பொறாமை வீழச்சிக்குக் குழி பறிக்கும் ! | ஆர்.கே. சாமி | Veritas Tamil
பொதுக்காலம் 23ஆம் வாரம் -திங்கள்
7 செப்டம்பர் 2026
1 கொரி 5: 1-8
லூக்கா 6: 6-11
பொறாமை வீழச்சிக்குக் குழி பறிக்கும் !
முதல் வாசகம்.
இன்றைய முதல் வாசகத்தில், பவுல் அடிகள், கொரிந்து சபையில் ஏற்பட்ட ஒழுக்கக்கேட்டைக் குறித்து கண்டிக்கிறார். ஒரு மனிதன் தன் தந்தையின் மனைவியுடன் தவறான உறவில் இருந்தும், சபையினர் அதைக் குறித்து வருந்தாமல் பெருமைப்பட்டுக் கொண்டிருந்ததைச் இங்கே சுட்டிக்காட்டுகிறார். பவுல், இப்படிப்பட்ட தீமையை சபை பொறுத்துக்கொள்ளக் கூடாது என்று கண்டிப்பதோடு, அந்த நபரை சபையின் கூட்டுறவிலிருந்து விலக்கி, அவன் தன் தவறை உணர்ந்து மனந்திரும்புவதற்கான வாய்ப்பை அளிக்க வேண்டும் என அறிவுறுத்துகிறார்.
மேலும், “கொஞ்சம் புளித்த மாவு முழு மாவையும் புளிக்கச் செய்கிறது” என்ற உவமையின் மூலம், சிறியதாகத் தோன்றும் பாவத்தைக் கூட சபை அனுமதித்தால் அது முழு சமூகத்தையும் பாதிக்கும் என்பதை முன்வைத்து எழுதுகிறார். இறுதியாக, கிறிஸ்தவர்கள் பழைய பாவ வாழ்க்கையை விட்டுவிட்டு, தூய்மையுடனும் உண்மையுடனும் வாழ வேண்டும் என்று வலியுறுத்துகிறார். கிறிஸ்து நமக்காக பலியான பஸ்கா ஆட்டுக்குட்டி என்பதால், அவருடைய மக்களாகிய நாம் தூய்மையான வாழ்க்கையை நடத்த வேண்டும் என்பதை முக்கிய செய்தியாக பவுல் பதிவுச் செய்கிறார்.
நற்செய்தி.
நற்செய்தியில், இயேசு ஓய்வுநாளில் தொழுகைக்கூடத்திற்கு சென்று போதிக்கிறார். அங்கே வலது கை சூம்பியிருந்த ஒரு மனிதன் இருந்தான். இயேசுவை குற்றம் சாட்டுவதற்காக பரிசேயரும் வேதபாரகரும், ஓய்வுநாளில் இயேசு அவனைக் குணப்படுத்துகிறாரா என்று கவனித்துக் கொண்டிருந்தனர்.
இயேசு அவர்களுடைய எண்ணங்களை அறிந்து, ஓய்வு நாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா? எது முறை?” என்று கேட்டதோடு, அந்த மனிதனை நடுவில் நிற்கச் செய்து, அவன் கையை நீட்டும்படி கூறுகிறார். அவன் கையை நீட்டியவுடன் அது முழுமையாகச் சுகமடைந்தது.
இதைக் கண்ட பரிசேயரும் மறைநூல் அறிஞரும் கோபமடைந்து, இயேசுவுக்கு எதிராக என்ன செய்யலாம் என்று ஆலோசிக்கத் தொடங்கினர் என்று லூக்கா கூறுகிறார்.
சிந்தனைக்கு.
இன்றைய வாசகங்கள் நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கையின் தூய்மையையும், பிறர்மீது நாம் காட்ட வேண்டிய இரக்கத்தையும் நமக்கு நினைவூட்டுகின்றன.
முதல் வாசகத்தில், புனித பவுல் கொரிந்து திருஅவையில் ஏற்பட்ட ஓர் ஒழுக்கக்கேடான செயலைப் பற்றி பேசுகிறார். சமூகத்தின் தூய்மையைப் பாதுகாக்க வேண்டும் என்று அவர அறிவுறுத்துகிறார். சிறிதளவு புளிப்பு மாவு முழு மாவையும் புளிக்கச் செய்வது போல, சிறியதாகத் தோன்றும் பாவத்தையும் நாம் அலட்சியப்படுத்தக் கூடாது என்பது அவரது முக்கிய போதனையாக உள்ளது
நற்செய்தியில், ஓய்வுநாளில் இயேசு வலக்கை சூம்பிய ஒருவரைக் குணப்படுத்துகிறார். சிலர் இயேசுவைக் குற்றம் சாட்டுவதற்காக அவரைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இயேசு அவர்களிடம் ஒரு முக்கியமான கேள்வியைக் கேட்கிறார்: “ஓய்வுநாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா?” எது சிறப்பு , எது உகந்தது என்று கேட்கிறார்.
இன்று நாமும் சில நேரங்களில் பிறருடைய குறைகளைப் பார்க்க மிக விரைவாக முனைகிறோம், மாறாக, அவர்களின் வேதனையைப் பார்க்க மறந்துவிடுகிறோம். விதிகளைப் பின்பற்றுகிறோம்; ஆனால் இரக்கத்தை இழந்துவிடுகிறோம். அதிகாரத்தின் மீதான அகந்தையும், இயேசுவின் மீதான பொறாமையும் பரிசேயர்களை, மறைநூல் அறிஞர்களை சிந்திக்கும் திறனை இழக்கச் செய்தது. இயேசுவில் பொறாமை கொள்ளத் தூண்டியது. பொறாமை கொள்ளத் தூண்டியவன் சாத்தான்.
இன்று, நாமும் சுயநலம், பொறாமை, மற்றும் பிறர் மீது ஏற்படும் காழ்ப்புணர்ச்சி ஆகியவற்றிலிருந்து உருவாகக்கூடிய தீய சிந்தனையையும் ஆன்மீகக் குருட்டுத்தன்மையையும் பற்றி சிந்திக்க வேண்டும். அந்த பரிசேயர்களைப் போல, நம்மிலும் பொறாமை மற்றும் காழ்ப்புணர்ச்சி வேரூன்றி இருக்கலாம் அல்லது வேரூன்ற கூடும். சாத்தான் நம்மிலும் செயல்படக்கூடியவன்.
நிறைவாக, இந்த இரண்டு வாசகங்களும் குறைகூறுதலையும் வெளிப்புறை சடங்குகளையும் களைந்து, மனந்திரும்புதலையும், இரக்க குணமும் அன்பும் முக்கியமானவை என்பதையும் நமக்கு நினைவூட்டுகின்றன. நம் இருதயத்தில் உள்ள தீமையை அகற்றி, கிறிஸ்துவில் புதிய வாழ்வை வாழ வேண்டும். பிறரை குற்றம் சாட்டுவதற்குப் பதிலாக, இயேசுவைப் போல அன்புடனும் இரக்கத்துடனும் செயல்பட்டால், இறை அருள் நம்மிலும் ஊற்றெடுக்கும்.
அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடீன் பது (குறள் 165)
இக்குறளானது, பொறாமை கொண்டவர்களுக்கு வேறு பகைவர் தேவையில்லை; அவர்களின் பொறாமையே அவர்களுக்கு அழிவைத் தரும் என்றுணர்த்துகிறது.
இறைவேண்டல்.
ஆண்டவரே, என் வார்த்தையிலும் செயல்களிலும் உமது அன்பை வெளிப்படுத்தி, தேவைப்படுவோருக்கு நம்பிக்கை ஒளியாகவும் ஆறுதலாகவும் இருக்க என்னை வழிநடத்துவீராக. ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியகல்வி மையம்,
+60122285452
