கிறிஸ்து பிறப்பு விழாவை அர்த்தமுள்ளதாகக் கொண்டாட திட்டமிட்டுள்ள திருத்துவபுரம் மறைவட்ட இளைஞர்கள் !| Veritas Tamil
குழித்துறை மறைமாவட்டம், திரித்துவபுர மறைவட்ட இளைஞர் இயக்க டிசம்பர் மாத பொதுக்குழு கூட்டம் மற்றும் கிறிஸ்து பிறப்பு விழாவானது, 14/12/2025 அன்று இளைஞர் பணிக்குழு அலுவலகம் திரித்துவபுரத்தில் நடைபெற்றது. கிறிஸ்மஸ் விழாவை முன்னிட்டு, பதாகை தயாரித்தல் (poster making) மற்றும் காய்கறிகளில் படைப்புகள் உருவாக்குதல் ( vegetable carving) ஆகிய போட்டிகள் மறைவட்ட செயற்குழுவால் நடத்தப்பட்டன.
பதாகை தயாரித்தல் போட்டியானது, “மூச்சு வாங்க போராடும் டெல்லி” என்னும் கருப்பொருளிலும், காய்கறிகளில் படைப்புகளை உருவாக்குதல் போட்டியானது, “அழகிய பூமி” என்னும் கருப்பொருளிலும் நடத்தப்பட்டது.
திரித்துவபுரம் மறைவட்டத்திற்குட்பட்ட கிளை உறுப்பினர்கள் போட்டிகளில் பங்கேற்று தங்கள் தனித்தன்மையை வெளிப்படுத்தினர். மேலும், மாத்திரவிளை மறைவட்டத்தின் முன்னாள் இளைஞர் இயக்க தலைவரும், குழித்துறை மறைமாவட்ட இளைஞர் இயக்கத்தின் முன்னாள் மாநில பகராளியுமான செல்வன். அனீஷ் அவர்கள் “அர்த்தமுள்ள கிறிஸ்து பிறப்பு கொண்டாட்டம்” என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார்.
இளைஞர் இயேசு விரும்பும் வகையில் கிறிஸ்து பிறப்பை கொண்டாடுவது எப்படி என்பதை மையப்படுத்தி இக்கருத்துரை அமைந்திருந்தது. இதன் சிறப்பம்சமாக அர்த்தமுள்ள விதத்தில் விழாவை கொண்டாட ஒரு சில வழிமுறைகளும் கருத்தாளரால் அறிமுகப்படுத்தப்பட்டன. குறிப்பாக, பங்கில் இருக்கக்கூடிய மாற்றுத்திறனாளி இளைஞர்களை இனம் கண்டு, அவர்களை இளைஞர் இயக்க கூட்டங்களில் பங்கெடுக்க செய்து, அவர்களது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருத்தல், இலட்சக்கணக்கில் செலவு செய்து குடில் கட்டுவதை தவிர்த்து, அடிப்படை வசதிகள் சரியாக இல்லாத வீட்டில் வசிப்போருக்கு புதிய இல்லம் அமைத்து தருதல், தனியாக வாழக்கூடிய முதியவர்களோடு நேரம் செலவிடுதல், நோயாளிகளை சந்தித்து அவர்களோடு உரையாடுதல் போன்ற கருத்துகள் இடம்பெற்றன.
பின்னர், கிளைகளின் கடந்த ஒரு மாத செயல்பாட்டு அறிக்கைகள் கிளை நிர்வாகிகளால் சமர்ப்பிக்கப்பட்டது. அடுத்த ஒரு மாதத்திற்கான வட்டார மற்றும் மறை மாவட்ட நிகழ்வுகள் தெரிவிக்கப்பட்டது. அத்தோடு, குழித்துறை மறைமாவட்ட இளைஞர் இயக்கத்தின் மாத இதழான யுகசக்தியில் டிசம்பர் மாதம் வெளிவந்த “கிறிஸ்து பிறப்பு கொண்டாட்டமும் நமது கரிசனையும்” என்ற கட்டுரையானது வாசிக்கப்பட்டு, குழு கலந்துரையாடல் நடத்தப்பட்டது. நிகழ்வின் நிறைவாக, கிறிஸ்துமஸ் கேக் வெட்டப்பட்டு, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பின்னர், அனைவருக்கும் நன்றி கூற, இயக்க பாடலுடன் இனிதே நிறைவடைந்தது.