மனிதநேயம் இன்றி உண்மை வழிபாடு இல்லை! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

பொதுக்காலம் 30-ம் வாரம்-திங்கள்
26 அக்டோபர் 2026
  
எபேசியர் 4: 32- 5: 8
லூக்கா 13: 10-17
 


மனிதநேயம் இன்றி உண்மை வழிபாடு இல்லை!


முதல் வாசகம்.


பவுல் அடிகள் தொடர்ந்து,   எபேசியர் (நாம்) கிறிஸ்துவைப் போல அன்பு நிறைந்தவர்களாகவும், மன்னிக்கும் மனம் கொண்டவர்களாகவும், ஒளியின் பிள்ளைகளாகவும் வாழ வேண்டும் என்பதை முன்வைத்து எழுதுகிறார். 

தொடக்கமாக,  நாம் ஒருவருக்கொருவர் தயவாகவும், இரக்கமுள்ளவர்களாகவும் இருந்து, கடவுள் கிறிஸ்துவின் மூலம் நம்மை மன்னித்ததுபோல மற்றவர்களையும் மன்னிக்க வேண்டும் என்கிறார். அடுத்து, கடவுளைப் பின்பற்றுபவர்களாக இருந்து, இயேசு கிறிஸ்து நம்மீது அன்புகூர்ந்து தம்மையே நமக்காக அர்ப்பணித்ததுபோல நாமும் அர்ப்பணிப்புடன்  வாழ வேண்டும் என்கிறார்.

மேலும்,  பாலியல் ஒழுக்கக்கேடு, அசுத்தமான செயல்கள், பேராசை, தகாத பேச்சு போன்றவற்றைத் தவிர்த்து, நன்றியுள்ளவர்களாக வாழ வேண்டும் என்றும்  இத்தகைய தீய செயல்கள் கடவுளுடைய விருப்பத்திற்கு எதிரானவை என்றும் குறிப்பிட்டு எழுதுகிறார். 


நிறைவாக,  முன்பு நாம் இருளில் இருந்தோம்; ஆனால் இப்போது ஆண்டவரோடு இணைந்திருப்பதால் ஒளியின் பிள்ளைகளாக இருக்கிறோம். எனவே நன்மை, நீதி, உண்மை ஆகியவற்றை நம் வாழ்வில் வெளிப்படுத்த வேண்டும் என்று இப்பகுதியை முடிக்கிறார் பவுல் அடிகள்.

நற்செய்தி. 


இயேசு ஓய்வுநாளில் ஒரு தொழுகைக்கூடம் போதித்துக்கொண்டிருந்தார். அப்போது பதினெட்டு ஆண்டுகளாகத் தீய ஆவியால் துன்புற்று, நிமிர்ந்து நிற்க முடியாமல் இருந்த ஒரு பெண்ணை அங்கே கண்டார்.


இயேசு அவளைத் தம்மிடம் அழைத்து, “பெண்ணே, உன் நோயிலிருந்து நீ விடுதலை பெற்றாய்” என்று கூறி, அவள்மீது தம் கைகளை வைத்தார். உடனே அவள் நிமிர்ந்து நின்று கடவுளைப் போற்றினாள். ஆனால், ஓய்வுநாளில் இயேசு குணப்படுத்தியதால் தொழுகைக்கூடத் தலைவர் கோபமடைந்தார். அதற்கு இயேசு, ஓய்வுநாளில்கூட மக்கள் தங்கள் கால்நடைகளுக்குத் தண்ணீர் கொடுக்க அழைத்துச் செல்கிறார்கள்; அப்படியிருக்க, பதினெட்டு ஆண்டுகளாகத் துன்புற்ற இந்தப் பெண்ணை விடுவிப்பது தவறா என்று கேட்டு, அந்த தலைவரின் இரக்கமற்ற மனப்பான்மையைச் சுட்டிக்காட்டினார்.
இதைக் கேட்ட இயேசுவின் எதிரிகள் வெட்கமடைந்தனர்; மக்கள் அவர் செய்த மகத்தான செயல்களைக் கண்டு மகிழ்ந்தனர் என்று லூக்கா பதிவுச் செய்துள்ளார்.


சிந்தனைக்கு.


இயேசு அவரைக் கண்டு அருகே கூப்பிட்டு,
“அம்மா, உமது நோயிலிருந்து நீர் விடுவிக்கப்பட்டுள்ளீர்”
என்று கூறி, தம் கைகளை அவர்மீது வைத்தார்.
உடனே அவர் நிமிர்ந்து கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்” ((லூக்கா 13:12,13)

 
கடவுள் நம்மை மன்னித்து அன்புகூர்ந்ததுபோல, நாமும் மற்றவர்களை மன்னித்து அன்புகூர வேண்டும். தீமையை விட்டு விலகி, நன்மையையும் உண்மையையும் கடைப்பிடித்து, இயேசுவின் ஒளியை நம் வாழ்வின் மூலம் வெளிப்படுத்த வேண்டும் என்பதை இயேசு இன்று வலியுறுத்துகிறார்.

நமக்கு அடுத்திருப்பவரின் துன்பத்தைக் கண்டு அலட்சியப்படுத்திகொண்டு, நாம்  இயேசுவின் சீடர்கள் அல்லது கிறிஸ்தவர் என்று மார்த்தட்டிக்கொள்வதால் அடையப்போகும் பலன் ஒன்றுமில்லை. கடவுளின் காதில் பூசுத்த இயலாது.


திருஅவையிலும் சட்டத்திட்டங்கள் உண்டு. ஆனாலும் அவற்றை முறையாகப் பின்பற்றிக்கொண்டு,  கண் முன்னே  துன்பப்படுவோருக்கு இரக்கம் காட்டாமல், அவர்களை உதாசினப்படுத்துவோமானால் நமது கிறிஸ்தவ நம்பிக்கை வாழ்வு போலியாகிவிடும். இயேசு விடுதலை அளிக்கிறார். அவர் உடல் மற்றும் உள்ளத்தின் துன்பங்களிலிருந்து மக்களை விடுவிக்கிறார். இயேசு முழுமனித வளர்ச்சியிலும் விடுதலையிலும்  அக்கறைகொண்டவர். 


நற்செய்தியில், பதினெட்டு ஆண்டுகளாக நிமிர்ந்து நிற்க முடியாமல் துன்பப்பட்ட ஒரு பெண்ணை இயேசு குணப்படுத்தினார். அவளுடைய துன்பத்தைப் போக்கி, அவளுக்கு விடுதலை அளித்தார்.  அவர் குணப்படுத்தியது ஓய்வு நாள் என்பதால் மனிதநேயம் அங்கே கேள்விக்குறியாகியது.  “என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்களல்ல; உங்கள் வழிகள் என் வழிகளுமல்ல”  (ஏசா 55:8) என்கிறார் கடவுள். 


வானம் பூமியைவிட எவ்வளவு உயரத்தில் இருக்கிறதோ, அதேபோலக் கடவுளின் வழிகளும் எண்ணங்களும் மனிதர்களைக் காட்டிலும் மேலானவை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். மனிதர்களின் எண்ணப்படி, ஒரு காரியம் தவறாக தோன்றக்கூடும். ஆனாலும், நல்ல நோக்கத்துடன், இரக்கத்தின் பக்கம் இருந்து செய்யும் போது, கடவுளின் நோக்கமாக அது  நிறைவேறும்.  


முதல் வாசகத்தில், பவுல் அடிகள் நாம் ஒருவருக்கொருவர் தயவாகவும், இரக்கமுள்ளவர்களாகவும் இருந்து, கடவுள் கிறிஸ்துவின் மூலம் நம்மை மன்னித்ததுபோல மற்றவர்களையும் மன்னிக்க வேண்டும் என்கிறார். நல்லது செய்ய நாளும் கிழமையும் கிடையாது. நாளும் கிழமையும் பார்த்து வாழ்வோர் கிறிஸ்தவர் கிடையாது. 

இறைவேண்டல்.


அன்பான இயேசுவே, துன்பப்படுவோரிடம் இரக்கம் காட்டிய உம்மைப் போல  எனக்கு அடுத்திருப்பவரின் துயரத்தை உணர்ந்து, அவர்களுக்கு அன்புடன் உதவுகின்ற நல்ல மனதை எனக்கு அருள்வீராக. ஆமென்.


    
ஆர்.கே.சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் திருவிவிலிய மையம்
+6 0122285452

Tamil Survey Popup Image