நமது பலவீனமே சாத்தானின் ஆயுதம்!| ஆர்.கே. சாமி | VeritasTamil

புனித வாரம் – செவ்வாய்
எசாயா 49: 1-6
யோவான் 13: 21-33, 36-38
நமது பலவீனமே சாத்தானின் ஆயுதம்!
முதல் வாசகம்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல்வாசகம், துன்புறும் ஊழியனைப் பற்றி வரும் நான்கு பாடல்களில் இரண்டாவது பாடலாகும். இப்பாடலில் ஆண்டவர் கடவுள், மெசியாவை முன்னிட்டு, “நீயே என் ஊழியன், இஸ்ரயேலே! உன் வழியாய் நான் மாட்சியுறுவேன்” என்கின்றார்.
"தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களை" கடவுளுடன் நெருங்கிய உறவுக்குள் கொண்டுவருவதற்கான பணியை நிறைவேற்றுவதற்காக, பிறப்பதற்கு முன்பே துன்புறும் ஊழியன் கடவுளால் அழைக்கப்பட்டதை இவ்வாசகம் நமக்கு நினைவூட்டுகிறது.
நற்செய்தி.
இந்த நற்செய்தி புனித யோவானின் கடைசி இராவுணவு விவரிப்பிலிருந்து எடுக்கப்பட்டது. இயேசு தம்முடைய திருத்தூதர்களுடன் கூடியிருக்கிறார். திருத்தூத்காகவும் தம்முடைய நெருங்கிய சீடர்களாகவும் விளங்க சிறப்பு உறவுக்கு அழைத்தவர்களை அவர் பார்க்கும்போது, அவர் மிகுந்த அன்பால் தூண்டப்படுகிறார். அவர் தேர்ந்தெடுத்தவர்களில் ஒருவரால் காட்டிக் கொடுக்கப்படப் போகிறார் என்பதை அவர் அறிந்திருந்தார். தான் செய்யப் போவதைச் செய்யவும், அதை விரைவாகச் செய்யவும் யூதாசை அவர் அனுப்புகிறார்.
சிந்தனைக்கு.
இன்றைய வாசகங்களில் என்னைத் கவர்வது இயேசுவின் தேர்வுதான். இயேசு தனது சீடர்களாக அவர் விரும்பியவர்களைத் தேர்ந்தெடுத்தார். அவர்களே அவருக்கு நம்பகத்தன்மையுடன் செயல்பட வேண்டியவர்கள். இருப்பினும், பன்னிரண்டு பேர் கொண்ட இந்த குழுவில், ஒருவர் அவரைக் காட்டிக் கொடுக்க விழைவார். அடுத்து, தலைவராக நியமிக்கப்படுபவர் இயேசுவுடனான தனது உறவை மறுக்கவுள்ளார். மற்ற பத்து பேரில் ஒன்பது பேர் சிதறி ஒளிந்து கொள்வார்கள். ஒருவர் மட்டுமே சிலுவையின் அடியில் நிற்கும் அளவுக்கு துணிவோடு உடனிருப்பார். இயேசுவின் அன்னையை திருஅவையின் அன்னையாகப் பெற்றுக்கொள்வார்.
இதைப் பற்றி சிந்திக்கும்போது, எனக்குப் ஆச்சரியம் மேலிடுகிறது. இயேசு தனக்கு முற்றிலும் உண்மையாக இருக்கப்போகும் நபர்களைத் தேர்ந்தெடுத்திருக்கலாம். ஆனாலும், அவர் அவருடனான உண்மை எதிர்பார்ப்புகளுக்குத் தகுதியற்றவர்களாக இருப்பார்கள் என்று அறிந்தும் அவர்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், நம்மையும் அவ்வாறே அவர் தேர்ந்தெடுத்துள்ளார் என்பது தெளிவாகிறது. நமது பலவீனங்கள், குறைபாடுகள் அனைத்தையும் அறிந்த அவர், “நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன்” (யோவான் 15:16) என்கிறார். இத்தகைய உலகத் தலைவர்கள் எவராவது உண்டா?
ஆண்டவர் இயேசு, நமது பலவீனத்திலும் கனிதரும் செயல்களை நாம் ஆற்ற வேண்டும் என்று விரும்புகிறார். யூதாசின் துரோகம் வேண்டுமென்றே, திட்டமிட்டு செய்யப்பட்டது. அவர் மிகவும் கெட்டவரகாக் கருதப்படுகிறார். பேதுரு பலவீனமான ஒரு தருணத்தில், செய்ததை அவர் ஒருபோதும் செய்ய விரும்பவில்லை. பேதுருவின் நம்பிக்கையின் வலிமையையும் அவரது தீர்மானத்தின் பலவீனத்தையும் இயேசு அறிந்திருக்கிறார். அவர் ஒரு அவசரக் குடுக்கை மற்றும் முந்திரி கொட்டை என்றும் பலரால் அழைக்கப்படுவதுண்டு. அவர் பலவீனத்தாலும் கோழைத்தனத்தாலும் உணர்ச்சிவசப்பட்டு செயல்பட்டார். பின்னர் மனம் வருந்தி மன்னிப்புக்கு மன்றாடுகிறார்.
நம் அனைவருக்கும் பலவீனங்கள் உள்ளன. ஆனால் கடவுள் பலவீனமானவர்களைப் பயன்படுத்த விரும்புகிறார். உண்மையில், நமக்கு உடல், உணர்ச்சி, அறிவுசார் மற்றும் ஆன்மீகம் போன்ற நிலைகளில் ஏராளமான குறைபாடுகள் உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், நமது பலவீனத்தை மேற்கொள்ள நாம் என்ன செய்கிறோம் என்பதுதான் மிக முக்கியம். பல சந்தர்ப்பங்களில் அவற்றை நியாயப்படுத்துகிறோம், மறைக்கிறோம்.
பலவீனங்கள் இருந்தபோதிலும், நம்மையும் கடவுள் ஏற்று அவரது பணிக்கு அழைத்த வண்ணம் உள்ளார் என்பதை நாம் உணர்ந்தால் நாமும் புனித பவுல் போல் கடவுளின் பயனுள்ள கருவிகளாகலாம் என்பது திண்ணம்.
இறைவேண்டல்.
என்னையும் உமது சீடராக அழைத்த ஆண்டவரே, இந்த புனித வாரத்தில் என்னையும் என் பலவீனங்களில் இருந்து மீட்டு, உமது பணியில் நிலைநிறுத்த உமது தயவுக்கு மன்றாடுகிறேன். ஆமென்.
ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
