பிறரைத் தீர்ப்பிடுவது சரியா! | அருட்பணி. குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


தவக்காலம் -ஐந்தாம் வாரம் திங்கள்  
I: தானி: 2: 1-9,15-17,19-30,33-62
II: திபா: 23:1-3, 3-4, 5, 6
III: யோவா: 8: 1-11
ஒரு பள்ளியில் மாணவர் விடுப்பு எடுத்துள்ளார். அவர் பொய்ச் சொல்லி  விடுப்பு கடிதம் எழுதினார். இதை கண்டுபிடித்த சகமாணவர்கள் ஆசிரியரிடம் புகார் செய்தனர். ஏனெனில்  சக மாணவர்கள் விடுப்பு எடுத்த மாணவரிடம் ஒருசில பொறாமையில் இருந்தனர். விடுப்பெடுத்த மாணவர் சிறந்த மாணவராகத் திகழ்ந்தார். சூழ்நிலையின் காரணமாக பொய் சொல்லி விடுப்பு எடுக்கக்கூடிய  கட்டாயம் ஏற்பட்டது. ஆனால் இந்த மாணவரைப் பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆசிரியரிடம் புகார் செய்தனர். ஆசிரியர் நடந்த அனைத்தையும் கேள்வியுற்று அந்த மாணவனை அழைத்து இனிமேல் அப்படிச் செய்யாதே என்று மன்னித்து அனுப்பினார். உடனே சக மாணவர்களுக்கு ஆசிரியர் மீது கோபம் ஏற்பட்டது. ஆசிரியரிடம் அவர்கள் கேட்டபோது "நானும் பல நேரங்களில் சூழ்நிலையின் காரணமாக பொய்சொல்லி விடுப்பு எடுத்து இருக்கின்றேன். எனவே தண்டிக்க எனக்கு மனமில்லை. எனவேதான் இனிமேல் தவறு செய்யாதே என்று சொல்லி அனுப்பி வைத்தேன் "என்று கூறினார். 

தவறு செய்வது மனித இயல்பு. ஆனால் அந்த தவறிலிருந்து வெளிவர உதவி செய்வது இறையியல்பு. தவறு செய்யும் பொழுது அவர் தவறு செய்யச் சூழல் தான் அதிகம் காரணமாக இருக்கின்றது. அதற்கு முக்கிய காரணம் நாமும் பிறரும் தான். தவறு செய்துவிட்டார்கள் என்று தண்டிப்பதை விட அவர்கள் மனமாற வழிகாட்டுவதுதான் சிறந்த ஒன்றாகும். 

இன்றைய நற்செய்தியில் விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணின் நிகழ்வைப் பற்றி வாசிக்கின்றோம். யூத சட்டத்தில் ஒரு பெண் திருமணத்திற்கு முன்பாகவோ அல்லது விபச்சாரத்திலோ பிடிபட்டால்,  கல்லால் எறியப்பட்டு கொல்லப்பட வேண்டும். ஆனால் அத்தகைய தண்டனை தவறு என்பதை இயேசு சுட்டிக்காட்டியுள்ளார். ஒரு பெண் சமூகத்தில் விபச்சாரியாக மாறுகிறார் என்றால் அதற்கு பல ஆண்களின் கீழ்த்தரமான இச்சைகள் காரணமாக அடங்கியுள்ளது. எனவேதான் விபச்சாரத்தில் கையும் களவுமாக பிடிபட்ட அந்தப் பெண்ணை இயேசு தண்டிக்காது, மன்னித்து மனமார வாய்ப்பு கொடுத்தார். அந்தப் பெண்ணின் மீது குற்றம் சுமத்திய நபர்களைப் பார்த்து இயேசு "உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்"
என்று அவர்களிடம் கூறினார் (யோவான் 8:7). இது எதைக் காட்டுகிறது என்றால் இந்த உலகத்தில் பிறந்த மனிதர்கள் அனைவருமே சூழ்நிலையின் காரணமாக பாவம் செய்பவர்கள். ஆனால் நம்மிடம் அதிக குறைகளை வைத்துக்கொண்டு பிறரை குறையுள்ளவர்கள் பாவிகள் என தீர்ப்பிடுவது தவறு என்பதையே. இயேசு உங்களில் பாவம் செய்யாதவர்கள் முதலில் கல் எறியுங்கள் என்று சொன்னவுடன் அனைவரும் அந்த இடத்தை விட்டு கலைந்து சென்றார்கள். ஏனெனில் அந்தப் பெண்ணின் மீது குற்றம் சுமத்திய அனைவருமே பாவம் செய்தவர்கள்.

இயேசு இன்றைய நற்செய்தி வழியாக  நம்மையும் ஆழ்ந்து சிந்திக்க அழைப்பு விடுகின்றார். பல நேரங்களில் நாமும் நம்மிடம் குறைகளை வைத்துக்கொண்டு பிறரைக் குற்றவாளியாக தீர்ப்பளித்து இருக்கின்றோம். இத்தகைய மனநிலை கடவுளுக்கு எதிரான மனநிலை. எனவே நம்முடைய வாழ்வில் பிறர் தவறு செய்யும் பொழுது அவர்களுக்கு தண்டனை வழங்கவேண்டும் என்று நினைக்காமல், அவர்கள் மனம்மாறி வாழ்வு பெற வேண்டுமென்று மன்னிக்கும் இரக்க குணத்தை இயேசுவைப்போல் பெற்றுக்கொள்வோம். அதேபோல இயேசுவின் இந்த செயல்பாடு பெண்களுக்கு மதிப்பளிக்கும் விதமாகவும் இருந்தது. யூத சமூகத்தில் பெண்கள் இரண்டாம் தர குடிமக்களாக கருதப்பட்டனர். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அவர்கள் சிறு தவறு செய்தாலும் தண்டித்தனர். இத்தகைய அவல நிலை தான் இயேசுவின் காலத்தில் இருந்தது. இவற்றையெல்லாம் அறிந்துதான்  இயேசு அந்தப் பெண்ணுக்கு மன்னிப்பு வழங்கினார். எனவே நாமும் முடிந்தவரை நம்முடைய வாழ்வில் பிறரைக் குற்றவாளி என தீர்ப்பு அளிக்காமல் இருக்கவும் சமூகத்தில் மாண்பு இழந்த பெண்களுக்கு மாண்பினை வழங்கும்  கருவிகளாகவும் இருக்க முயற்சி செய்வோம். அப்பொழுது இயேசு கண்ட இறையாட்சிக் கனவை நம் வாழ்விலே வாழ்வாக்க முடியும். இயேசுவின் பார்வையில் பிறர் தவறு செய்யும் பொழுது தீர்ப்பிடுவது தவறாகும்.அவர்களை மன்னித்து மாண்புற செய்வதுதான் இயேசுவின் மனநிலையாகும். பிறரைத் தீர்ப்பிடாமல், அவர்கள் மனம்மாறி மாண்பு பெற  நாமும் ஒரு கருவியாக இருக்க முயற்சி செய்வோம்.

 இறைவேண்டல்
மன்னிக்கும் இறைவா! என்னுடைய அன்றாட வாழ்வில் பல நேரத்தில் பிறரை மன்னிக்காமல் அவர்களைக் குற்றவாளியெனத் தீர்ப்பளித்து அவர்களின் மாண்பை இழக்கச் செய்த நேரத்திற்காக மன்னிப்பு கேட்கின்றோம். உம் திருமகன் இயேசுவைப் போல நாங்களும் இரக்கத்தோடு பிறரை மன்னிக்கும் நல்ல மனநிலையைத் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

14 + 1 =