நமது உள்ளத்தை இறையரசு ஆட்கொள்ளட்டும்! | ஆர்கே. சாமி | Veritas Tamil

20 ஆகஸ்டு 2025
பொதுக்காலம் 20ஆம் வாரம் – புதன்
நீதித்தலைவர்கள் 9: 6-15
மத்தேயு 20: 1-16
நமது உள்ளத்தை இறையரசு ஆட்கொள்ளட்டும்!
முதல் வாசகம்.
முதல் வாசகம், இஸ்ரயேலர்களில் சிலர் தங்கள் அண்டை நாடுகளைப் போல் ஓர் அரசரைப் பெற எப்படி முயற்சி செய்கிறார்கள் என்பதை விவரிக்கிறது, ஆனால் யோத்தாம் சொன்ன உவமையிலிருந்து தெளிவாகத் தெரிகிறது, கடவுள் இதை விரும்பவில்லை.
முதல் வாசகத்தில், இஸ்ரயேலர்கள் அண்டை பழங்குடியினரையும் நாடுகளையும் கவனிதுதி, அவர்களைப்போல் தங்களுக்கென்று அரசர்கள் வேண்டும் என விரும்பியதன் பலனாக, செக்கேம் மற்றும் பெத்மில்லோவின் குடிமக்கள் அனைவரும் செக்கேமில் ‘சிலைத் தூண் கருவாலி’ மரத்தடியில் அபிமெலக்கை அரசனாக ஏற்படுத்தினர். கடவுளே அவர்களின் ஒரே அரசர் என்பதை மறந்துவிட்ட நிலையில், யோத்தாம் என்ற நீதிபதி ஒரு மலையில் (கெரிசிம் மலை) ஏறி, ஓரு உவமையைக் கொண்டு, செக்கிம் மக்களை எச்சரிக்கிறார். இவர் அபிமெலேக்கின் ஒன்றுவிட்ட சகோதரர்.
அவர் சொன்ன உவமையில் (கதையில்) மரங்கள், தங்களுக்கு ஓர் அரசனைத் திருப்பொழிவு செய்யப் புறப்பட்டன. முதலில் ஆலிவ் மரம் தொடர்ந்து அத்தி மரம் மற்றும் கொடி அனைத்தும் அரசனாக மறுத்தவிட்டன. ஏனெனில் அவை எதற்காகப் படைக்கப்பட்டனவோ, அந்த வேலையை மட்டும் செய்ய வேண்டும் என்றன.
ஆனால், முட்கள் நிறைந்த புதரான பக்தோர்ன் மட்டும் மரங்களை ஆள ஒப்புக்கொகொண்டு மற்ற மரங்களுக்கு கடுமையான சூழலை ஏற்படுத்துகிறது.
இந்த உவமையில் வெளிப்படுத்தப்பட்டவாறு, கடவுளின் திட்டத்தின்படி இல்லாத அரசர்களைத் தேர்ந்தெடுத்தால் அவர்களுக்கு பெரும் துன்பம் வரப்போவதாக யோத்தாம் முன்னறிவிக்கிறார்.
நற்செய்தி.
இன்றைய நற்செய்தி, திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்ய பகல்நேரக் வேலையாள்களைத் தேடும் திராட்சைத் தோட்ட உரிமையாளரைப் பற்றிய இயேசுவின் உவமையாகும். உரிமையாளர் நாளின் முதல் மணி நேரத்தில் (காலை 6 மணி) வெளியே சென்று தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி, அவர்களுக்கு நியாயமான கூலி (ஒரு நாள் ஊதியம்) தருவதாக உறுதியளிக்கிறார்.
அடுத்து தொடர்ந்தாற் போல், மூன்றாவது மணி நேரத்தில் (காலை 9 மணி), ஆறாவது மணி நேரம் (மதியம் 3 மணி), ஒன்பதாவது மணி நேரம் (பிற்பகல் 5 மணி) மற்றும் இறுதியாக பதினொன்றாம் மணி நேரத்தில் (மாலை 5 மணி) அதிக வேலையாள்களை தோட்டதிற்கு அனுப்புகிறார்.
மாலை 6:00 மணிக்கு, உரிமையாளர் மேற்பார்வையாளரிடம் ஒரு மணி நேரம் மட்டுமே வேலை செய்தவர்களுடன் தொடங்கி தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கச் சொல்கிறார். அவர்களுக்கு முழு நாள் ஊதியம் கிடைக்கிறது. சுட்டெரிக்கும் வெயிலில் நாள் முழுவதும் வேலை செய்தவர்களுக்கும் பன்னிரண்டு மணி நேரம் வேலை செய்தவர்களுக்கும் அதிக ஊதியம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். இருப்பினும், அனைவருக்கும் ஒரு நாள் கூலி வழங்கப்படுகிறது. முதலில் பணியமர்த்தப்பட்ட பகல்நேரக் கூலிகள் உரிமையாளரிடம் தனது நியாயமற்ற நடவடிக்கைகள் குறித்து புகார் கூறுகிறார்.
குறைவாக வேலை செய்பவர்களிடம் அவர் தாராளமாக நடந்து கொண்டார். இது தோட்ட உரிமையாளர் செய்த அநீதியாகக் கருதப்பட்டது.
சிந்தனைக்கு.
இன்றைய வாசகங்களைப் பற்றி சிந்திக்கும்போது, நான் எதிர்ப்பார்ப்பதுபோலதான் கடவுளும் நடந்துகொள்ள வேண்டும் என்று நான் எதிர்ப்பார்கிறேன் என்பதை உணர்கிறேன். முதல் வாசகத்தில் இஸ்ரயேலர் புறவினத்தாரைப்போல, அவர்களுக்கும் கடவுள் ஓர் அரசரை ஆசீர்வதிப்பார் என்று எதிர்பார்க்கிறார்கள், ஆனால் அவர்கள் ஓர் மண்ணக அரசரால் ஆளப்படுவதை கடவுள் விரும்பவில்லை. ஆனாலும் அனுமதிக்கிறார்,
கடவுள் ஒருபோதும் அநீதியானவர் என்று குற்றம் சாட்ட முடியாது. ஆனாலும், கடவுளின் இரக்கமும தாராள மனப்பான்மையும் சில சமயங்களில் நம்மை வியக்க வைக்கிறது. கடவுள் சிலரை நம்மை விட மேலாக நடத்துவது போல் தெரிகிறது. ஆனால் கடவுளின் தாராள மனப்பான்மையைப் பற்றி புகார் செய்ய நாம் யார்? நாம் நமதுத் தகுதிக்கு அதிகமாக கடவுளிடமிருந்து பெற்றுள்ளோம் என்பதை மறுப்பதற்கில்லை.
இயேசுவின் உவமையில், முதலில் வேலைக்கு அமர்த்தப்பட்டவர்கள், ஒரு மணி நேரம் வேலை செய்தவர்களுக்கு அதே கூலி வழங்கப்படுவது நியாயமற்றது என்று நினைத்து வருத்தப்பட்டனர். ஆனால் நில உரிமையாளர், என் சொந்தப் பணத்தை வைத்து என் விருப்பப்படி செய்ய எனக்கு சுதந்திரம் இல்லையா? நான் தாராளமாக இருப்பதால் நீங்கள் பொறாமைப்படுகிறீர்களா?” என்று முடிக்கிறார்.
பொறாமை விரைவில் பகையாக மாறக்கூடும். இதன் பொருள், நாம் மற்றவர்களிடம் தன்னலமற்ற தாராள மனப்பான்மையைக் கொண்டிருக்கவில்லை என்பதாகும். கடவுள் மற்றொருவரை ஆன்மீக செல்வங்களால் ஆசீர்வதிப்பதை கண்டால், நாம் உள்ளத்தில் கடவுளைப் போற்ற வேண்டும். அது பின்னர் நமக்கே பெரும் ஆசீராக மாறும். பகை, பொறாமை இவற்றை வெளிப்படுத்தி வாழ்பருக்கு அவை வட்டியும் முதலுமாக அவரையே வந்து சேரும் என்கிறார் சுவாமி விவேகானந்தர்,
நிறைவாக, ‘உங்கள் உள்ளத்தில் பொறாமையும் மனக்கசப்பும் கட்சி மனப்பான்மையும் இருக்குமானால் அதைப்பற்றிப் பெருமை பாராட்ட வேண்டாம்’ (யாக் 3:14) என்று புனிய யாக்கோப்புவின் அறிவுறுத்தலை மனதில்கொள்வோம். முதல் வாசகத்தில் கடவுளுக்குப் பதிலாக அரசர்கள் வேண்டும் என்று அடம்பிடித்த இஸ்ரயேலர், இறுதியில் அரசர்களாலேயே பிளவுப்பட்டு சீரழிந்தனர். ஆகவே, நம்மை கடவுளின் அரசுக்கு உட்டபடுத்த வேண்டும். எனவேதான் ‘உமது அரசு’ வருக என்று இறைவேண்டல் செய்ய இயேசு நம்மைப் பணித்தார். நமது உள்ளத்தை அலகை ஆட்சிக்கு உட்படுத்தினால் பொறாமைதான் மிஞ்சும்.
கடவுளும் எளிய மனதும் நம் வாழ்வின் மையமாக இருக்கட்டும். "ஆமை புகுந்த வீடு உருப்படாது" என்ற பழமொழி ஒன்று உண்டு. இதில் ‘ஆமை’ என்பதை பொறாமையாக நாம் எடுத்துகொள்ளலாம். பொறைமையால் அன்பாக, முன்மாதிரியாக வாழ்ந்த பல கூட்டுக் குடும்பங்கள் பிளவுப்பட்டுப் போயின.
இறைவேண்டல்.
ஆண்டவரே, நன்றியுணர்வை விட பொறாமையால் நான் செயல்பட்ட நேரங்களுக்காக, என்னை மன்னிக்கவும் தேற்றவும் விரைவீராக. ஆமென்.
ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
