குணமளிப்பும் மீட்பும் கடவுளின் கொடை! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

பொதுக்காலம் 23ஆம் வாரம் -செவ்வாய்
8 செப்டம்பர் 2026
தூய கன்னி மரியாவின் பிறப்பு (ஆரோக்கிய அன்னை விழா)

மீக்கா  5: 2-5a
மத்தேயு 1: 1-16, 18-23

குணமளிப்பும் மீட்பும் கடவுளின் கொடை!

முதல் வாசகம்.
 
இன்றைய முதல் வாசகத்தில், பெத்லகேம் சிறிய நகரமாக இருந்தாலும், அங்கிருந்தே இஸ்ரயேலை ஆளப்போகும் ஒரு தலைவன் பிறப்பார் என்று இறைவாக்கு கூறப்படுகிறது. அவருடைய தோற்றம் மிகவும் பழமையானது என்றும், அவர் கடவுளால் அனுப்பப்பட்டவராக இருப்பார் என்றும் மீட்பரின் பிறப்பு முன்னறிவிக்கப்படுகிறது.


நற்செய்தி.

1.இந்தப் பகுதியில் இயேசு கிறிஸ்துவின் வழிமரபையும் அவரது பிறப்பு செய்தியையும் மத்தேயு குறிப்பிடுகிறார். இதனால், மாற்கு நற்செய்தி முதலில் எழுதப்பட்டதாக இருந்தாலும் பழைய ஏற்பாட்டு நிகழ்வுகளோடு புதிய ஏற்பாட்டை இணைக்கும் நற்செய்தியாக மத்தேயு உள்ளது. முதல் வாசகத்தில் இயேசுவின் பிறப்பு முன்றிவிக்கப்பட்டு நற்செய்தியில் நிறைவேறியது. 


நற்செய்தியில்  18–23 வசனங்களில், மரியா தூய ஆவியினால் கர்ப்பமுற்றது தெரியவருகிறது. யோசேப்பு இதைக் கேட்டு குழப்பமடைந்தபோது, ஒரு வானதூதர் கனவில் தோன்றி, மரியாவை மனைவியாக ஏற்றுக்கொள்ளும்படி கூறுகிறார். அக்குழந்தையோ தூய  ஆவியினால் உண்டானவர் என்றும், அவருக்கு “இயேசு” என்று பெயரிட வேண்டும் என்றும் அறிவிக்கிறார்; ஏனெனில் அவர் தமது மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார் என்றும்  இது ஏசாயா இறைவாக்கின்  நிறைவேற்றம் என்றும் கூறப்படுகிறது. 

சிந்தனைக்கு.

இன்றி அகில உலக திருஅவை அன்னை மரியாவின் விழாவைக் கொண்டாடுகிறது. மேலும் இந்நாள் ஆரோக்கிய அன்னை விழாவாகவும் கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


புனித கன்னி மரியாளின் பிறப்புப் பெருவிழா, அமல உற்பவப் பெருவிழாவிற்கு (டிசம்பர் 8)  சரியாக ஒன்பது மாதங்களுக்குப் பிறகு கொண்டாடப்படுகிறது. மேலும், இயேசுவின் பிறப்பு மற்றும் திருமுழுக்கு யோவானின் பிறப்பு ஆகியவற்றுடன் சேர்த்து, பிறப்பை நினைவுகூரும் மூன்று முக்கிய திருவழிபாட்டு விழாக்களில் இதுவும் ஒன்றாகும். இது, மீட்பின் வரலாற்றில் கன்னி மரியா வகிக்கும் தனித்துவமான பங்கை எடுத்துக்காட்டுகிறது எனலாம்.


 
இன்று, அவருடைய பிறப்பை நாம் கொண்டாடும் வேளையில், அவருடைய முழு வாழ்க்கையையும், அவருடைய நிறைவான தூய்மையையும் நினைவுகூர அழைக்கப்புகிறோம்.   மேலும், அவரில் மற்றும் அவர் வழியாக கடவுள் நிறைவேற்றிய அருஞ்செயல்களைக் குறித்து கடவுளைப் போற்றிப் புகழவும் இன்றைய நாள் நன்னாளாக அமைகிறது.


 உண்மையில் அன்னை மரியா அதிகாலயில் தோன்றும்  சூரியனுக்கு முன் தோன்றும் விடியலாக விளங்குகிறார். அவரது பிறப்புப் பெருவிழாவைக் கொண்டாடுவதன் மூலம், நமது மீட்பரான இயேசு கிறிஸ்துவின் வருகையை நாம் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் எதிர்நோக்கையும் கொண்டுள்ளோம். 


இன்றைய நாளிளல் நாம் அன்னை மரியாவை ஆரோக்கிய அன்னையாகவும் போற்றி வணங்குகின்றோம். ஆரோக்கிய அன்னை ஆலயம் எனும் பெயர் கொண்ட பங்குகளில்,  குறிப்பாக தமிழ்நாட்டில் (இந்தியாவில்)  வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா என்ற பெயரில் அன்னை மரியாவுக்கு சிறப்பான பக்தி கொண்டாட்டம் உண்டு. “ஆரோக்கிய மாதா” அல்லது Our Lady of Good Health என்பது, உடல் மற்றும் ஆன்மீக நலனுக்காக அன்னை மரியாவின் பரிந்துரையை நாடும் கிறிஸ்தவ பக்தியுடன் தொடர்புடைய பெயராகும். நோய், துன்பம், கவலை போன்ற நேரங்களில் மக்கள் (இதர சமயத்தவர் உட்பட)  அன்னையிடம் நம்பிக்கையுடன் மன்றாடி, நலம் பெறுகிறார்கள். பிறருடைய தேவைகளை உணர்ந்து, அவர்களுக்காக பரிந்துரை செய்பவராக விளங்குகிறார் அன்னை மரியா  தலைசிறந்த, உன்னத தாயாக விளங்குகிறார். 


மத்தேயு நற்செய்தியில், காணப்படும் இயேசுவின் வழிமரபில்,  மூதாதையர்களும், அரசர்களும் மட்டுமல்லாமல், சில புறவினத்தாரும் காணப்படுகின்றனர்.  இவர்களில் ஒவ்வொருவரையும் பார்க்கும்போது, பெரியவர்களையும் சிறியவர்களையும், நீதிமான்களையும் பாவிகளையும் கடவுள் தமது திட்டத்தை நிறைவேற்றுவதற்குப் பயன்படுத்தினார் என்பது தெளிவாகிறது. அதே வரிசையில் அன்னை மரியாவும் தம் மகனிடம் பல சமயத்தவரை, இனத்தவரை அழைத்துக்கொண்டே இருக்கிறார் என்பதும் வெள்ளிடைமலை.


ஆனாலும், புறவினத்தாரிடையே காணப்படும் சில மூடநம்பிக்கைக்குரிய வேண்டுதல்கள் மற்றும் பரிகாரங்களை நாமும் பினபற்றுவது தவறாகும். குறிப்பாக, முடி இறங்குதல், ஆள் உயரம் மெழுக்குத்திரி கொண்டு வருதல்,  போன்றை குறிப்பிடத்தக்கவை. 

இறைவேண்டல். 

அன்பின் தாயே, ஆரோக்கிய அன்னையே, உம்மை நாடி வரும் எண்ணற்ற மக்களின் கண்ணீரையும், வேண்டுதல்களையும் நீர் அன்போடு ஏற்றுக்கொள்கிறீர். உமது பரிந்துரையால் கிடைத்த உடல் நலம், மன அமைதி, குடும்ப அமைதி போன்ற எண்ணற்ற நலன்களை நினைத்து, இன்று நன்றியுடன் உம்மை வாழத்துகிறோம். 


எங்கள் துயரங்களில் நம்பிக்கையைத் தந்தருளும்.
எங்கள் நோய்களில் குணமளிக்கும் அருளைத் தந்தருளும்.
எங்கள் பலவீனங்களில் துணையாக இருந்து, இறைவனின் அன்பில் உறுதியாக நிற்க எங்களுக்கு உதவுவீராக. ஆமென்.


ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியகல்வி மையம்,
+60122285452

Tamil Survey Popup Image