விடாமுயற்சியும் மனத்தாழ்மையும் இறைவேண்டலின் வெற்றி. | ஆர்.கே. சாமி | VeritasTamil

10 அக்டோபர் 2024,                                                                                           பொதுக்காலம் 27ஆம் வாரம் – வியாழன்

கலா 3: 1-5
லூக்கா 11: 5-13

 
விடாமுயற்சியும் மனத்தாழ்மையும் இறைவேண்டலின் வெற்றி. 


முதல் வாசகம்.

முதல் வாசகத்தில் பவுல் அடிகள், வெளிப்படையாக, அறிவிலிகளான கலாத்தியரே, உங்களை மயக்கியோர் யார்? இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டவராய் உங்கள் கண்முன் படம் பிடித்துக் காட்டப்படவில்லையா? என்கிறார். அவர்களை ‘அறிவிலிகள்’ என்று திட்டுகிறார். கலாத்தியாவில்  புறவினத்தார்  பவுல் அடிகள் வழியாக இயேசுவைப் பற்றி கேள்விப்பட்டு, நம்பினார்கள், தூய ஆவியானவரும்  அவர்களில் பொழியப்பட்டார்.   
அவர்களுக்குச்  சட்டம் தேவையில்லை. ‘நீங்கள் தூய ஆவியை எவ்வாறு பெற்றுக் கொண்டீர்கள்? திருச்சட்டம் சார்ந்த செயல்களாலா? அல்லது நற்செய்தியைக் கேட்டு நம்பிக்கை கொண்டதாலா?’ என்ற கேள்வியை முன்வைக்கிறார்.
எருசலேமில் இருந்து கலாத்தியாவில் பவுல் அடிகளின் நற்செய்திக்கு எதிராகப் போதித்து மக்களை குழப்பிய, திருச்சட்டத்தில் இன்னும் நம்பிக்கை கொண்டவர்களுக்கு எதிராக உண்மை படிப்பினையை பவுல் தெளிவுப்படுத்த முயல்கிறார்

நற்செய்தி.

நற்செய்தியில், கடவுளின் பிள்ளைகளாக அழைக்கப்பட்டவர்களுக்கு கடவுள் சிறந்ததைக் கொடுப்பார் என்று இயேசு தம் சீடர்களுக்குத் தெரிவிக்கிறார்,    எனவே, தேவையானதை கடவுளிடம் “கேளுங்கள், தொடர்ந்து கேளுங்கள், . . தேடி தேடிக்கொண்டே இருங்கள், . . .தட்டுங்கள், தொடர்ந்து தட்டுங்கள் என்று இறைவேண்டலில் இருக்க வேண்டிய உறுதியைக் கற்றுத் தருகிறார்.
இயேசு தம்முடைய சீடர்களை கடவுளுடன் தொடர்ந்து உறவில் இருப்பதற்குச் சொல்வது மட்டுமல்லாமல், உலகில் உள்ள எந்தவொரு பெற்றோரும் தனது சொந்த குழந்தைகளைப் பராமரிப்தைவிட விண்ணகத் தந்தை  அதிக அன்பானவர் என்பதையும் அவர்களுக்குத் தெரிவிக்கிறார். .  கடவுள் ஒவ்வொருவருக்கும் சிறந்ததையே அளிக்க விரும்புகிறார் என்பதை வலியுறுத்துகிறார்.

சிந்தனைக்கு.

இன்றைய வாசகங்களைப் பற்றி  சிந்திக்கையில், கடவுளின் அன்பும் அரவணைப்பும் மேலோங்கி நிற்கின்றன. ஆண்டவராகிய  இயேசு நம் கவனத்தை மீண்டும் மீண்டும் கடவுளிடம் திருப்ப வேண்டும் என்று எதிர்பார்க்கிறார் என்பதும்  நமக்கு எது சிறந்தது என்பதை கடவுள் அறிந்திருக்கிறார் என்பதும் வெள்ளிடைமலையாகிறது. முதல் வாசகத்திலும் பவுல் அடிகள் சடங்குச் சம்பிரதாயங்களையும் திருச்சட்டங்களையும் பற்றிக்கொண்டு இருப்பதைவிட, தூய ஆவியாரின் வழிகாட்டுதலில் கடவுளோடு ஒன்றித்து, அவரது அன்புறவில் வாழ்வது சிறந்தது என்கிறார். 
இயேசு தம் சீடர்களுக்கு "விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே " என்ற இறைவேண்டலை மாதரியாகக் கொடுத்ததும் ஓர் உவமையைச் சொல்கிறார். இந்த உவமையின் மூலம் இறைவேண்டலில் இருக்க வேண்டிய விடாமுயற்சியையும் நம்புக்கையையும் எடுத்தியம்புகிறார்.  
கடவுளின் நற்குணத்தையும் தாராள மனப்பான்மையையும் ஒருபோதும் சந்தேகிக்காமல் விடாமுயற்சியுடன்  கடவுளிடம் இயேச கிறிஸ்து வழியாக மன்றாடும்போது,  கடவுள் நன்மையான அனைத்தையும் நம்மீது பொழிவார்.  ஆனாலும் நமது இறைவேண்டல் கடவுளின் திருவுளத்திக்கு ஏற்ப இருக்க வேண்டும்.  உலகப் பொருளாசைக்காக கடவுளிடம் மன்றாடுவது மடமை.
"விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே " என்ற இயேசு கற்பித்த இறைவேண்டலில் காணப்படும் ஏழு விண்ணப்பங்களில் ஒன்று "உமது அரசு வருக, உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவதுப்போல மண்ணுலகிலும்  நிறைவேறுக" என்பதாகும்.   இந்த மன்றாட்டு நாம் கடவுளில் சரண்டைவதை உணர்த்துகிறது. கடவுளில் நம்மை முழுமையாக ஒப்புக்கொடுக்காத இறைவேண்டல் பலனளிக்காது. அன்னை மரியா, “நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்” (லூக்கா 1:38) என்று கடவுளின் திருவுளத்திற்கு தன்னை முழுமையாக ஒப்புக்கொடுத்தார். அவரில் மனத்தாழ்மை இருந்தது.
ஆகவே,  கடவுளிடம் மிகுந்த ஆர்வத்துடனும் விடாமுயற்சியுடனும் இறைவேண்டல் செய்வதன் முக்கியத்துவத்தை அறிந்துணர வேண்டும். இறைவேண்டலில் புனித பவுல் முதல் வாசகத்தில்  குறிப்பிடுவதுபோல் நாம் அறிவிலிகளாகவும்,  கண்மூடித்தனமாகவும்  இருக்கக் கூடாது. இறைவேண்டலில் மனத்தாழ்மை இன்றியமையாதது. 
‘நன்றியோடு கூடிய இறை வேண்டல், மன்றாட்டு ஆகிய அனைத்தின் வழியாகவும் கடவுளிடம் உங்கள் விண்ணப்பங்களைத் தெரிவியுங்கள்’ என்று வலியுறுத்தும்  பவுல் அடிகளின் படிப்பினையை மனதில் கொள்வோம். (பிலி 4:6)

இறைவேண்டல்.

எங்களுக்கு இறைவேண்டல் செய்யக் கற்றுத்தந்த ஆண்டவரே, எனது இறைவேண்டலில் உண்மையும். நேர்மையும், மனத்தாழ்மையும்  நான் கொண்டிருக்க அருள்புரிவீராக. ஆமென்.

 
ஆர்.கே. சாமி (மலேசியா)                                                                              ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்                                                                                +6 0122285452