சீடத்துவமானது இறைவார்த்தையில் வாழ்வது! | ஆர்.கே. சாமி | Veritas Tamil
பொதுக்காலம் 25-ம் வாரம்-செவ்வாய்
22 செப்டம்பர் 2026
நீதிமொழிகள் 21: 1-6, 10-13
லூக்கா வாசகம் 8: 19-21
முதல் வாசகம்.
இன்றைய முதல் வாசகமானது நீதிமொழிகள் நூலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இதில் மனிதனின் இதயத்தையும் செயல்களையும் கடவுள் அறிவார் என்பதும், இதனிமித்தம் நீதியுடனும் நேர்மையுடனும் வாழ்வது முக்கியம் என்பதும் வலியுறுத்தப்படுகிறது. அரசர்களின் மனமும் கடவுளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றும் வெளிப்புற மதச் சடங்குகளைவிட நீதியையும் நேர்மையையும் கடைப்பிடிப்பதுதான் கடவுளின் மாட்சிக்குரியது என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
அடுத்து, பெருமை, தீய எண்ணங்கள், பொய், அவசரமாகச் செல்வம் சேர்க்கும் முயற்சி ஆகியவை மனிதர்களை அழிவுக்குக் கொண்டுசெல்லும் என்றும், கடின உழைப்புடனும் திட்டமிடுதலுடனும் சம்பாதிப்பது செல்வத்திற்கு வழிவகுக்கும் என்பது நமக்கான படிப்பிணையாக உள்ளது.
நிறைவாக, தீய மனிதன் பிறருக்குத் தீங்கு செய்ய விரும்புகிறான்; அவனுடைய இரக்கமின்மை அவனுக்கே தீமையைத் தரும் என்றும், ஏழைகளின் தேவையைப் புறக்கணிப்பவன் தானும் ஒரு நாள் உதவிக்காக அழைக்கும்போது பதில் பெறாமல் போகலாம் என்றும் ஞானமுள்ளவர் எச்சரிக்கையை கவனிப்பார்; மூடன் அதை அலட்சியம் செய்வான் என்ற செய்தியும் தரப்படுகிறது.
நற்செய்தி.
நற்செய்தியில், இயேசுவின் தாயும் சகோதரர்களும் அவரைப் பார்க்க வந்தார்கள். ஆனால் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அவரை நேரில் சந்திக்க முடியவில்லை. அப்போது ஒருவர், “உம்முடைய தாயும் சகோதரர்களும் உம்மைப் பார்க்க வெளியே நிற்கிறார்கள்” என்று இயேசுவிடம் கூறினதைக் கேட்ட இயேசு, “இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே என் தாயும் என் சகோதரர்களும் ஆவார்கள்” என்றுரைத்ததை லூக்கா விவரிக்கிறார்.
சிந்தனைக்கு.
நற்செய்தி வாசகமானது, இயேசுவைப் பின்பற்றுவது வெறுமனே அவருடைய வார்த்தையைக் கேட்பது மட்டும் அல்ல; கடவுளின் வார்த்தையை ஏற்று, அதன்படி வாழ்வதே உண்மையான சீடத்துவம் என்பதை வலியுறுத்துகிறது.
விவிலிய கிரேக்க மொழியில், “சகோதரர்கள்” (brothers) என்று மொழிபெயர்க்கப்படும் சொல், உடன் பிறந்த சகோதரர்களை மட்டும் குறிக்காது. சூழ்நிலையைப் பொறுத்து, நெருங்கிய உறவினர்கள், குடும்பத்தினர் அல்லது ஆன்மீக சகோதரர்களையும் குறிக்கக்கூடும். எனவே, விவிலிய கிரேக்கத்தில் “சகோதரர்கள்” என்ற சொல்லின் சரியான பொருளை அறிய, அது பயன்படுத்தப்பட்டுள்ள சூழலைக் கவனிப்பது முக்கியம்.
ஆகையால், இயேசுவின் தாயாரும் அவருடைய “சகோதரர்களும்” அவரைக் காண வந்தார்கள் என்று நாம் வாசிக்கும்போது, இது இயேசுவின் உடன்பிறந்த சகோதரர்களைக் குறிக்கவில்லை என்று நம் திருஅவை எப்போதும் போதித்து வந்துள்ளது. ஏனெனில், இயேசு புனித கன்னி மரியாவின் ஒரே மகன் ஆவார். இங்கே, நாசரேத்தைச் சேர்ந்த உறவினர்கள்—உதாரணமாக, உறவுச் சகோதரர்கள் (cousins) அல்லது பிற நெருங்கிய குடும்ப உறவினர்கள்—போன்ற விரிவான உறவுமுறையைக் குறிக்கிறது என்று நாம் பொருள் கொள்ள வேண்டும். பிரிந்த சகோதரர்களின் அவதூரான விளக்கங்களின் வலையில் சிக்கிக்கொள்ளக் கூடாது. அன்னை மரியாவைப் பற்றிய கத்தோலிக்கத் திருஅவையின் நான்கு கோட்பாடுகளில் ஒன்று, மரியா என்னென்றும், அதாவது, இயேசுவின் பிறப்புக்கு முன்பும், பின்பும் அவர் கன்னி என்பதாகும்.
இன்றைய முதல் வாசகமான நீதிமொழிகளில், மனிதனுடைய உள்ளத்தையும் வாழ்க்கையின் நிகழ்வுகளையும் இறுதியில் கடவுளே வழிநடத்துகிறார் என்பதை நாம் காண்கிறோம். நம் திட்டங்கள், ஆசைகள், முயற்சிகள் அனைத்தும் இருந்தாலும், கடவுளின் திருவுளத்திற்கு தாழ்மையுடன் நம்மை ஒப்படைப்பதே நமது முன்மையான வாழ்க்கை. மேலும், நீதிமொழிகள் எச்சரிப்பது என்னவென்றால், அகந்தை, அநீதி, வஞ்சகம் ஆகியவை இறைவனுக்கு ஏற்புடையவை அல்ல. வெளிப்புறச் செயல்களைக் காட்டிலும் நம் உள்ளத்தின் நேர்மையை இறைவன் பார்க்கிறார் என்பதாகும்.
நிறைவாக, நற்செய்தியில், இயேசுவிடம் அவருடைய தாயும் சகோதரர்களும் வந்தபோது, அவ இயேசு குறிப்பிடும் “இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே என் தாயும் என் சகோதரர்களும்” என்பது, அன்னை மரியாவை குறைத்து இயேசு மதிப்பிடுகிறூர் என்றும் சிலர் பிதற்றுவதுண்டு.
அன்னை மரியா இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி வாழ்ந்தவர் என்பதில் ஐயமில்லை.
“உமது வார்த்தைப்படியே எனக்கு ஆகுக” என்று தன்னை இறைவனிடம் ஒப்படைத்தவர் மரியா.
ஆகவே, கிறிஸ்தவராக இருப்பது வெறுமனே திருமுழுக்கு பெற்றிருப்பதோ, திருப்பலியில் பங்கேற்பதோ மட்டும் அல்ல. இறைவார்த்தையை கேட்டு, அதை நமது அன்றாட வாழ்க்கையில் செயல்படுத்துவதுதான் உண்மையான சீடத்துவம் என்பதற்கு அன்னை மரியா நமக்கு முன்மாதிரியாக உள்ளார்.
இறைவார்த்தை காதுகளில் மட்டும் தங்காமல், இதயத்திற்குச் சென்று, செயல்களில் வெளிப்பட வேண்டும். அப்போது நாமும் இயேசுவின் உண்மையான குடும்பமாக அல்லது அன்னை மரியாவைப் போன்று சிறந்த சீடராக மாற முணியும்.
இறைவேண்டல்.
ஆண்டவரே, உமது வார்த்தையைக் கேட்கும் இதயத்தையும், அதை வாழ்வாக்கும் துணிவையும் எனக்கு அருள்வீராக. ஆமென்.
ஆர்.கே. சாமி
