சமாதானம் நாம் சொல்வதிலிருந்தும் செய்வதிலிருந்தும் தொடங்குகிறது | Veritas Tamil

அகஸ்டீனியர்களுக்கு திருத்தந்தை கூறும் செய்தி: "சமாதானம் நாம் சொல்வதிலிருந்தும் செய்வதிலிருந்தும் தொடங்குகிறது"
புனித தாமஸ் ஆஃப் வில்லானோவா ஆகஸ்டீனிய மாகாணத்திற்கு திருத்தந்தை லியோ ஒரு காணொலி செய்தியை அனுப்பினார்.
வத்திக்கான் செய்திகளின்படி, புனித அகஸ்டீனின் திருநாளை முன்னிட்டு, திருத்தந்தை லியோ XIV அமெரிக்காவில் உள்ள புனித தாமஸ் ஆஃப் வில்லானோவா ஆகஸ்டீனிய மாகாணத்திற்கு, புனித அகஸ்டீன் பதக்கம் வழங்கியதற்காக தனது நன்றியைத் தெரிவித்து காணொலி செய்தி அனுப்பினார்.
"ஒரு ஆகஸ்டீனியனாக அங்கீகரிக்கப்படுவது ஒரு மதிப்புமிக்க மரியாதை" என்று அவர் கூறினார். "நான் இப்போதிருக்கும் நிலையில் பல விஷயங்களுக்கு புனித அகஸ்டீனின் உள்ளுயிருக்கும், போதனைகளுக்கும் கடமைப்பட்டுள்ளேன். உங்கள் வாழ்க்கையில் உண்மை, ஒற்றுமை, அன்பு ஆகிய மதிப்புகளுக்கு ஆழமான அர்ப்பணிப்பைக் காண்பிக்கும் பல வழிகளுக்காக உங்கள் அனைவருக்கும் நான் நன்றி கூறுகிறேன்."
புனிதரின் வாழ்க்கையைப் பற்றிப் பேசுகையில், அகஸ்டீனின் பயணம் "நமது வாழ்க்கையைப் போலவே, சோதனைகளும் தவறுகளும் நிறைந்தது", ஆயினும்கூட, கடவுளின் அருளினாலும், அவரது தாயார் மோனிகாவின் ஜெபங்களினாலும், அவரைச் சுற்றியுள்ள சமூகத்தின் சாட்சியத்தினாலும், அவர் "அவரது அமைதியற்ற இதயத்திற்கு அமைதிக்கான வழியைக்" கண்டார்.
அகஸ்டீனின் சாட்சியானது ஒவ்வொரு கிறிஸ்தவனையும் கடவுள் தங்களுக்கு கொடுத்த கொடைகளை அங்கீகரித்து, "கடவுளுக்கும் நமது அண்டை வீட்டாருக்கும் அன்பான சேவையில்" அவற்றை வழங்க அழைக்கிறது.
ஆகஸ்டீனியர்களின் இருப்பு அன்பான சேவையின் நீண்ட பாரம்பரியம்.
பின்னர் அவர் பிலடெல்பியாவில் ஆகஸ்டீனியர்களின் இருப்பைப் பற்றிப் பேசினார். இது அமெரிக்காவில் உள்ள மிகப் பழமையான கத்தோலிக்க சமூகங்களில் ஒன்றாகும். 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் குடியேறியவர்களுக்குச் சேவை செய்வதில் அருட்தந்தையர்களான மேத்யூ கார் மற்றும் ஜான் ரோசிட்டர் ஆகியோரின் பணிவாழ்வின் ஆர்வத்தை அவர் நினைவு கூர்ந்தார். அதே உள்ளுயிரோடு "அன்பான சேவையின் பாரம்பரியத்தைத் தொடர இன்று நம்மை அழைக்கிறது" என்று அவர் கூறினார்.
"நாம், நம் அண்டை வீட்டாரை நேசிக்க வேண்டும் என்று இயேசு நற்செய்தியில் நமக்கு நினைவுபடுத்துகிறார்". மேலும் அனைவரையும் கிறிஸ்துவின் கண்களால் பார்க்கவும் "அவரில் சகோதர சகோதரிகளாக" நமது அடையாளத்தை மீண்டும் கண்டறியவும் வலியுறுத்தினார்.
அகஸ்டீனின் வார்த்தைகளை மேற்கோள் காட்டி - "உங்கள் இதயத்தை உங்கள் காதுகளில் வைத்திருக்க வேண்டாம், ஆனால் உங்கள் காதுகளை உங்கள் இதயத்தில் வைத்திருக்கவும்" -ஆகஸ்டீனிய குடும்பத்தில் ஒருவருக்கொருவர் செவிகொடுக்கும் மனப்பான்மையை ஏற்றுக்கொள்ள அழைத்தார். "நாம் பேசுவதற்கு முன், நாம் கேட்க வேண்டும்," என்று அவர் கூறினார்.
அமைதியைக் கொண்டுவரக்கூடிய கடவுளின் அன்பான குரலைக் கேட்க, உலகின் சத்தத்தையும் பிளவுகளையும் தவிர்க்கும்படி அவர் அனைவரையும் ஊக்குவித்தார். தனது உரையை நிறைவு செய்கையில், ஆகஸ்டீனிய குடும்பத்தை நல்ல ஆலோசனை என்னும் கன்னி மரியாவிடம் ஒப்படைத்தார். "கடவுள் உங்கள் அனைவரையும் ஆசீர்வதித்து அமைதியற்ற உங்கள் இதயங்களுக்கு அமைதியைக் கொண்டுவருவாராக. மேலும் நீங்கள் அன்பின் சமூகத்தை, மனதாலும் இதயத்தாலும் ஒன்றிணைந்து, கடவுளின்மீது ஆர்வம் கொண்டு, தொடர்ந்து கட்டியெழுப்ப உதவுவாராக" என்று ஜெபித்தார்.
Daily Program
