நல்லெண்ணம் கொண்டு நல்வாழ்வு பெறுக! | அருட்பணி.செ.ரெ.வெனி இளங்குமரன் | Veritas Tamil

நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால் 
அல்லல் படுவ தெவன்? (379)

இன்பத்தைக் கண்டு நல்லது என்று ஏற்று நுகர்பவர், துன்பத்தைக் கண்டு அதை ஏற்று நுகராமல் துன்புறுவது ஏன்?

'எண்ணம் போல் வாழ்வு' என்பது தமிழ்ப் பண்பாட்டு மொழி. அவ்வாறு வாழ்ந்தவர்களுள் ஒருவர்தான் நலன். நாற்பத்தைந்து அகவை இருக்கக் கூடும். கடின உழைப்பாளி. மனைவி மகள். மகன் ஆகிய மூவரோடும் வாழ்ந்து வந்தார். அண்மையில்தான் மகளுக்குத் திருமணமானது. மகன் பள்ளி விடுதியில் தங்கி 12-ஆம் வகுப்பு படித்து முடித்து தேர்வு எழுதிவிட்டு விடுமுறைக்காக வந்திருந்தார். நலன் மனைவி வளனி வெறும் பக்தி மட்டுமன்று: ஆன்மீகச் செழுமை நிறைந்த பெண்.

நலனுக்கென்று ஒரு வீடு, ஒரு வண்டி, ஒரு குதிரை உண்டு. இவை தாம் அவருடைய சொத்து. குதிரை வண்டி ஓட்டி சவாரியில் கிடைக்கும் வருவாயைக் கொண்டு எளிய இனிய வாழ்க்கை நடத்தி வந்தார்.

அந்தக் குதிரை ஐந்தறிவுக்கும் கூடுதலாகவே அறிவு பெற்றிருந்தது. கடைக்குச் சென்று பொருள்கள் கூட வாங்கி வரும். யாராவது வணக்கம் சொன்னால் அது கனைத்துக் கொண்டே முன்னங்காலைத் தூக்கி வணக்கம் தெரிவிக்கும். ஒருமுறை தன்னைத் திருடிக் கொண்டு சென்றவனைச் சுமந்து கொண்டே காவல் நிலையத்துக்குப் போய்விட்டது.

ஞாயிற்றுக் கிழமைகளில் நலன் குடும்பத்தாரோடு குதிரையும் கோயிலுக்குச் செல்லும், தூய அந்தோனியார் புதுமையில் வரும் குதிரை போன்று இதுவும் திருப்பலி எழுந்தேற்ற நேரத்தில் முன்னங்கால்களை மடக்கி பக்தியாக வணங்கும்; அது, காண்போரின் உள்ளத்தைக் கவர்ந்திழுக்கும். நலன், வளனி குடும்பத்தைப் பார்த்து வியந்து பாராட்டுவோரும் அவ்வூரில் உண்டு; உள்ளத்தில் பொறாமை கொண்டு வெறுப்போரும் உண்டு.

அந்த மாலை வேளையில் குதிரை வண்டியோடு வீடு திரும்பினார் நலன். நாள் முழுவதும் வெயிலில் உழைத்ததனால் பெருங்களைப்பு. குதிரையைப் பிடித்துக் கட்டி விட்ட எண்ணத்தில் அயர்ந்து உறங்கி விட்டார்.

அதிகாலையில் கண்விழித்துப் பார்த்தார். குதிரையைக் காணவில்லை. செய்தி ஊருக்குள் தீ போல் பரவியது. துக்கம் விசாரிக்கவும் ஆறுதல் கூறவும் பலரும் வந்து சென்றனர். 'ஐயோ, இப்படி உங்க வாழ்க்கையில் ஒரு கெட்டது நடந்து விட்டதே' என்று பலரும் கூறினர். 'நல்லதோ கெட்டதோ யார் அறிவார்; கடவுளின் திருவுளம் நிறைவேற வேண்டும்' இதுதான் நலனுடைய மறுமொழி.

இனி கூலி வேலைக்குச் சென்றுதான் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று எண்ணினார். புதிய தொழில் முறையில் ஈடுபட்டார். ஏழு நாள்களுக்குப் பிறகு, தன் குதிரை பத்துக் காட்டுக் குதிரைகளோடு வீட்டுக்கு வந்திருப்பதைப் பார்த்தார். குதிரைகள் பணிந்து வணங்கின.

செய்தி மீண்டும் பரவியது. 'உனக்கு என்னப்பா, ஒரு குதிரைக்கு இப்போ பதினொரு குதிரைகள் இருக்கு, ம்... உன் நேரம், நல்லது நடந்திருக்கு' என்று பலரும் சொன்னார்கள். ‘நல்லதோ கெட்டதோ யார் அறிவார்; கடவுளின் திருவுளம் நிறைவேற வேண்டும்' என்றார் நலன். 

குதிரைகளைக் கொண்டு பல தொழில் புரிந்து பெருவாரியாக பொருள் ஈட்டினார் நலன். ஒருநாள் நலன் மகன் ஒரு காட்டுக் குதிரைமேல் ஏறி மிக வேகமாக ஒட்டிக் கொண்டிருந்த வேளையில் திடீரென கீழே விழுந்து விட்டான். இடது கையிலும் வலது காலிலும் பெரிய சுட்டு. வாய்ப் பேச முடியாத அளவுக்கு முகத்திலும் பெருங்காயம்.

'ஐயோ... உன் கெட்ட நேரம் உன் ஒரே மகனுக்கு இப்படி கெட்டது நடந்துவிட்டதே! என்று ஊர் மக்கள் பலரும் பல்வேறு பின்னணிகளோடு புலம்பினர். 'நல்லதோ கெட்டதோ, யார் அறிவார்; கடவுளுடைய திருவுளம் நிறைவேற வேண்டும்' என்பதை உறுதியாக அறிவித்தார் நலன்.

நாள்கள் ஒடின. திடீரென ஒருநாள் அரசுப் படை வீரர்கள் குதிரைகளில் வந்தார்கள். 'போர் நடக்கவிருக்கிறது. எனவே வீடுகளிலுள்ள இளைஞர் எல்லாரும் போர் முனைக்கு வரவேண்டும்' என்று ஒலிப்பெருக்கியில் அறிவித்துவிட்டு வீடு புகுந்து இளைஞர்களை எல்லாம் இழுத்துச் சென்று விட்டனர். நலன் மகனின் கையிலும் காலிலும் கட்டு இருந்ததால் அவனை அழைத்துச் செல்லவில்லை.

ஊர் மக்கள் மீண்டும் வந்தார்கள். 'உன் நல்ல நேரம் உன் மகன் தப்பித்துக் கொண்டான். நீ கொடுத்து வைத்தவன். நாங்க கொடுத்து வச்சது அவ்வளவு தான்' என்று கண்ணீர் மல்கக் கூறினார்கள்.

மீண்டும் நலன் பேசுவதற்கு வாய் திறந்தபொழுது அங்குக் கூடியிருந்த மக்கள் எல்லாரும் சேர்ந்து சொன்னார்கள். 'நல்லதோ கெட்டதோ யார் அறிவார்; கடவுளின் திருவுளம் நிறைவேற வேண்டும்'.

நலன் புன்னகைத்தார். அந்தப் புன்னகையில் விண் தூதர் தோன்றினார். அனைவரும் வியந்து பார்த்தனர். தூதர் நலனைப் பாராட்டினார். 'நீர் கடவுளுக்கு உகந்தவராக வாழ்ந்து வந்துள்ளீர். இப்போ நீர் விரும்பிக் கேட்கிற நல்லதைக் கடவுள் தரவிருக்கிறார் கேளும்!' என்றார்.