அணு ஆயுத ஒழிப்பே மனிதகுலத்தின் பாதுகாப்பு! | Veritas Tamil

அனைத்துலக அமைதியையும் பாதுகாப்பையும் வலுப்படுத்தும் நோக்கில், அணு ஆயுதங்களை முற்றிலும் ஒழிப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று திருப்பீடம் வலியுறுத்தியுள்ளது.

அக்டோபர் 19ஆம் நாள்  நியூயார்க்கில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் முதல் குழுக் கூட்டத்தில் உரையாற்றிய ஐ.நா.வுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் கிறிஸ்டோஃப் எல் காசிஸ் அவர்கள், அணு ஆயுதங்கள் மனிதகுலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்களில் ஒன்றாகத் தொடர்ந்து விளங்குகின்றன என்று எச்சரித்தார்.

அனைத்துலக பாதுகாப்புச் சூழல் மோசமடைந்து வருவது அணு ஆயுதங்களைச் சார்ந்திருப்பதை நியாயப்படுத்த முடியாது என்றும், மாறாக, அவற்றை ஒழிப்பதற்கான முயற்சிகளை மேலும் அவசரமாக்குகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் அண்மையில் கூறியதை எடுத்துக்காட்டிய பேராயர், “அமைதி என்பது அதிகாரச் சமநிலை அல்ல; மாறாக, உரையாடல் மற்றும் நீதியின் வழியாக நாள்தோறும் கட்டியெழுப்பப்படுவதாகும்” என்று எடுத்துரைத்தார்.

மேலும், நாடுகள் தங்களது அணு ஆயுதக் கையிருப்புகளை நவீனமயமாக்கி விரிவுபடுத்துவதும், அணு ஆயுத அச்சுறுத்தல்கள் அதிகரிப்பதும் உலகளாவிய பாதுகாப்பை வலுப்படுத்துவதற்குப் பதிலாக, பேரழிவு ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கின்றன என்று அவர் எச்சரித்தார்.

அணு ஆயுத அமைப்புகளில் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது கூடுதல் ஆபத்துகளை உருவாக்குவதாகவும், இவற்றில் மனிதர்களின் பொறுப்பான கண்காணிப்பும் முடிவெடுக்கும் திறனும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அணு ஆயுதங்களால் ஏற்படும் ஆபத்துகளுக்கான நீடித்த தீர்வு, அவற்றின் முழுமையான ஒழிப்பே என்று குறிப்பிட்ட பேராயர், அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தின் கீழான கடமைகளை அணு ஆயுதங்களைக் கொண்டுள்ள நாடுகள் நிறைவேற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தில் அனைத்து நாடுகளும் பங்கேற்கவும், விரிவான அணு ஆயுதச் சோதனைத் தடை ஒப்பந்தம் நடைமுறைக்கு வரவும் திருப்பீடம் ஆதரவு தெரிவிப்பதாக எடுத்துரைத்து தனது செய்தியை நிறைவு செய்தார். 

Tamil Survey Popup Image