செவிமடுத்தலும் பகுத்தறிவும் திருஅவையின் எதிர்காலம்.| Veritas Tamil

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் அவர்களது குடும்பங்கள் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்காகவும் இறைவேண்டல் செய்வதாக உறுதியளித்த திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் தொடர்ந்து அனைத்துலக நாடுகளும் ஒற்றுமையுடன் செயல்படுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

ஜூன் 26 மற்றும் 27 ஆகிய நாள்களில் வத்திக்கானில் இடம்பெற்ற சிறப்புநிலை  கர்தினால்கள் ஆலோசனை அவைக் கூட்டத்தை நிறைவு செய்வதற்கு முன்பு இவ்வாறு கூறிய திருத்தந்தை, அழிவுகரமான நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலா நாட்டு மக்களுடனான தனது நெருக்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

கர்தினால்களின் சுதந்திரம், சகோதரத்துவம் மற்றும் ஒன்றிப்பின் மனப்பான்மைக்கு நன்றி தெரிவித்த திருத்தந்தை,  மேலும் "கிறிஸ்து தனது திருஅவையை தொடர்ந்து வழிநடத்துகிறார்" என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.

பல்வேறு கலாச்சாரங்களைச் சேர்ந்த கர்தினால்கள் ஒன்றுகூடியிருப்பது நற்செய்தியின் பணியில் ஒற்றுமைக்கு ஒரு ஆற்றல்மிக்க சான்றாக அமைந்ததாகவும் திருத்தந்தை தெரிவித்துள்ளார்.

கூட்டொருங்கியக்கம் என்பது வெறும் நிர்வாக முறை மட்டுமல்ல, அது திருஅவையின் வாழ்வுமுறை என்று வலியுறுத்திய திருத்தந்தை, "அதன் கவனம் யார் அதிகாரம் வைத்திருப்பவர் என்பதில் அல்ல, மாறாக செவிமடுத்தல், பகுத்தறிதல் மற்றும் தூய ஆவியின் வழிகாட்டுதல் ஆகியவற்றின் மூலம் கிறிஸ்துவால் ஒப்படைக்கப்பட்ட கொடையைப் பாதுகாப்பதில் இருக்கிறது" என்று கூறியுள்ளார்.

உலகளாவிய சவால்கள் குறித்துப் பேசிய திருத்தந்தை, போர்கள், வறுமை, அநீதி மற்றும் வன்முறை ஆகியவை தனிமை, உடைந்த உறவுகள் மற்றும் நம்பிக்கையின்மை போன்ற ஆழமான நெருக்கடியில் வேரூன்றியுள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் "அன்பின் மகிழ்வு" (Amoris Laetitia)  என்ற திருத்தூது மடலின் செயலாக்கத்தை மதிப்பாய்வு செய்ய அக்டோபரில் ஒரு கூட்டத்தை நடத்த உள்ளதாகவும் திருத்தந்தை அறிவித்துள்ளார்.

போரை நியாயப்படுத்துவதற்குப்  பதிலாக உரையாடல் கலாச்சாரத்திற்கு அழைப்பு விடுத்த திருத்தந்தை, வன்முறையற்ற நிலை, ஒத்துழைப்பு மற்றும் பொது வாழ்வில் பொதுநிலையினர் அதிக அளவில் பங்கேற்பதை ஊக்குவித்தார். உண்மையான திருஅவை புதுப்பித்தல் என்பது கட்டமைப்பு சீர்திருத்தங்களை மட்டும் சார்ந்திராமல், நற்செய்திக்கு உண்மையுள்ள சான்றாக இருப்பதில் தொடங்குகிறது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இறுதியாக, நல்லிணக்கத்திற்கும் அமைதிக்கும் அழைப்பு விடுத்த திருத்தந்தை சிறப்புநிலை  கர்தினால்கள் ஆலோசனை அவைக் கூட்டத்தின் பலன்களை திருஅவையின் அன்னையாகிய கன்னி மரியாவின் பரிந்துரையில் ஒப்படைத்து தனது உரையை நிறைவு செய்தார்.