இறைவேண்டலால் உலகக் கவலைகளை களையத் தயாரா? | அருட்பணி.குழந்தை இயேசு பாபு | Veritas Tamil

பொதுக்காலம், வாரம் 34 சனி மறையுரை 29.11.2025
மு.வா: தானி:  7: 15-27
ப.பா: தானி (இ) 1: 59-60. 61-62. 63-64
ந.வா: லூக்: 21: 34-36

 இறைவேண்டலால் உலகக் கவலைகளை களையத் தயாரா?

திருவருகைக் காலத்திற்கு மிக அருகாமையில் இருக்கும் நமக்கு இந்நாட்களில் மீண்டும் மீண்டும் கொடுக்கப்பட்டுள்ள நினைவூட்டல் எதுவெனில் இறைமகனை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்பதே. அவ்வாறு தயாராக இருக்க இத்தினங்களில் நாம் என்னென்ன செய்ய வேண்டுமென தியானித்தோம். இன்றைய நற்செய்தி நாம் செய்ய வேண்டிய மற்றொரு முக்கியமான செயலைச் சுட்டிக்காட்டுகிறது. அதாவது நம்முடைய கவலைகளிலே மூழ்கிக் கிடக்காமல் செபத்தால் அவற்றை வென்று ஆண்டவரின் வருகைக்காக நாம் காத்திருக்க வேண்டும் என்பதே அச்செயல்.

மனிதர்களாகப் பிறந்த அனைவருக்குமே வாழ்வில் கவலைகளும் கஷ்டங்களும் வந்துகொண்டேதான் இருக்கின்றன. சிலருக்கோ பிரச்சனைகளே வாழ்க்கையாகிவிடுகிறது. ஒரு துயரத்திலிருந்து மீண்டு வருவதற்குள் அடுத்த பிரச்சினை தலையெடுத்து விடுகிறது. போராடி வெளியே வர முயல்வதிலேயே வாழ்க்கை முடிந்தும் விடுகிறது. இப்பிரச்சனைகளும் கவலைகளும் தான் மனிதனுக்கு தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் அனுபவங்களையும் தருவதாக இருக்கின்றது. அதே வேளையில் பல கவலைகளை மனிதன் தனக்குத் தானே ஏற்படுத்திக்கொள்கிறான்.

உதாரணமாக தீய பழக்கவழக்கங்களால் உடமைகளையும் உறவுகளையும் உழைப்பையும் இழந்து கவலைப்படுகிறான். சுய நல எண்ணங்களால் பிறரைக் காயப்படுத்தி தானும் நிம்மதியை இழக்கிறான். பேராசையால் தன்னிடம் இருப்பதில் நிறைவு அடையாமல் செல்வத்தைத் தேடி ஓடி கிடைக்காத நேரத்தில் கவலை கொள்கிறான். நேரத்தை வீணடித்து வாய்ப்புகளை இழந்து எதிர்காலத்தை எண்ணி வருத்தப்படுகிறான். வீண் ஆடம்பரங்களாலும், பணம் பதவி மோகங்களாலும் பலவித பிரச்சனைகளுக்கு உள்ளாகிறான். இவ்வாறாக உலக மாயைகளுக்குள் சிக்கி தன்னைத் தானே வருத்திக்கொண்டு கவலைகளிலே மூழ்கி நல்லவற்றையும் ஆன்மாவுக்குரிய காரியங்களையும் சிந்திக்கத் தவறி விடுகிறான்.

அன்புக்குரியவர்களே நாம் அனைவருமே இத்தகைய கவலைகளில் அழுந்திக்கிக் கொண்டிருக்கிறோம். இத்தகைய மனநிலை இறைமகனின் வருகைக்கு நம்மைத் தயார் செய்ய முட்டுக்கட்டைகளாகவும் பெரும் சவால்களாகவும்  இருக்கின்றதல்லவா. இவற்றிலிருந்து நாம் வெளிவரவும் மீண்டும் இத்தகைய பிரச்சனைகளில் அல்லது இவை போன்ற உலகக் கவலைகளில் மூழ்காதிருக்கவும் நாம் செய்ய வேண்டிய காரியம் "இறைவேண்டல்". விழிப்புணர்வோடு இறைவனிடம் மன்றாடி நமக்கு நாமே கவலைகளை வருத்திக் கொள்ளாமல் இருக்க நாம் ஒவ்வொருநாளும் முயல வேண்டும். அவ்வாறு முயலும் போது நாம் நினையாத நேரத்தில் வரவிருக்கும் இறைமகனை ஏற்க நாம் தயாராக இருக்க முடியும். இறைவேண்டலால் உலகக் கவலைகளைக் களையத் தயாரா?

 இறைவேண்டல்
அன்பு இயேசுவே! விழிப்பாயிருந்து செபிக்கக் கற்றுக்கொடுத்தவரே! நாங்கள் இறைவேண்டலால் உலகக்கவலைகளை வெல்லவும் உம் வருகைக்காக தயாராக இருக்கவும் உதவி புரியும். ஆமென்.

Tamil Survey Popup Image