இயேசுவில் நம்பிக்கையே உயிர்ப்பில் நம்பிக்கை! | ஆர்.கே. சாமி | VeritasTamil

5 ஜூன் மே 2024  
பொதுக்காலம் 9ஆம் வாரம் - புதன்

2 திமொத்தேயு 1: 1-3; 6-12  
மாற்கு 12: 18-27
 

இயேசுவில் நம்பிக்கையே உயிர்ப்பில் நம்பிக்கை!

 
முதல் வாசகம்.
பவுல் திமொத்தேயுவிடம் பேசுகையில், “தந்தையாகிய கடவுளிடமிருந்தும், ஆண்டவராகிய கிறிஸ்து இயேசுவிடமிருந்தும் அருளும் இரக்கமும் அமைதியும்” திமொத்தேயுவிடம் இருக்க வேண்டும் என்று இறைஞ்சுகின்றார்.  இம்மூன்று பண்புகளும் கடவுளின்  உள்ளார்ந்த குணங்கள் மற்றும் கடவுளைப் பின்பற்ற விரும்புவோருக்கு வழங்கப்படும் வரங்கள் ஆகும்.  

பவுல்  திமொத்தேயுஙின்  மீது  கைகளை வைத்து தூய ஆவியின் வரங்கள்  அவர் மீது வர மன்றாடியதை நினைவுபடுத்துகிறார்.  மேலும், ‘கடவுள் நமக்குக் கோழை உள்ளத்தினை அல்ல, வல்லமையும் அன்பும் கட்டுப்பாடும் கொண்ட உள்ளத்தையே வழங்கியுள்ளார்’ என்றும் திமொத்தேயுவைத் திடப்படுத்துவதோடு,   கடவுளின் வல்லமைக்கேற்ப நற்செய்தியின் பொருட்டு் அவருடன்  துன்பத்தில்  பங்குகொள்ள திமொத்தேயுவை  அழைக்கிகிறார். 

தொடர்ந்து, அவரது கடிதத்தில் இயேசு சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார் என்றும்,  அந்த நற்செய்தியை அறிவிப்பவனாகவும் திருத்தூதனாகவும் போதகனாகவும் பவுல் அடிகள்  ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் திமொத்தேயுவுக்கு தெரியப்படுத்துகிறார்.  

நிறைவாக, நற்செய்தியை அறிவிப்பவனாகவும் திருத்தூதனாகவும் போதகனாகவும் பவுல் அழைக்கப்பட்டதால்தான் அவர்  துன்புறுவதாக  உள்ளத்தில் பொதிந்துள்ள உண்மையைப் பகிர்கிறார்.  

 
நற்செய்தி.


நற்செய்தியில், உயிர்த்தெழுதலில் நம்பிக்கையற்ற  சதுசேயர்கள்,  குடும்பத்திற்கு ஒரு ஆண் சந்ததியை உருவாக்குவதற்காக ஏழு சகோதரர்களை அடுத்தடுத்து மணந்த பெண்ணைப் பற்றி இயேசுவிடம் கேள்வி கேட்கிறார்கள். அவர்களின் கேள்வியாது இ.ச 25: 5- 6-ல் மோசை கூறிய சட்டத்தின் அடிப்படையிலானது.  

ஒருவர் குழந்தைச் செல்வமின்றி தம் மனைவியை விட்டுவிட்டு இறந்துபோனால், அவரைக் கொழுந்தனே மனைவியாக ஏற்றுக்கொண்டு சகோதரருக்கு வழிமரபு உருவாக்கவேண்டும் என்று மோசே வழங்கிய சட்டம் கூறுகிறது.  அதே பெண்ணை மகப்பேறுக்காக ஏழு சகோதரர்களும் ஒருவர்  பின் ஒருவராக மணக்க நேரிட்டால்,   கடைசியாக அப்பெண்ணும் இறந்தாரென்றால், அவர்கள் உயிர்த்தெழும்போது, அவர் அவர்களுள் யாருக்கு மனைவியாக இருப்பார்?  என்று கேட்கிறார்கள். 

 சதுசேயரின் கேள்விக்குப் பதில் அளிக்கையில், இந்த மண்ணக  வாழ்வில் மனிதர் கொண்டிருக்கும் உறவுமுறை போல், இறப்பிற்குப்பின் கிட்டும் மறுமை வாழ்வில் உறவுமுறை எதுவும்  இல்லை என்கிறார்.   விண்ணகத்தில் கடவுளோடான அன்பான உறவு மட்டுமே நிலையானது என்றும்,    இறந்து உயிர்த்தெழும்போது யாரும் திருமணம் செய்துகொள்வதில்லை. மாறாக, அவர்கள் விண்ணகத் தூதரைப்போல் இருப்பார்கள் என்று விவரிக்கிறார். அத்துடன் இறப்பிற்குப் பின் உயிர்த்தெழுதலில் நம்பிக்கை அற்ற சதுசேயர்களைப் பார்த்து ‘ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் நானே’ என்று கடவுள்  மோசேயிடம்  சொன்னாரே!  ஆகவே  கடவுள்   இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக, வாழ்வோரின் கடவுள் என்று அறிவுறுத்தினார். .

சிந்தனைக்கு.


மாற்கு நற்செய்தியின் இப்பகுதியில் இயேசுவை பரிசேயர் நான்கு  வெவ்வேறு கேள்விகளில் மடக்க முயற்சி செய்வர். நேற்று உரோமையருக்கு வரிசெலுத்துவது முறையா என்று வினவினர். இன்று, திருமணத்தை மையமாக வைத்து மகப்பேறு இல்லாதக் காரணத்தில் ஒரு பெண்ணை சகோதரர்கள்  ஒருவர் பின் ஒருவராக மணப்பவர் இறந்தபின் அவள் யாருக்கு உரியவள் என்று கேட்கப்படுகிறது. நாளை வேறொரு கேள்வி தொடரும்.

சதுசேயரின் கேள்வியில் சூழ்ச்சி உள்ளது. அது  இயேசுவைச் சிக்கலில் மாட்டிவிடுவதுமாக இருந்தது.  ஆனால் இயேசு ஒரு போதகர். அவர் அவர்களுக்குத்  தெளிவானதொரு பதிலைத் தருகிறார்.   “இவ்வுலகில்தான் பெண் கொள்வதும், எடுப்பதும் இருக்கும். மறு உலகில் அப்படி இருக்காது. இறந்த அவர்கள் வானதூதர்களைப் போன்று இருப்பார்கள், அவர்கள் கடவுளின் மக்களாகவும் இருப்பார்கள்” என்கிறார்.

இது சதுசேயர்களின் நம்பிக்கைக்குப் புறம்பான போதனை.  ஏனெனில் சதுசேயர்கள்  கடவுளின் வல்லமையை அறிந்திராதவர்கள். கடவுள் தம் மக்களை இறப்பிற்குப் பின் எழுப்பவல்லவர் என்பதை ஏற்காதவர்கள்.

சதுசேயர் பரிசேயர்களைப்போல் மறைநூலில் தேர்ச்சிப்பெற்றவர்கள் அல்ல. ஆதலால்,  அவர்களின் கேள்விக்கு இயேசு மட்டுமே தக்க பதில் அளிக்க வல்லவர். இயேசு, கடவுள் மோசேக்கு முட்புதரில் காட்சிதந்த நிகழ்ச்சியைச் சுட்டிக்காட்டி, அவர்கள் ஏற்றுக்கொண்ட   ஐந்நூலிருந்தே (வி.ப. 3:6) பதிலளிகின்றார். கடவுள் இறந்தோரின் கடவுள் அல்ல, மாறாக அவர் வாழ்வோரின் கடவுள்” என்று அவர்களுக்கு விளக்கம் தருகின்றார். அப்படியெனில், ஆபிரகாம், மோசே, யாக்கோபு போன்றார் உயிர்ப்பிக்கப்பட்டவர்கள் என்றுதனே பொருள். 

இன்றைய நற்செய்தியை நம்புவோர் சாவைக் கண்டு ஒருபோதும் அஞ்சக்கூடாது.  ஏனெனில்,  சாவு நமக்கு முடிவல்ல. அது நிலையான வாழ்வின் தொடக்கம் என்றே நம்ப வேண்டும்.   விண்ணகத்தில் உயிர்பின் நிமித்தம் நாம் அனைவருமே உடலற்ற வானதூதர்களைப்போல இருப்போம். உரோ 8:11-ல் ‘இறந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தவரின் ஆவி உங்களுள் குடிகொண்டிருந்தால், கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்த அவரே உங்களுள் குடிகொண்டிருக்கும் தம் ஆவியினாலே சாவுக்குரிய உங்கள் உடல்களையும் உயிர் பெறச் செய்வார்’ என்ற பவுல் அடிகள் நமக்குத் தெளிவுப்படுத்தியுள்ளரார்.

 
“உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்” (யோவான் 11:25) என்றுதான் இயேசுவும் நமக்கு உறுதியளிக்கிறார். இறந்தவர்களைத் திரும்ப உயிருக்குக் கொண்டுவருகிற ஆற்றல் மட்டுமல்ல, அதற்கான ஆசையும் கடவுளுக்கு இருக்கிறது என்பதை நாம் ஏற்க வேண்டும். 

இறப்பிற்குப்பின் கிடைக்கும் மறுவாழ்வில்  நம்பிக்கை அற்றவர்கள் மனம்போன போக்கில் இவ்வுலகில் வாழ்வார்கள். உண்பதிலும், குடிப்பதிலும், குடியைக் கெடுப்பதிலும் நிலைத்திருப்பர். ஆனால், மறுவாழ்வில் நம்பிக்கை கொண்டோர் மறுவாழ்வுக்கான ஆயத்தப் பணிகளை, தர்ம அல்லது அறச் செயல்களை இந்த உலகிலேயே செய்து நிலைவாழ்வுக்கு வழி தேடுவர். 


இறைவேண்டல்.


ஆண்டவராகிய இயேசுவே, உம்மில் முழு நம்பிக்கை வைத்து வாழும் என்னை உயிர்ப்பித்து, வான்வீட்டில் வானத்தூதர்கள் மத்தியில் என்னையும் வாழச்செய்வீராக. ஆமென்.


 
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452