மன்னிப்போம் மறப்போம் | அருள்பணி. முனைவர் அ. பவுல்ராஜ் | Veritas Tamil
'யார் மேலாவது நீங்கள் மனத்தாங்கல் கொண்டிருந்தால், மன்னித்து விடுங்கள். அப்போது உங்கள் விண்ணகத்தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிப்பார்" (மாற் 11: 24-26).
உறவுக்கு உயிர் கொடுக்கும் ஆற்றல் உண்டு என்றால், அது மன்னிப்பு என்ற வார்த்தையால் மட்டுமே முடியும். அதில்தான் மனிதநேயம் மலர்கிறது. உடல் உள்ளம், ஆன்மிகம் இவற்றின் ஒருமித்த வளர்ச்சி, மலர்ச்சி ஆகியவற்றை மன்னிப்பால் மட்டுமே நிறைவுசெய்ய முடியும்.
மன்னிப்பு என்பது மாபெரும் சக்தி. சுமைகளிலிருந்து, வலிகளிலிருந்து, நோய்களிலிருந்து விடுவிக்கும் திறவுகோல்தான் மன்னிப்பு. மன்னிப்பு நம்மிடமுள்ள பெரிய ஆயுதம். உறவை இணைத்து வைக்கும் சங்கிலி.
ஓர் ஆசிரமத்தில் தலைவராய் இருந்த குருவுக்கும், ஆசிரமத்தின் வரவு செலவுகளைக் கவனித்துக் கொண்டிருந்த மற்றொரு சகோதரருக்கும் அடிக்கடி மனத்தாங்கல் ஏற்பட்டுக்கொண்டேயிருந்தது. தன்னை மதித்துத் தன் சொல் கேட்க மறுப்பதாகத் தலைமைக் குருவும், தமது கடின உழைப்பு, கடமையுணர்வு இவை கண்டு கொள்ளப்படவில்லையே என்று பணிப்பொறுப்பில் இருந்த சகோதரரும் அடிக்கடி மன உளைச்சலில் உழன்று கொண்டிருந்தனர்.
தமது வயது முதிர்ந்த நிலையிலும், கடமை தவறாது உழைத்துக்கொண்டிருந்த சகோதரர், தமது தலைமைக் குருவின் ஆதிக்க உணர்வை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாததால், தலைவரின் கோபத்தை அதிகம் சம்பாதித்துக்கொண்டார். உழைப்பின் உச்சமாக நோயில் வீழ்ந்தார். முதிர்ச்சி, நோய், உடலில் வலுவின்மை அனைத்தும் சேர்ந்து மரண வாயிலில் அவரைக் கிடத்தின. அந்த வேளையிலும்கூட தலைவரின் மனம் இளகவில்லை. தமது மரண நேரம் நெருங்கி வருவதையுணர்ந்த சகோதரர், தன்னைக் கவனித்துக்கொள்பவரிடம் சொல்லித் தலைவரை அழைத்து வரச்சொன்னார்.
தலைவருக்கோ மட்டற்ற மகிழ்ச்சி. 'தமது மரணப்படுக்கையிலாவது இந்த சகோதரரின் மனம் மாறியதே. மன்னிப்புக் கேட்கத்தான் தன்னை அழைக்கிறார்' என நினைத்து, தமது முகபாவத்தைக் கோபமாக, அதே வேளையில் கம்பீரமாக வைத்துக்கொண்டு நோயாளி சகோதரரின் அறைக்கு வந்து அருகில் அமர்ந்து, "என்ன சகோதரரே, என்ன சொல்லவேண்டுமென்று என்னை அழைத்தீர்கள்?” என்று கேட்டார்.
அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியுறும் விதத்தில் அந்தச் சகோதரர் சொன்னார். “அதிபர் குருவே, நீங்கள் எனக்குச் செய்த அனைத்துக் காரியங்களுக்காகவும் நான் உங்களை மனதார மன்னிக்கிறேன்” என்று சொல்லி மரணமடைந்தார். தன்னிடம் மன்னிப்புக் கேட்கத்தான் தன்னை அழைத்தாரென்று நினைத்த தலைவருக்குப் பெரும் அதிர்ச்சி. இருப்பினும் அதுதான் உண்மை என்று அறிந்து, கண்ணீர் பெருக அவரது இறுதிச் சடங்கை நிறைவேற்றினார்.
தண்டனைகளில் உயர்ந்தது, தவறியவரை மன்னிப்பதுதான். இறந்தவர்கள்தான் தவறு செய்யமாட்டார்கள். நாம் வாழும் மனிதர்கள் உயிருள்ளவர்கள், தவறு செய்பவர்கள். தவறை மறப்போம், மன்னிப்போம்.
மன்னித்தால் மனிதநேயம் மலரும். உறவும் பலப்படும். மன்னித்தால் மதிக்கப்படுவோம். மன்னிப்பு என்னும் மாபெரும் சக்தியால் மனிதநேயத்தைக் காப்போம்.
ஏழுமுறை மட்டுமல்ல எழுபது தடவை ஏழுமுறை மன்னிப்போம். (மத் 18:22)