சிலுவையை ஏற்பவர்களே கிறிஸ்துவில் வெற்றியாளர்கள் | ஆர்.கே. சாமி | Veritas Tamil

பொதுக்காலம் 18 ஆம் வாரம் – வெள்ளி
நாகூம் 1: 15; 2: 2; 3: 1-3, 6-7
மத்தேயு 16: 24-28

"சிலுவையை ஏற்பவர்களே கிறிஸ்துவில் வெற்றியாளர்கள்"

முதல் வாசகம்.

இன்றைய வாசகத்தில் நாகூம் என்ற இறைவாக்கினரின் பகிர்வை
கேட்கிறோம். ஸ்ரயேலரை அச்சுறுத்தி வந்த அசீரியர்களின் பெரும்
நகரான நினிவேயின் வீழச்சியைக் குறித்து வாசிக்கிறோம்.
ஆண்டவர் தமது மக்களை ஒடுக்கிய நினிவே நகரத்தின் மீது தீர்ப்பை
அறிவிக்கிறார். முதலில், மகிழ்ச்சியான நற்செய்தியை அறிவிக்கும்
தூதுவரின் வருகை பற்றி கூறப்படுகிறது. யூதா மக்கள் தங்கள்
திருவிழாக்களைக் கொண்டாடவும், ஆண்டவருக்குச் செய்த
நேர்ச்சைகளை நிறைவேற்றவும் அழைக்கப்படுகிறார்கள்; ஏனெனில்
அவர்களை ஒடுக்கிய பகைவரான அசீரியிர்கள் இனி அவர்களைத்
துன்புறுத்த மாட்டார்.
அடுத்து, ஆண்டவர் யாக்கோபின் மகிமையை மீண்டும் நிலைநாட்டுவார்
என்ற நம்பிக்கை அளிக்கப்படுகிறது. பகைவர்கள் நாட்டைச்
சிதைத்திருந்தாலும், இறைவன் தனது மக்களை மீண்டும் உயர்த்துவார்
என்ற நம்பிக்கை செய்தியை நாகூம் வழங்குகிறார்,
இறுதியாக, நினிவே நகரத்தின் கொடுமை, வன்முறை, பொய், கொள்ளை
ஆகியவற்றின் காரணமாக அதன் அழிவு விவரிக்கப்படுகிறது. போரின்
பயங்கர காட்சிகள் சித்தரிக்கப்படுகின்றன. நினிவே தனது
பாவங்களுக்காக வெட்கத்திற்கும் அவமானத்திற்கும் உள்ளாகும்; அதன்

வீழ்ச்சியைக் கண்டு யாரும் இரங்கப்படமாட்டார்கள் என்றும் தீமையும்
அநீதியும் இறுதியில் இறைவனின் நீதித் தீர்ப்பைச் சந்திக்கும் என்பதை
இந்த வாசகத்தில் நமக்கு அறிவூட்டப்படுகிறது.

நற்செய்தி.

இன்றைய நற்செய்தியில், இயேசு தம்மைப் பின்பற்ற விரும்புகிறவர்கள்
தங்களையே மறுத்து, தங்கள் சிலுவையைச் சுமந்துகொண்டு அவரைப்
பின்பற்ற வேண்டும் என்று இயேசு கூறியதை மத்தேயு குறிப்பிடுகிறார்.
தன் உயிரைக் காப்பாற்ற நினைப்பவன் அதை இழப்பான்; ஆனால்
அவருக்காக தன் உயிரை இழப்பவன் உண்மையான வாழ்வைப்
பெறுவான் என்கிறார்.
தொடர்ந்து , உலகம் முழுவதையும்ஒருவர் பெற்றாலும் ஆன்மாவை
இழந்தால் அதனால் எந்தப் பயனும் இல்லை என்பதையும் இயேசு
நினைவூட்டுகிறார். இறுதியாக, மானிடமகன் தமது தந்தையின்
மாட்சியோடு வரும்போது, ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்களின்படி
கைம்மாறு வழங்குவார் என்றும், அங்கு நின்றிருப்பவர்களில் சிலர்
இறையாட்சியின் மாட்சியைக் காணும் முன் மரணத்தைச் சுவைக்க
மாட்டார்கள் என்றும் அறிவிக்கிறார்.

சிந்தனைக்கு.

மனித சக்தி எவ்வளவு பெரியதாக இருந்தாலும், இறைவனின் நீதிக்கு முன்
அது நிலைத்து நிற்க முடியாது. கடந்த காலங்களில் உலகை ஆட்டிப்
படைத்த எத்தனையோ வல்லரசுகள் இன்று இல்லை.

இன்றைய முதல் வாசகத்தில் அநீதி, வன்முறை, பொய், அகந்தை
ஆகியவற்றால் புகழ்பெற்ற நினிவே நகரத்தால் இறைவனின் நீதித்

தீர்ப்பிலிருந்து தப்ப முடியவில்லை. அதே நேரத்தில், துன்புறுத்தப்பட்ட
யூதா மக்களுக்கு இறைவன் விடுதலையின் நற்செய்தியை அளிக்கிறார்.

நற்செய்தியில், இயேசு தம் சீடர்களிடம் ஒரு ஆழமான அழைப்பை
விடுக்கிறார்: "தன்னையே மறுத்து, தன் சிலுவையை ஏந்திக்கொண்டு
என்னைப் பின்பற்றட்டும்" என்ற நற்செய்தியை முன்வைக்கிறார். இங்கே
"கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை" என்பதற்கு இடமில்லை. இரண்டில்
ஒன்றை கண்டிப்பாகத் தேர்வுச் செய்ய வேண்டும். இயேசுவின் சீடத்துவம்
என்பது வசதியான வாழ்க்கைக்கான அழைப்பு அல்ல; அது தியாகம்,
பொறுமை, அன்பு, உண்மைக்காக நிலைத்திருத்தல் ஆகியவற்றிற்கான
அழைப்பு.

நாம் பல நேரங்களில் சிலுவையைத் தவிர்க்க விரும்புகிறோம். துன்பம்,
விமர்சனம், இழப்பு, நோய், குடும்பச் சிக்கல்கள், பணிச்சுமைகள்
ஆகியவற்றிலிருந்து விலகவே முயல்கிறோம். ஆனால் இயேசு,
சிலுவையைத் தவிர்ப்பதில் அல்ல, அதை நம்பிக்கையுடன் சும்ப்பதில்தான்
உயிரும் வெற்றியும் இருக்கிறது என்று கற்பிக்கிறார்.
முதல் வாசகமும் நற்செய்தியும் இணைந்து நமக்கு ஒரு பெரிய
உண்மையைச் சொல்கின்றன: அநீதியும் அகந்தையும் இறுதியில்
தோற்கும்; தாழ்மையுடனும் இறைநம்பிக்கையுடனும் சிலுவையை
ஏற்பவர்கள்தான் இறைவனின் மாட்சியில் பங்குபெறுவார்கள். உலக
வெற்றி தற்காலிகமானது; ஆனால் இறைவனுக்காக வாழும் வாழ்க்கையே
நிலையான வெற்றியை அளிக்கும்.
இறைவன் என்னும் குயவன் உருவாக்கிய மண் பாண்டம் போன்றது நமது
உடல். இந்த உடலை அழகுபடுத்த நாம் பல முயற்சிகள் செய்தாலும், அது
எப்போது வேண்டுமானாலும் இறப்புக்கு உள்ளாகலாம். "காயமே (உடல்)
இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா" என்பது எத்துணை
உண்மை என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

இறைவேண்டல்.

என் ஆண்டவராகிய இயேசுவே, எனது சிலுவைகளை மகிழ்ச்சியுடன்
ஏந்திச் செல்லும் அருளையும், எந்தச் சோதனையிலும் இறைவனின்
நீதியிலும் அன்பிலும் உறுதியாக நிலைத்திருக்கும் மன வலிமையை
தந்தருள்வீராக, ஆமென்.

ஆர். கே. சாமி (மலேசியா). ஜெனிசிஸ்
விவிலியக் கல்வி மையம் +6
0122285452

Tamil Survey Popup Image