ஆண்டவரைப் புறக்கணியாமல் அவரையே அடித்தளமாக்குவோம்! | அருட்பணி. குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

நற்செய்தி வாசகம்
மு.வா: தோபி: 1: 1,2-3; 2: 1-8
ப.பா: திபா 112: 1-2. 3-4. 5-6
ந.வா:மாற்: 12: 1-12

நம்மிலே பலருடைய மன வேதனைக்கும் காயங்களுக்கும் காரணம் நாம் யாரை அன்பு செய்கிறோமா அல்லது யாருக்காக உழைக்கிறோமா அவர்களாலேயே  புறக்கணிப்படுதலும் அவமானப்படுத்தப்படுதலுமே. இதற்கு யாரும் விதிவிலக்கில்லை. எல்லாரும் ஏதாவது ஒரு வகையில் புறக்கணிக்கப்படுகிறோம். ஆனால் நம் ஆண்டவர் இயேசு கூறுகிறார் இவ்வாறு புறக்கணிக்கப்படும் நாம் ஒரு நாள் நிச்சயம் உயர்த்தப்படுவோம். அதற்கு நாம் நற்செயல்களிலும் அன்பிலும் நிலைத்திருக்க வேண்டும். நம் ஆண்டவர் இத்தகையவர் தான். நாம் அவரை புறக்காணித்தாலும் அவரன்பு குறைவதில்லை.

இன்றைய நற்செய்தியில் நாம் காணும் திராட்சை தோட்ட உரிமையாளர் புறக்கணிக்கப்பட்டவராய் இருக்கிறார். குத்தகைக்காரர்கள் அத்திராட்சை தோட்ட உரிமையாளரின் பொறுமையையும் நற்குணங்களையும் புறக்கணித்தவர்களாக இருந்தார்கள். அவருக்குரிய பங்கை கொடுக்கவில்லை. அவர் அனுப்பிய வேலையாட்களை அவமானப்படுத்தினர். இறுதியில் அவருடைய மகனைக் கொன்றனர். இறுதியில் தண்டிக்கப்பட்டனர். இத்தண்டனை உரிமையாளரின் மகனைக் கொன்றதற்காக அல்ல. மாறாக அவரின் பொறுமையை நம்பிக்கையை அவர் கொடுத்த வாய்ப்புகளை  புறக்கணித்ததற்காக.

நம் வாழ்வில் ஆண்டவர் நம்மிடம் பொறுமையாகவும் நம்மேல் நம்பிக்கை உடையவராகவும் நமக்கு வாய்ப்புகளை தருபவராகவும் இருக்கிறார். அவற்றை மதிக்காது புறக்கணித்தால் இறுதியில் அந்தக் குத்தகைக் காரர்களின் நிலைதான் நமக்கும். இது நாமே நமக்கு தட்டடணைத் தீர்ப்பு எழுதிக்கொள்வதற்கு சமம். எனவே ஆண்டவரை புறக்கணிக்காது அவரின் அன்பை புறக்கணிக்காது அவல்  விரும்பும் படி வாழ்ந்து நிலைவாழ்வு பெற முயல்வோம். 

 இறைவேண்டல் 
இறைவா! உமதன்பை  புறக்கணத்து மனம் போன போக்கில் வாழாமல் எம்மைக் காத்தருள்வீராக. ஆமென்.

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை  பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்