நல்ல எண்ணங்களை நம் வசமாக்குவோம்! | அருட்சகோதரி ஜான்சி FBS | Veritas Tamil

நம் எண்ணங்கள் நம்மை உயர்த்தும் ஏணிப்படிகள். நாம் எதை நோக்கி பயணிக்கிறோம் என்பதை நமது எண்ணங்கள்தான் தீர்மானிக்கின்றன. நாம் எதுவாக நினைக்கிறோமோ அதுவாகவே மாறுகிறோம். நாம் எப்படி நம்மை மதிப்பீடு செய்கிறோமோ அப்படியே உலகமும் நம்மை மதிப்பீடு செய்கிறது. நாம் நல்லவர்கள் என்று நினைக்கும்போது நம்மால் நன்மையை மட்டுமே செய்ய முடிகிறது. அதே சமயத்தில் தீமையை செய்ய முற்படும்போது எந்த நன்மையையும் நம்மால் செய்ய முடிவதில்லை. நாம் உயரத்தை நோக்கி நடைபோடுவதற்கும், தரம் தாழ்ந்து போவதற்கும் நமது எண்ணங்கள்தான் முழுமுதற்காரணமாக அமைகின்றன. எனவே நமது எண்ணங்களை நேர்மறையாக்குவோம். அப்போது நம்மிடமுள்ள தீய எண்ணங்கள் நம்மை தீண்டிப் பார்க்க வாய்ப்பில்லை. நல்ல எண்ணங்கள் நம்வசமானால் நாம் மட்டுமல்ல நானிலமெங்கும் சிறப்புறும். எனவே நல்ல எண்ணங்கள் நம்மை ஆளுகை செய்யட்டும். அதுவே நமது ஆர்ப்பரிப்பாக மாறட்டும்.
ஒரு விவசாயி தன் வயலில் விதைத்துக் கொண்டிருக்கும்போது சரசரவென்ற சத்தம் கேட்டது. தனக்கு முன்பாக இரண்டு பாம்புகள் இருப்பதை கண்டு திடுக்கிட்டு பயந்த வண்ணமாய் நின்றார் விவசாயி. இருந்தாலும் பயத்தை காட்டிக் கொண்டால் நாம் உயிர் தப்ப முடியாது, எப்படியாவது பாம்பை அடித்தே தீர வேண்டும் என்ற எண்ணத்தில் விதைகளை கீழே வைத்துவிட்டு அருகில் உள்ள குச்சியை எடுத்துக் கொண்டு ஓடினார். அவர் கையில் குச்சியை எடுத்த சமயத்தில் இரண்டு பாம்புகளுக்கும் இடையே உரையாடல் ஒன்று நடைபெற்றது. ஒரு பாம்பு , இன்று நாம் உயிர் பிழைப்பது முடியாத காரியம் என்று சொன்னது. மற்றொரு பாம்பு நிச்சயம் என்னால் உயிர் பிழைக்க முடியும் என்று சொல்லிக் கொண்டே சரசரவென ஓட்டம் பிடித்தது. உயிர் பிழைப்பேன் என்று சொல்லி ஓட்டம் பிடித்த பாம்பு தன் உயிரைக் காத்துக் கொண்டது. தான் பிழைக்க மாட்டேன் என்று எண்ணிய பாம்பு அடிபட்டு உயிரை இழந்தது. எண்ணங்களுக்கேற்றாற்போல்தான் நமது வாழ்வும், செயலும் அமைகிறது. எனவே நல்ல எண்ணங்களால் நம்மை நிரப்பி நாளும் நல்லது செய்து வாழ்வோம்.
எழுத்து
அருட்சகோதரி ஜான்சி
Daily Program
