்த வெற்றி ரகசியங்களில் ஒன்றாக இதை கூறுகின்றனர்.
தமக்கு என்ன முடிவுகள் தேவையோ அவற்றை துல்லியமாக தெளிவாக எழுதிக் கொள்ள வேண்டும்.
தொழிலில் வெற்றி
90 நாட்களுக்கு ஒரு முறை நமது வேலையில் சாதிக்க வேண்டிய குறிக்கோள்களை எழுதி வைக்கும் பழக்கம் வைத்துக்கொள்ள வேண்டும் .
அவற்றை தினமும் படித்து நமது இலக்கின் மேல் கவனமாக இருந்து நமக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை நம்மையும் அறியாமல் நழுவ விடாமல் உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும்.
குடும்பத்தில் வெற்றி
வாழ்க்கையில் வெற்றி என்பது குடும்பத்தில் வெற்றி என்பதில் இருந்தே துவங்குகிறது.
நம் குடும்பத்தில் வெற்றி பெற குடும்ப தொலைநோக்கு ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கி அதை எழுத்து வடிவில் வடிவமைத்து விட்டால் வாழ்க்கையின் போக்கில் நாம் வாழாமல் நாம் நினைத்தவாறு கவனமாக தேர்வு செய்து வாழ முடியும்.
எதிர்காலத்தில் நமது குடும்பத்திற்கு எது தேவை என்பதை தெளிவாக அறிந்தால் அது தீங்கு விளைவிக்கும் கெட்ட உந்துதல்கள் நம் வாழ்க்கையில் ஊடுருவி விடாமல் நம்மை பாதுகாக்கும்.
நமது எண்ணங்கள் தெள்ளத் தெளிவாக இருந்து நமது குடும்பத்தின் எதிர்காலத்தைப் பற்றிய நோக்கத்திற்காக அயராது முழுமையாக பாடுபடுவோமானால் மற்றவர்கள் கூறுவதெல்லாம் அர்த்தமற்றவைகளாக மாறிவிடும்.
பக்கத்து வீட்டில் உள்ளவர்கள், நம் உறவுகள், நம் சக ஊழியர்கள் போல் எல்லாம் நாமும் இருக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் செயலற்று போய்விடும்.
நாமும் நம் குடும்பமும் சுதந்திரம் பெற்று விடுவோம். அப்படி செய்வதால் நமது இல்வாழ்க்கையை அறிவுபூர்வமாகவும் தெளிவான வழியிலும் அமைத்துக் கொள்ளும் நிலைமைக்கு நாம் உயர்ந்து விடுவோம் .
நமது குழந்தைகள் சுதந்திரமாக இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.
சுதந்திரமான எண்ணங்கள் தான் வர்த்தகத் துறையில் வெற்றி பெறுவதற்கான முக்கிய காரணம்.
நாம் செய்ய வேண்டியது இதுதான். நம் குடும்ப வாழ்க்கைக்கு தேவையானது என்ன என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் .அவற்றை ஒரு தாளில் திட்டவட்டமாக எழுதிக் கொள்ள வேண்டும் .அப்பொழுது நம் விதியை நாம் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்து விடுவோம்.
நமது குடும்பத் தொலை நோக்கு ஒப்பந்தம் நம்முடைய கலங்கரை விளக்கமாக திகழும்.
கடல் எவ்வளவு கொந்தளிப்பாக மாறினாலும் அது அன்பும் அமைதியும் நிரம்பிய இடத்திற்கு நம்முடைய இல்லத்திற்கு நம்மை கொண்டு வந்து சேர்த்து விடும்.
இதனால் மேலான நன்மைகள் வரும்...
எழுதப்பட்ட வார்த்தைகளுக்கு சக்தி அதிகம்
இன்று நாங்கள் செய்த தவறுகளை எல்லாம் மன்னித்து எம் மக்களுக்கு குடும்பத்தில் ஒற்றுமையும் நிம்மதியும் அமைதியும் கிடைக்க நிறைவாய் அருள் தாரும் எம் தாய் அருள் நிறைந்த மரியே.
மரியே வாழ்க
சாமானியன்
ஞா சிங்கராயர் சாமி
கோவில்பட்டி
Daily Program
