தலைநிமிரச் செய்யும் கடமை | அருட்சகோதரி ஜான்சி FBS | Veritas Tamil

நாம் ஒவ்வொருவரும் பல விதமான பணிகளை செய்து வருகிறோம். நாம் செய்யும் பணிகளுக்கு ஏற்ப நமக்கு பொறுப்புக்கள் கொடுக்கப்படுகின்றன. பொறுப்புக்களை கடமையாக பார்க்கும் மனிதர்கள் பலர் நம்மில் உள்ளனர். அதே சமயத்தில் பொறுப்புக்களை சேவைகளாக பார்க்கும் மனிதர்களும் நம்மில் இருக்கத்தான் செய்கிறார்கள். இதில் நாம் எந்த வகை மனிதர்களாக இருக்கிறோம் என்ற கேள்வியை நமக்குள்ளாக கேட்டுப் பார்ப்போம். நமக்கு கொடுக்கப்பட்ட பணிகளை அதிக அக்கறையோடு, ஒரு குடும்பத்தின், நிறுவனத்தின் முன்னேற்றம் கருதி செய்கின்றபோதுதான் பெரிய பொறுப்புகளுக்கு செல்ல நேரிடும். நமக்கு கொடுக்கப்படும் சிறு பணிகளைக் கூட சரிவர செய்யாமல் நமக்கு ஏன் இந்த பொறுப்பு கொடுக்கவில்லை என்று புலம்பிக் கொண்டே பணி செய்தோம் என்றால் அங்கு பொறாமை என்ற பண்பு தான் மேலோங்குமே தவிர அன்பு ஒரு நாளும் ஊற்றெடுக்க வாய்ப்பில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நமக்கு கொடுக்கப்படுகின்ற சிறு சிறு பொறுப்புக்களும் கடவுளிடமிருந்து நமக்கு கொடுக்கப்படுகிறது என்பதை உணர்ந்து கொள்வோம். இந்த பொறுப்புகளை நேர்த்தியுடன் செய்ய நமது மனதை பக்குவப்படுத்துவோம். 


இன்று பொறுப்புக்கள் நம்மை தேடி வராததற்கு பல காரணங்கள் இருக்கலாம். அந்த காரணங்களைப்பற்றி நாம் என்றாவது யோசித்ததுண்டா? இந்த கேள்விக்கு நம்மில் எத்தனை பேர் ஆம் என்றும், எத்தனை பேர் இல்லை என்றும் பதிலளிப்போம் என்று சிந்தித்துப் பார்ப்போம். அப்படி சிந்தித்து பார்த்து நம் வாழ்வை மறுபரிசீலனை செய்திருந்தால் இன்று நம்மில் பலர் எனக்கு இந்த பொறுப்பு கொடுக்கப்படவில்லையே என்று மற்றவர்களை குறை கூறியிருக்க மாட்டோம். பணிகளை சேவைகளாகப் பார்த்து, நேரம், காலம் பாராது பணி செய்பவர்களால் மட்டுமே பொறுப்புக்களை சிறப்போடு செய்ய முடியும். அப்படி சிறப்புடன் செய்யும் போது மட்டுமே பொறுப்புகள் நம்மை தேடி வரும். பொறுப்புகளில் உள்ளவர்களை உதாசினப்படுத்துவது, கேளி செய்வது இவற்றையெல்லாம் தவிர்த்து நமக்கு கொடுக்கப்படும் பணிகளை உள்ளார்ந்த மனதோடு, மனநிறைவோடு செய்தாலே பொறுப்புக்கள் நம்மை தேடி வரும் என்பதை புரிந்து கொள்வோம். 

 

எழுத்து 

அருட்சகோதரி ஜான்சி FBS

Daily Program

Livesteam thumbnail