அன்புடையவரே ஒளியில் நடப்பர்! | அருட்பணி.குழந்தை இயேசு பாபு | Veritas Tamil

கிறிஸ்து பிறப்பின் எண்கிழமையில் 5ஆம் நாள் 
முதல் வாசகம்
மு.வா: 1 யோவா:  2: 3-11
ப.பா: திபா: 96: 1-2. 2-3. 5-6
ந.வா: லூக்: 2: 22-35

 அன்புடையவரே ஒளியில் நடப்பர்! 

அன்பே பிரதானம் சகோதர அன்பே பிரதானம் என்ற பழைய பாடலை நாம் அனைவருமே கேட்டிருப்போம். சகோதர அன்பு என்பது கடவுள் அன்பின் வெளிப்பாடு. ஒருவர் மற்றவர் மேல் அன்பு கொண்டு வாழ்வது நம் வாழ்வை பொருளுள்ளதாக்கும். நிறைவுள்ளதாக்கும்.கிறிஸ்து பிறப்பு காலத்தில் நாம் அனைவரும் இருக்கிறோம். கிறிஸ்மஸ் என்பதே அன்பின் விழாதான். கடவுள் நம்மீது கொண்டுள்ள அன்பின் சாட்சிதான் பிறந்த குழந்தை இயேசு. நம்மிடமுள்ள அன்பை நாம் எவ்வாறு மெய்ப்பிக்கப் போகிறோம்.

 இன்றைய முதல் வாசகம் சகோதர சகோதரிகளிடையேயுள்ள அன்புதான் ஒருவரை ஒளியில் வழிநடத்தும். சகோதர சகோதரிகளை அன்பு செய்யாதவர் பொய்யர். இருளில் நடப்பவர். கடவுளை அறிந்திராவதர் என்ற ஆழமான சிந்தனைகளைத் தருகிறது. "தம் சகோதரர் சகோதரிகளிடம் அன்பு கொள்வோர் ஒளியில் நிலைத்திருக்கின்றனர்; இடறி விழ வைக்கும் எதுவும் அவர்களிடம் இல்லை.
தம் சகோதரர் சகோதரிகளை வெறுப்போர் இருளில் இருக்கின்றனர்; இருளில் நடக்கின்றனர். அவர்கள் எங்குச் செல்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. ஏனெனில் இருள் அவர்களுடையக் கண்களைக் குருடாக்கிவிட்டது. "என்ற யோவானின் வாக்குகள் மேற்கூறிய கருத்துக்களை நமக்கு மிகத் தெளிவாக விளக்குகின்றன.

ஒருவரை ஒருவர் அன்பு செய்யுங்கள் என்பது தான் கடவுள் அளித்த கட்டளை. மோசேவழி தரப்பட்ட பத்துக்கட்டளைகளும் அதைத்தான் கூறுகின்றன.கிறிஸ்து தந்த புதிய கட்டளையும் அதையே உறுதிப்படுத்துகின்றது. இந்த சகோதர அன்பு தான் உலகை வழிநடத்தும் ஒளி என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

நற்செய்தி வாசகத்தில் சிமியோன் குழந்தை இயேசுவைக் கையில் ஏந்தி அவரே அனைவருக்கும் ஒளி எனக் கூறுகிறார். ஆம் இயேசு அன்பின் சாட்சி. அன்பே கடவுள் என்போம். அந்த கடவுளின் உருவமே அவர். அந்த அன்புதான் நம்மை வழிநடத்தும் ஒளி. சகோதர அன்புக்கு தன்னையே தந்து அவ்வாறே நாமும் வாழ வழிகாட்டிய ஒளி நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து? 
நாம் ஒளியில் நடக்க வேண்டுமா? அதற்கு சகோதர அன்பு நம்மிடம் வேண்டும்.

அன்பு தான் உலகை ஆள வேண்டும். ஏனெனில் கடவுள் அன்பாய் இருக்கிறார். கடவுளிடமிருந்து பெற்ற அன்பை நான் மட்டும் சுவைக்காமல்,  அனைவரும் சுவைத்திட தேவையான அருளை வேண்டுவோம். மனித  சேவையில் புனிதம் கண்டு மனிதத்தை அன்பு செய்து நம்மை தேடி வந்த பாலன்  இயேசுவை நாமும் அன்பு செய்ய முயற்சி செய்வோம்.

 இறைவேண்டல்
வல்லமையுள்ள இறைவா! உம் மகன் பாலன் இயேசு இந்த உலகத்தில் கொண்டு வந்த அன்பை நாங்கள் முழுமையாக உணரவும் அந்த அன்பை அனைவரிடத்திலும் கொடுக்கவும் நல்ல மனநிலையை தாரும். ஆமென்.

Tamil Survey Popup Image