திருநங்கையர் பங்கேற்ற மாபெரும் யூபிலி கொண்டாட்டம் !| Veritas Tamil

சென்னை மயிலை உயர் மறைமாவட்ட திருநங்கையர் நலத்திட்ட உதவி விழாவும் யூபிலி விழா கொண்டாட்டமும் நேற்று சாந்தோமில் நடைபெற்றது. சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தை சார்ந்த சுமார் 170 திருநங்கையர் இதில் பங்கேற்றனர்.

நிகழ்வில் சென்னை மயிலை உயர் மறைமாவட்டப் பேராயர் ஜார்ஜ் அந்தோனிசாமி அவர்கள் மற்றும் நலவாழ்வுக் குழு தலைவர் தக்கலை சீரோ மலபார் ஆயர் மேதகு ஜார்ஜ் ராஜேந்திரன், மற்றும் அருள்தந்தை ரேமண்ட், அருள்தந்தை பால்ராஜ், அருள்தந்தை தேவநேசன், அருள்தந்தை பீட்டர் தும்மா, அருள்தந்தை ஜூட் மற்றும் பொறுப்பிலுள்ள அருள்கன்னியர்கள் பங்கேற்றனர்.

துவக்க நிகழ்வாக திருநங்கை பிரகதி அவர்கள் இறைவார்த்தை வாசித்தார். அருள்தந்தை ரேமண்ட் அவர்கள் திருநங்கையருடன் பலவிதங்களில் சிறு சிறு நல் உரையாடல்கள், நடனங்கள் மற்றும் கருத்துரைகள் மூலம் பங்கேற்றோரை மகிழ்வித்தார்.

திருநங்கை ஒருவர் பாரதியார் பாடலுக்கு பரதநாட்டியம் ஆடி காண்போரை மகிழ்வித்தார்.
தோழமை இன்பா அவர்கள் விழாவில் அனைவரையும் வரவேற்று பேசினார்.அவர் தம் உரையில் பேராயரின் தனிப்பட்ட முயற்சியால் திருநங்கையர் பெற்றுக் கொண்ட பல்வேறு உதவிகளுக்கு நன்றி கூறி மகிழ்வை வெளிப்படுத்தினார்.
முதல் முறையாக ஊர் காவல் படையில் சேர்ந்துள்ள திருநங்கையர் கெளரவிக்கப்பட்டனர்.
பேராயர் தம் விழா சிறப்புரையில் தமிழக ஆயர் பேரவை நலவாழ்வுக்குழுவின் பல்வேறு சிறப்பு நிகழ்வுகளை கிறிஸ்துவின் விழுமியங்களில் இணைத்தும், கிறிஸ்து இயேசுவின் புதுமைகளில் பெரும்பாலும் ஏழை எளியோருக்கு குணமளிக்கும் புதுமைகள் தான் அதிகம் இருப்பதையும் சுட்டிக்காட்டி திருநங்கையரின் நல்வாழ்வுக்காக மறைமாவட்டம் வருங்காலத்தில் ஆற்ற இருக்கின்ற பயன் தரு பணிகளை குறித்து நம்பிக்கையளித்தார்.

வந்திருந்த அனைத்து திருநங்கையருக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நிறைவில் அனைவருக்கும் - அவர்கள் நன்றி தெரிவித்தார். அனைவருக்கும் சுவையான மதிய உணவு வழங்கப்பட்டது.