தவக்கால விழிப்புணர்வு - இளம் மாணவர்களுக்கு ஊக்கம் ! | Veritas Tamil
தவக்காலத்தின் மூன்றாவது வாரத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த முயற்சிக்கு, மாஹிம் மேற்கில் உள்ள கனோசா தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியை அருட்சகோதரி ஷீலா டிசோசா தலைமை தாங்கினார். மறைக்கல்வி ஆசிரியர் திருமதி. சலோமி டிசோசா மற்றும் முன்னாள் ஆசிரியர் நினெட் டிசோசா ஆகியோருடன் இணைந்து, இளம் கத்தோலிக்க மாணவர்கள் குழுவினர் புனித மைக்கேல் பங்கு மற்றும் வெற்றியின் அன்னை (Our Lady of Victories) பங்குகளைச் சேர்ந்த நோயாளிகளையும் முதியவர்களையும் சந்தித்தனர்.
பெற்றோரின் அனுமதியுடன், குழந்தைகள் தங்கள் குடும்பத்தினர் வழங்கிய பழங்களைக் கொண்டு சென்றனர். வீடுகளிலேயே முடங்கியிருப்பவர்களுடன் சிறிது நேரம் உரையாடியும், புன்னகையைப் பகிர்ந்தும், அவர்களுக்காகப் செபித்தும் நேரத்தைச் செலவிட்டனர்.
இந்த அனுபவம் மாணவர்களுக்கு ஒரு சிறந்த வாழ்வியல் பாடமாக அமைந்தது. குழந்தைகளின் இந்த எளிய அன்பான செயல்களைக் கண்டு, முதியவர்கள் நெகிழ்ச்சியுடன் தங்களது நன்றிகளையும் ஆசிகளையும் வழங்கினர்.
இத்தாலியில் புனித மகதலேனா (St. Magdalene of Canossa) என்பவரால் நிறுவப்பட்ட கனோசியன் அருட்சகோதரிகளின் சபையின் விரிவான நோக்கத்தை இந்த விழிப்புணர்வுப் பணி பிரதிபலிக்கிறது. கல்வி, மறைக்கல்வி மற்றும் ஏழைகளுக்குச் சேவை செய்வதில் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட இந்த அருட்சகோதரிகள், சமூகத்தின் மேய்ப்புப்பணித் தேவைகளுக்குத் தொடர்ந்து பதிலளித்து வருகின்றனர்.
இந்த சேவை உணர்வின் தொடர்ச்சியாக, முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நலம் விரும்பிகள் உள்ளிட்ட 20 பேர் கொண்ட 'லே கனோசியன்கள்' (Lay Canossians) குழுவினர், மார்ச் 19, 2026 அன்று தலாசரி மிஷனுக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளனர். அருட்சகோதரி மேகி வாஸின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெறும் இந்த நிகழ்வு , சபையின் பணிகளில் பொதுநிலையினர் கொண்டுள்ள ஆர்வத்தைப் பறைசாற்றுகிறது.
இறுதியாக ,தவக்கால விழிப்புணர்வு மற்றும் கிராமப்புற சேவைகள் மூலம், கனோசியன் அருட்சகோதரிகள் நம்பிக்கை, இரக்கம் மற்றும் ஒற்றுமையில் வேரூன்றிய ஒரு பணியைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். குறிப்பாக சமூகத்தில் நலிந்தவர்கள், கைவிடப்பட்டவர்கள் மற்றும் கடைக்கோடியில் இருப்பவர்களைச் சென்றடைவதையே அவர்கள் இலக்காகக் கொண்டுள்ளனர்.