சமூக நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு விழா. | Veritas tamil
மதுரை புனித மரியன்னை பேராலயத்தில் அனைத்துமதத்தினர் பங்கேற்ற சமய நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. இதில் சமய நல்லிணக்கத்தையும் மக்களின் ஒற்றுமையையும் என்றும் காப்போம், அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்வோம் என்று அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
சமய நல்லிணக்கத்தையும் மக்கள் ஒற்றுமையையும் எந்நாளும் காக்கவேண்டும்; அதனை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற நோக்குடன் மதுரையில் சமய நல்லிணக்க உறுதிமொழி நிகழ்ச்சி சிறுபான்மை மக்கள் நலக் குழு சார்பில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, இந்திய வரைபடம் வரையப்பட்ட மேடையில் அனைத்து சமயத்தினரும் ஒன்றிணைந்து மலர்கள் வைத்து, "எங்கள் ஒற்றுமை இந்த மண்ணில் என்றும் நிலைத்திருக்கும்" என்பதை குறிக்கும் விதமாக செயல்பட்டனர். இது சமய ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் இந்தியாவின் பன்முகத் தன்மையை வலியுறுத்தும் வண்ணம் அமைந்தது.
நிகழ்ச்சியில் மதுரை மாநகராட்சி பொறுப்பு மேயர் தி.நாகராஜன், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன், மதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி, மதுரை ஐக்கிய ஜமாத் தலைவர் லியாகத் அலி ஆகியோர் கலந்து கொண்டு சமய நல்லிணக்கத்தின் அவசியத்தை வலியுறுத்தி உரையாற்றினர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநகர் மாவட்டச் செயலாளர் மா. கணேசன், மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் இரா.விஜயராஜன், தமிழ்நாடு சிறுபான்மை நலக் குழு தலைவர் கே.அலாவுதீன், பொரு ளாளர் என். ஜான்சன், மாநிலக் குழு உறுப்பினர் அ.போனி ஃபேஸ், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி பகுதிச் செயலாளர் ஜெ.லெனின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும், புனிதமரியன்னை பேராலயத்தின் பங்குத்தந்தை அருள்பணி ஹென்றி ஜெரோம் சேச, உதவி பங்கு தந்தையர்கள் அருள்பணி பெனிடோ, அருள்பணி ஜோ லிவிங்ஸ்டன் ஆகியோர் கலந்து கொண்டு சமய நல்லிணக்கம் மனிதநேயத்தின் அடிப்படை என்ற கருத்தை வலியுறுத்தினர். பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர்.