அள்ளிக் கொடுத்து வாழ்பவர் நெஞ்சம் ஆனந்தப் பூந்தோப்பு!| ஆர்.கே. சாமி | VeritasTamil

தவக்காலம் இரண்டாம் வாரம்–வியாழன்

எரேமியா  17: 5-10                                                        

லூக்கா  16: 19-31

அள்ளிக் கொடுத்து வாழ்பவர் நெஞ்சம் ஆனந்தப் பூந்தோப்பு!

முதல் வாசகம்.

முதல் வாசகத்தில், இறைவாக்கினர்  எரேமியா, நமது பற்றுறுதியானது (trust)  மனிதரகள் மீதோ அல்லது உலக செல்வங்கள் மீதோ மையமிட்டிருந்தால்  நாம் சபிக்கப்பட்டவர் என்கிறார். மாறாக, ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர் பேறுபெற்றோர் என்றும்,  ஆண்டவரே அவர்களது பற்றுறுதி என்றும், அவர்கள் நீர் அருகில் நடப்பட்ட மரத்துக்கு ஒப்பாவர் என்கிறார்.
ஆண்டவரில் பற்றுறுதி கொள்வோர்  வறண்ட மற்றும் துன்ப காலங்களிலும்  மிகுதியாக விளைச்சலைப் பெறுவர் என்கிறார். 

நற்செய்தி.

நற்செய்தியில் இயேசு ‘செல்வரும் இலாசரும்’ என்ற உவமையைக் கொண்டு இலாசர் மற்றும் ஒரு செல்வந்தர் ஆகியோரின வாழ்வை உதாரணம் காட்டி, இருவரின் மரணத்திற்குப் பின் கிடைத்த வாழ்வை விவரிக்கிறார்.  இவ்வுவமையில் பணத்தின்மீது பற்றுக்கொண்டிருந்த செல்வந்தன் இறந்தபின் நரகம் செல்கின்றான்; ஆண்டவர்மீது பற்றுக்கொண்டிருந்த இலாசரோ விண்ணகம் செல்கின்றார்.
நிறைவாக, செல்வந்தன் நரகத்தில் அனுபவித்த துன்பத்தின் கொடுமையைத் தாங்க முடியாமல் இலாரசரின் உதவியை நாடுகிறார்.

சிந்தனைக்கு.

‘ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்களுக்கேற்பக் கடவுள் கைம்மாறு செய்வார் (உரோ 2: 6) என்பது மறுக்க முடியாத உண்மை. நமது  மிகவும் கடினமான சூழ்நிலைகளில்  கடவுள் மீது கொண்ட பற்றுறுதி நம்மை விடுக்கும். உலகக் கண்ணோட்டத்தில் நாம் செல்வத்தை நம்பியிருப்பது எளிது. நாம் கடினமாக உழைத்தால், நமது உழைப்பின் பலனை அனுபவிக்க முடியும் என்று நாம் நம்புகிறோம். அதில் தவறுமில்லை. ஆனால், அதில் பற்றுறுதிக்  கொண்டு கடவுளில் நம்பிக்கை இழப்பதுதான் நாம் செய்யும் பெரும் தவறாகும். உலகில் எல்லாம் கைவிட்டுப் போனாலும் கூடவே இருப்பதும் கைக்கொடுப்பதும்  கடவுள் மீது கொண்ட பற்றுறுதிதான் (Trust).

இன்றைய நற்செய்தி இலாசரும் செல்வந்தரும்  பற்றிய உவமையில் இயேசு, செல்வம் மற்றும் வறுமை, விண்ணரசு மற்றும் நரகம், இரக்கம் மற்றும் அலட்சியம் ஆகியவற்றின் வேறுபாடுகளின் ஒரு வியத்தகு உண்மையை விவரிக்கிறார்.   இலாசர், ஏழையாக மட்டுமல்லாமல், பணக்காரரின் வீட்டின் வாசலில் கையேந்தி நின்றார். அவரது புண்களை நக்கிய நாய்கள் அவர் தனக்காக வாங்கிய சிறிய ரொட்டியையும் தின்றிருக்கலாம்.  அக்காலத்தில் நாய்   ஒருவரை அவமதிக்கப்  பயன்படுத்தப்பட்ட விலங்காகும். இன்றும் அந்த எண்ணத்தில் மாற்றமில்லை. அந்த செல்வந்தன் அந்த நாய்களையாவது விரட்டியிருக்கலாம்.

உண்மையில், இயேசு குறிப்பிட்ட  அந்த செல்வந்தர் தன்னையும் தனது செல்வத்தையும் தாண்டி  விண்ணக வாழ்வைப்பற்றி சிந்திக்கத் தவறிவிட்டார்.   செல்வச் செருக்கு அவரது மனதை இருளாக்கியது. இவ்வுலகம்தான் அவருக்கு ‘சொர்க்கம்’ என்று எண்ணிவிட்டார். ஆபிரகாம் கூறிய, ‘மகனே, நீ உன் வாழ்நாளில் நலன்களையே பெற்றாய்; அதே வேளையில் இலாசர் இன்னல்களையே அடைந்தார். அதை நினைத்துக்கொள். இப்பொழுது அவர் இங்கே ஆறுதல் பெறுகிறார்; நீயோ மிகுந்த வேதனைப்படுகிறாய்’ என்பது நாளை நமக்கும் பொருந்தும். 

எனவே, காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள வேண்டும். காலத்தைக் கடத்தினால், அந்த செல்வந்தன் அனுபவித்த நரக வேதனையை நாமும் அனுபவிப்போம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.


இறைவேண்டல்.

இரக்கத்தின் ஆண்டவரே, நீர் எமக்குக் கொடுத்ததை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் இதயத்தை எனக்கு  அருள்வீராக. ஆமென்.

ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452