பணிவாழ்வில் வீடாமுயற்சியும் நம்பிக்கையும் இரு துடுப்புகள்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil
28 அக்டோபர் 2026
புனிதர்கள் சீமோன், யூதா – திருத்தூதர்கள்-விழா
எபேசியர் 2: 19-22
லூக்கா 6: 12-19
பணிவாழ்வில் வீடாமுயற்சியும் நம்பிக்கையும் இரு துடுப்புகள்!
முதல் வாசகம்.
இன்றைய முதல் வாசகப் பகுதியில், இயேசு கிறிஸ்துவின் மூலம் நாம் இனி அந்நியர்களாகவோ, வெளிநாட்டினராகவோ இல்லை என்றும், கடவுளின் உடனிருப்பில் இறைவனின் குடும்பமாக, இறைமக்களாக இருக்கிறோம் என்று பவுல் கூறுகிறார்.
பவுலின் படிப்பினையில் இயேசுவை நம்பிக்கைக்கொண்ட அனைவரும் கடவுளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்தைத் தெளிவுப்படுத்துகிறார். அத்துடன் இறைவாக்கினரின் போதனைகளின் மீது நாம் கட்டப்படுகிறோம். இயேசு கிறிஸ்துவே அந்தக் கட்டிடத்தின் மூலைக்கல் என்கிறார்.
மேலும், கிறிஸ்துவோடு இணைந்து, இறைமக்கள் அனைவரும் ஒன்றாக வளர்ந்து, கடவுள் வாழும் தூய ஆலயமாக உருவாகிறோம் என்றும் எடுத்துரைக்கிறார்.
நற்செய்தி.
இந்த நற்செய்திப் பகுதியில் இயேசு தமது சீடர்களைத் தேர்ந்தெடுத்ததையும் நோயுற்றோரைக் குணப்படுத்தியதையும் லூக்கா குறிப்பிடுகிறார்.
இயேசு ஒரு நாள் மலையின் மேல் சென்று இரவு முழுவதும் தம் தந்தையோடு இறைவேண்டலில் இணைந்திருந்தார். பொழுது விடிந்ததும் தமது சீடர்களை அழைத்து, அவர்களில் பன்னிரண்டு பேரைத் தேர்ந்தெடுத்து திருத்தூதர்கள் என்று பெயரிடுகிறார்.
பின்னர் இயேசு அவர்களுடன் மலையிலிருந்து இறங்கி, சமவெளியில் நின்றார். அங்கு அவருடைய சீடர்களும், யூதேயா, எருசலேம் மற்றும் பிற பகுதிகளிலிருந்து வந்த ஏராளமான மக்களும் கூடியிருந்த வேளை, அவர்கள் இயேசுவின் போதனைகளைக் கேட்கவும், தங்கள் நோய்களிலிருந்து குணமடையவும் வந்திருந்தனர். அவர்களில் தீய ஆவிகளால் துன்பப்பட்டவர்களும் குணமடைந்தார்கள். இயேசுவிடமிருந்து வல்லமை வெளிப்பட்டதால், மக்கள் அனைவரும் அவரைத் தொட்டு நலம் பெற முயன்றார்கள் என்பதை லூக்கா குறுப்பிடுகிறார்.
சிந்தனைக்கு.
தம் சீடர்களைத் தம்மிடம் கூப்பிட்டு அவர்களுள்
பன்னிருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத்
திருத்தூதர் என்று பெயரிட்டார் (லூக்கா 6:13)
இன்று நாம் பன்னிரண்டு திருத்தூதர்களில் புனித சீமோன் மற்றும் புனித யூதா ஆகியோரின் விழாவைக் கொண்டாடுகிறோம்.
புனித சீமோன்:
லூக்கா நற்செய்தியில் சீமோன், “செலோத்தே” (விடுதலை போராளி) என்று குறிப்பிடப்படுகிறார். இந்த விடுதலைப் போராளிகள் யூதர்களின் ஒரு பிரிவைச் சேர்ந்தவர்கள். பாலஸ்தீனத்தில் உரோமையர்களின் ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவரவும், இஸ்ரயேலின் விடுதலையை மீட்டெடுப்பதையும், தங்கள் சமயத் தூய்மையைப் பாதுகாப்பதையும் முக்கிய கொள்கையாகக் கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புனித யூதா:
புனித யூதா, யாக்கோபின் மகன் என்று கூறப்படுகிறது. இயேசுவைக் காட்டிக்கொடுத்த யூதாஸ் இஸ்காரியோத்திடமிருந்து இவரை வேறுபடுத்திக் காட்டுவதற்காக இவ்வாறு குறிப்பிடப்படுகிறார்.
புனித யூதா, பாரம்பரியமாக ஒரு திருமுகம் எழுதினார் என்று கருதப்படுகிறார். அந்த திருமுகம் கிறிஸ்தவர்கள் தங்களுக்குக் கற்பிக்கப்பட்ட உண்மையான நம்பிக்கையில் உறுதியாக நிலைத்திருக்க வேண்டும் என்றும், தவறான போதனைகளைப் பரப்புவோரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்துவதாகக் கூறப்படுகிறது.
பொதுவாக, இந்த இரண்டு திருத்தூதர்களைப் பற்றிய வரலாற்றுச் செய்திகள் திருஅவையில் மிகக் குறைவாகவே உள்ளன. பெந்தகோஸ்தே நாளில் தூய ஆவியைப் பெற்ற பிறகு, புனித சீமோனும் புனித யூதாவும் திருஅவையின் தொடக்ககால ஆயர்களில் ஒருவராக விளங்கினர் என்று பாரம்பரியம் கூறுகிறது. புதிதாக ஏற்படுத்தப்பட்ட கிறிஸ்தவச் சமூகங்களை நம்பிக்கையில் ஆழப்படுத்தவும் அருளடையாளங்களையும் திருத்தூதர்களின் போதனைகளையும் அடுத்த தலைமுறையினருக்குக் கையளிப்பதும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பணிகளாக இருந்ததாக அறிகிறோம்.
அவர்களைப் பற்றிய வரலாற்று விவரங்கள் குறைவாக இருந்தாலும், பல பண்டைய குறிப்புகள் அவர்கள் இருவரும் இணைந்து மறைப்பணியாளர்களாகப் பயணம் செய்ததாகக் கூறுகின்றன. பாரம்பரியத்தின்படி, அவர்கள் பாரசீகத்திற்குச் (இன்றைய ஈரான்) சென்று, அச்சமின்றி நற்செய்தியைப் பறைசாற்றினர்.
கி.பி. 65ஆம் ஆண்டளவில், புனித சீமோன் இரண்டாக அறுக்கப்பட்டு மறைச்சாட்சியாக உயிர்துறந்தார் என்றும், புனித யூதா தடியால் அடித்துக் கொல்லப்பட்டார் என்றும் பாரம்பரியம் கூறுகிறது. இவர்களின் மறைச்சாட்சியம் இயேசு கிறிஸ்துவே கட்டிடத்தின் மூலைக்கல் என்பதற்கு சான்று பகர்வதில் அசைக்க முடியாத உறுதியையும், இஸ்ரயேலின் எல்லைகளைக் கடந்து கிறிஸ்தவ நம்பிக்கையை பரப்புவதில் அவர்கள் ஆற்றிய முக்கியப் பங்கையும் எடுத்துக்காட்டுகிறது.
நமது கத்தோலிக்க மரபில் புனித யூதா நம்பிக்கையற்ற சூழல்களில் நம்பிக்கையின் அடையாளமாகவும், கடினமான சூழ்நிலைகளில் உதவி வேண்டி மன்றாடப்படும் புனிதராகவும் போற்றப்படுகிறார். இவர்களின் விழா ஆண்டுதோறும் அக்டோபர் 28-ம் திகதி கொண்டாடப்படுகிறது. இவர்கள் இருவரும் தங்கள் வாழ்வாலும் மறைச்சாட்சியத்தாலும், கிறிஸ்துவின் மீது கொண்ட நம்பிக்கையில் உறுதியாக நிலைத்திருக்க நமக்கு முன்மாதிரியாக விளங்குகிறார்கள்.
இறைவேண்டல்.
அன்பான இயேசுவே, புனித சீமோன் மற்றும் புனித யூதா திருத்தூதர்களைப் போல, உம்மீது ஆழமான நம்பிக்கையும் உறுதியான அன்பும் கொண்டிருக்க எனக்கு அருள்புரிவீராக. ஆமென்.
ஆர்.கே.சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் திருவிவிலிய மையம்
+6 0122285452
