தன்னிலை உணர்ந்து தாழ்ச்சியோடு நம்பிக்கை கொள்வோம்! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

பொதுக்காலம், வாரம் 24 ஆம் திங்கள்
I: 1 திமொ:  2: 1-8
II: திபா 28: 2. 7-8. 8-9
III: லூக்: 7: 1-10

ஆங்கிலத்திலே " Know thy self" என்று கூறுவார்கள்.அதாவது உன்னை நீ அறிந்து கொள் என்பதே அதன் பொருள்.நம்மைப் பற்றி பிறர் அறிந்து நம்மிடம் சொல்ல வேண்டிய தேவையில்லை. மாறாக நம்மைப் பற்றி நாமே அறிந்து கொள்ள வேண்டும். அத்தகைய விழிப்புணர்வு இருந்தால் நம் பல பலவீனங்களை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியும்.அவ்வாறு ஏற்றுக்கொள்ளும் போதுதான் நாம் தாழ்ச்சி என்ற நற்குணத்தில் வளர இயலும். இந்த தாழ்ச்சி தான் நம்பிக்கையை நம்மிடம் உறுதிப்படுத்தும்.

இன்றைய நற்செய்தி நமக்குக் கூறும் செய்தி இதுவே. நூற்றுவர் தலைவனின் வேலையாளை குணமாக்க இயேசுவிடம் யூதர்கள் பரிந்துரைத்தார்கள். இயேசுவிடம் வந்த நூற்றுவர் தலைவன் நினைத்திருந்தால் தன்னுடைய பதவியையும் தனக்குள்ள நல்ல பெயரையும் பயன்படுத்தி இயேவை அணுகி இருக்கலாம். ஆனால் அவரோ 

  • தன்னைப் பற்றிய முழு விழிப்புணர்வைப் பெற்றவராய் தன் வாழ்க்கை முறையை இயேசுவிடம் அறிக்கையிட்டார்
  • தன்னை தாழ்த்திக் கொண்டார். எனவே நீர் என் வீட்டிற்கு வர நான் தகுதியற்றவன் என உரைத்தார்.தன் வேலையாளுக்காய் இயேசுவிடம் வேண்டி நின்ற பண்பு அவருடைய தாழ்ச்சியை இன்னும் அதிகமாக நமக்குச் சுட்டிக்காட்டுகிறது.
  • இயேசுவினுடைய ஒரு வார்த்தை தன் வேலையாளைக் குணப்படுத்தும் என நம்பிக்கை அறிக்கையும் செய்தார்.

இந்நிகழ்வு நம்மைப் பற்றி நமக்குள்ள விழிப்புணர்வையும், தாழ்ச்சியையும் ,நம் நம்பிக்கையையும் ஆழமாகச் ஆய்வு செய்ய  நம்மைத் தூண்டுவதாக உள்ளது. ஆம் தாழ்ச்சியும் நம்பிக்கையும்  உள்ள இடத்தில் நிச்சயம் அதிசயம் நிகழும். இதை உணர்ந்து இறைவேண்டல் செய்யும் போதும் பிறரிடம் உதவிக்காக அணுகும் போதும் நம்மைப் பற்றி பிதற்றிக்கொள்ளாமல் தாழ்ச்சியோடும் நம்பிக்கையோடும் செல்வோம். நிச்சயம் நன்மைகள் நிறையும்.

இறைவேண்டல்
அன்பு இறைவா! எம் நிலை உமக்குத் தெரியாததன்று. தாழ்ச்சியோடு அதை உம்முன் அறிக்கையிடுகின்றோம். எம்மை ஏற்றுக்கொண்டு நலமாக்கி எம் நம்பிக்கையை ஆழப்படுத்தும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை  பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்