நாளும் நல்லதைச் செய்து நன்றியுணர்வை நமதாக்குவோம்! | அருட்சகோதரி ஜான்சி FBS | Veritas Tamil

நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொருநாளும் பலவிதமான நன்மைகளை பெற்றுக் கொள்கிறோம். நாம் உண்ணுகின்ற உணவு, உடுத்தும் உடை, மருத்துவ வசதி, ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்லும் பயணம் இன்னும் சொல்லப்போனால் காலை முதல் இரவு வரை நம் வாழ்வில் நடைபெறுகின்ற அனைத்து வி~யங்களையும் கவனித்தால் நாம் மற்றவர்களைச் சார்ந்து இருக்கிறோம் என்ற உண்மை புலப்படும். சில காரியங்களில் நேரிடையாகவும், ஏராளமான காரியங்களில் மறைமுகமாகவும் மற்றவர்களைச் சார்ந்து இருக்கிறோம். எனவே நன்றியுணர்வு என்பது நம் வாழ்க்கை முழுக்க முழுக்க பிறரைச் சார்ந்திருக்கிறது என்ற விழிப்புணர்வின் வெளிப்பாடு. நாம் உயிரோடு இருப்பதும், உயிரோட்டத்தோடு வாழ்வதும் சாத்தியமாக இருப்பதற்குக் காரணம் கடவுளும் நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களும், இயற்கையும் தங்களது கடமைகளைச் சரிவரச் செய்வதால் தான் என்பதை புரிந்து கொண்டு நன்றியுள்ளவர்களாக வாழ நம்மை பயிற்றுவிப்போம். 

பல சமயங்களில் நாம் பெற்றுக் கொண்ட நன்மைகளுக்கு நன்றி கூறுவதற்கு பதிலாக நமக்கு கிடைக்காததை நினைத்து வருத்தப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இத்தகைய நிலை நம்மில் நீடித்தால் நாம் நன்றி மறந்தவர்களாக மாறிவிடுவோம். நன்றியுணர்வு பொங்கி வழிகையில் வாழ்க்கையே கொண்டாட்டமாக மாறிவிடும்;. சொல்லுதலும், குற்றம் கண்டுபிடித்தலும் தானே மறைந்துவிடும். நன்றி என்பது கொடுத்தல் வாங்கல் அல்ல. நன்றி என்பது மனமார்ந்ததாக இருக்க வேண்டும். ஒரு எளிய நன்றி பெருந்தன்மையானது. எனவே நம் வாழ்நாள் முழுவதும் பெற்றுக் கொண்ட நலன்களுக்கெல்லாம் இறைவனுக்கு நன்றி சொல்வோம். நம்மைச்சுற்றி வாழும் நபர்களுக்கும், பெற்றுக் கொண்ட அனுபவங்களுக்கும் மனமார்ந்த நன்றி கூறுவோம். 
உலகின் மிகப் பெரிய அறிவியல் அறிஞர்களில் ஒருவர் தாமஸ் ஆல்வா எடிசன். ஏறத்தாழ ஈராயிரம் கருவிகளைப் புதிதாகக் கண்டுபிடித்து மனித வாழ்விற்கு வளம் சேர்த்தவர். 1914ம் ஆண்டு தீ விபத்து நடந்தது. அப்போது அவருக்கு வயது 67. அவரது பரிசோதனைக் கூடம் திடீரென தீ விபத்தில் எரிந்து அழிந்தது. அவர் பல்லாண்டுகளாய் எடுத்து வைத்திருந்த குறிப்புகள் எல்லாம் சாம்பலாயின. எடிசனின் மகன் சார்லஸ் கொழுந்து விட்டெரிந்த நெருப்புச் சுடர்களைப் பார்த்து ஓடி வந்தான். தனது தந்தை எங்கே என்று பதற்றத்தோடு தேடினான். சிறிது தொலைவில் நின்று அமைதியாக அவர் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார். மறுநாள் காலையில் சாம்பல் குவியலாய் மாறியிருந்த பரிசோதனைக் கூடத்தைப் பார்த்து விட்டு 'துன்பத்தில் ஒரு பெரும் பயன் இருக்கிறது. நம் தவறுகள் எல்லாம் எரிந்து விடுகின்றன. நமது பணிகளை நாம் மீண்டும் புதிதாகத் தொடங்கலாம். அதற்காக நாம் இறைவனுக்கு நன்றி கூற வேண்டும்." என்று எடிசன் சொன்னார். நாமும் தினமும் பெற்றுக்கொள்ளும் நன்மைகளுக்காக இறைவனுக்கு நன்றி கூறுவோம். நன்றியுள்ளம் கொண்டவர்களாக வாழ நம்மை பயிற்றுவிப்போம்.


நன்றி என்பது கொடுத்தல் வாங்கல் அல்ல. நன்றி என்பது மனமார்ந்ததாக இருக்க வேண்டும்.