அறிவியல் Vs மனிதநேயம் | அருள்பணி. முனைவர் அ. பவுல்ராஜ் | Veritas Tamil

திருஅவையில் அறிவியல் சம்பந்தப்பட்ட அணுகுமுறைகள் ஒப்பந்தம் செய்யப்பட வேண்டும். அறிவியலும் மனிதநேயமும் வெவ்வேறு துருவங்கள் அல்ல. இரண்டும் கைகோர்த்துச் செல்ல வேண்டும். அறிவியல் சமயத்தின் தவறுகள், மூடப்பழக்க வழக்கங்கள் அனைத்தையும் தெளிவுபடுத்தி மனிதத் தன்மையை உருவாக்குகின்றது. (திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்)


விஞ்ஞானத்தின் ஆராய்ச்சி மனம் ஏன்,எப்படி, எங்கு, எதற்கு என்று கேள்வி கேட்டுக் கொண்டேயிருக்கும். இதற்கான விடைதேடலில்தான் நுண்ணறிவும் பகுத்தறிவும் திறன்பெற்று வளர்ச்சியடைகிறது ஆனால், இதனோடு மனிதநேயமும் சேவை மனப்பான்மையும் இணைந்தால் மட்டுமே வெற்றிபெற முடியும். வாழ்வில் பலப்பல மாற்றங்களையும், ஏற்றங்களையும் தருவதாகச் சொல்லப்படும் கோள்களையும், செயற்கை கோள்கள் மூலம் ஆராய்ந்துக் கொண்டிருக்கிறது மனித மனம். இந்த ஆராய்ச்சியின், தேடலின் விளைவாகப் பூமியையே பலமுறை சுற்றி வருகிறார் மனிதர். ஆனால், ஆன்மிகத் தேடலில் மனிதநேயம் வழியாக இருப்பதை மறந்துவிடுகின்றார். ஆன்மிகத் தேடலும், அறிவியல் தேடலும் மனிதநேயத்தைப் பிறப்பித்து மனிதரை மாமனிதராக்குகிறது. அப்படி வாழ்ந்த அறிவியல் அறிஞர்களின் வாழ்விலிருந்து வெளிப்படுகின்ற சில மனிதநேய நிகழ்வுகள்.

தாமஸ் ஆல்வா எடிசன்

ஏறக்குறைய 10,000 கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி "அறிவியலின் தந்தை' என்றழைக்கப்படும் இவரின் அலுவலகத்தின் அருகில், கிழிந்த உடையோடும், அழுக்கோடும் ஏழ்மைக்கோலத்தில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். எடிசன் அவரருகில் சென்று, "என்ன வேண்டும்?" என்று கேட்க, "உமது தொழிலில் பங்குதாரர் ஆக விரும்பி வந்துள்ளேன்" என்றார். அவர் அவரைக் கூர்ந்து நோக்கினார். அவர்மீது இரக்கம்கொண்டு அவரை அணைத்து, தமது அலுவலகத்தைக் கூட்டி, சுத்தம் செய்யும் வேலையைக் கொடுத்தார். பின்னாளில் எடிசனுடன் பங்குதாரராக மாறிய எட்வின். சி. பர்னஸ் என்ற தொழிலதிபர்தான் இவர்.

அறிவியல் அறிவோடு மனிதநேயம் கைகோர்த்தது.

மேரி க்யூரி

மிக எளிமையான பின்னணியைச் சேர்ந்த ஒரு பெண். ரேடியத்தைக் கண்டுபிடித்து புகழின் உச்சியில் இருந்த இப்பெண்மணிக்குப் பரிசுகளும் பாராட்டுகளும் குவிந்தன. தன்னுடைய அறிவியல் ஆய்வுக்கு அப்பால் சிறந்த சமூக சேவகியாகத் திகழ்ந்தார். முதலாம் உலகப்போர் நடந்துகொண்டிருந்த நேரம், போருக்கும் நமக்கும் என்ன சம்பந்தம் என்று தன் ஆராய்ச்சியில் மூழ்கவில்லை. போர்முனைக்குச் சென்று மருத்துவ உதவி செய்தார். தான் வெகுமதியாகப் பெற்றத் தங்கப் பொருள்கள் அனைத்தையும் உருக்கி விற்றார். ஏழைகளுக்குப் பகிர்ந்துகொடுத்தார். அதில் அவர் வாங்கிய நோபல் பதக்கமும் இருந்தது. இதைப்பற்றி அவரிடம் கேட்டபோது, "ஏழைகள் இருக்கும்போது இந்தப் பதக்கங்களால் எனக்கு என்ன பயன்? நான் இறந்த பிறகு இவை என் கூட வரப்போவதில்லை. பெட்டியில் தூங்குவதைவிட பிறருக்கு உதவுவது நல்லது" என்றார்.

அறிவியல் அறிவோடு மனிதசேவையும், இரக்கமனமும் இணைந்து நின்றது.

சர் .சி.வி.இராமன்

தமிழகத்தைச் சார்ந்த விஞ்ஞானி சர்.சி.வி. இராமன். தன்னுடைய ஆராய்ச்சியில் இயங்கிக்கொண்டே, பர்மாவில் பணம் அச்சடிக்கும் அலுவலகத்தில் முதன்மை அலுவலராகப் பணியாற்றிக்கொண்டிருந்தார்.

ஓர் ஏழைத் தொழிலாளி பணம் சேர்த்து வீடு கட்ட எண்ணினார். திடீரென்று ஒருநாள் அந்த ஏழை இருந்த குடிசை தீப்பற்றி எரியவே. அவருடைய பணத்தாள்களும் சேதமடைந்தன. அவரும் அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு கரன்சி அலுவலகத்திற்கு சென்று உதவி வேண்டினார். இளைய அலுவலர் 'முடியாது' என்று அவரை வெளியே விரட்டும்போது, சி.வி. இராமன் அங்கு வந்து அவருக்கு ஆறுதல் சொல்லி, அந்தச் சேதமடைந்த பணத்தைத் தன்னுடைய ஆராய்ச்சியின் மூலம், காந்தக் கண்ணாடி வைத்து ஒவ்வொரு பணமாகப் பரிசோதித்து, அவருக்குப் புதிய பண நோட்டுகளைக் கொடுத்தனுப்பி உதவி செய்தார்.

அறிவியல் சிந்தனையும், ஏழைகள் பால் உள்ள பரிவிரக்கமும் ஒன்றாக பயணித்தது.

ரூதர் போர்டு

அணு ஆராய்ச்சி அறிவியல் உலகில் ஒரு பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தி நோபல் பரிசு பெற்றவர். இங்கிலாந்தில் பேரும் புகழும் சூழ்ந்திருந்தாலும் எளிமையாகவே வாழ்ந்தவர். கர்வம் சிறிதும் இல்லாதவர், நகைச்சுவை உணர்வுள்ளவர். "யாதும் ஊரே” என்பதே அவரின் நோக்கம். இரண்டாம் உலகப்போரின்போது விஞ்ஞானிகள் ஜெர்மனியை விட்டு விரட்டப்பட்டார்கள். அவர்களுக்கு வேலை தரவும், புனர்வாழ்வு அளிக்கவும் ஒரு சங்கம் அமைத்தார். அவரை அறியாமலேயே பொதுப்பணியில் ஈடுபட்டார். தன்னுடைய அறிவுத் திறமையைப் பிறருக்கு அளித்து மகிழ்ந்தார். “இறை நம்பிக்கை மட்டுமே என்னை வழிநடத்தியது" என்று அடிக்கடி கூறுவார்.

அறிவியல் அறிவும், நம்பிக்கையும்,பிறர் நலனில் அக்கறையும் ஒன்றையொன்று சார்ந்திருந்தது.

டாக்டர் A. PJ. அப்துல் கலாம்

24.3.1999இல் ஜூனியர் விகடனில் அளித்த பேட்டி. "நான் ஒரு விஞ்ஞானியாக மட்டும் செயல்படவில்லை. இந்தியாவின் எதிர்கால மனிதர்கள் (காலத் தூண்கள்) எனப்படும் இளைஞர்களுக்குச் சரியான வழியினைக் காட்டவேண்டும். இலட்சிய விதைகளை அவர்கள் மனதில் விதைக்க ம் வேண்டும். நமது இளைஞர்களிடம் அர்ப்பணிப்பு உணர்வைத் தூண்ட வேண்டும்".

தாம் சொன்னதுபோல் வாழ்ந்தும் காட்டினார். தமது நேசக்கரம் நீட்டி, அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றினார். வாழ்ந்த மாபெரும் அறிவியல் விஞ்ஞானி. 

அறிவியல் எண்ணமும், அர்ப்பணிப்பு உணர்வும் உறவோடு செயல்பட்டது.

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

எல்லாவற்றையும் அறிவியலால் விளக்க முடியும். ஆனால், இது பொருள் தராது என்று வாழ்க்கையில், அறிவியலில் மட்டுமல்லாது, உலகளவில் முழுமையடைந்த சராசரி மனிதராகவும் திகழ்ந்தார். நெருக்கடியான பல சூழல்களில் உணர்வுகளை நன்கு கையாண்டதன் மூலம் அமைதியோடு பல அரிய கோட்பாடுகளை வழங்க முடிந்தது. மனிதநேயம் அவரோடு இணைந்து இருந்ததால் 20ஆம் நூற்றாண்டின் புகழ் பெற்ற மனிதர்களில் இவர் மாமனிதராகத் திகழ்கின்றார்.

அறிவியலோடு இணைந்து சென்ற மனிதநேயத்தால் மட்டுமே அறிவியல் அறிஞர்களால் மாபெரும் சாதனை நிகழ்த்த முடிந்தது.

அறிவியலின் மகத்தான முன்னேற்ற காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் நமது அறிவியல் சிந்தனையோடும், கோட்பாடுகளோடும் இறையரசின் விழுமியங்கள் எப்போதும் இணைந்தே பயணிக்க வேண்டும் . அறிவியல் தேடலும் ஆன்மிகத் தேடலும் நமக்கு நிறைவைத் தந்து நல்ல குணங்களோடு கூடிய மாமனிதர்களாக்கட்டும்.