திருஅவையின் உதவியை வேண்டும் லெபனோன் அமைச்சர் ! | Veritas Tamil

தெற்கு லெபனோனில் இடைவிடாத குண்டுவீச்சுகளுக்கு உள்ளாகியுள்ளதால், ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இந்நிலை அங்கே வளர்ந்து வரும் மனிதாபிமான நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

இஸ்ரேலிய எல்லைக்கு அருகே மீண்டும் ஏற்பட்டுள்ள மோதல்களுக்கு மத்தியில், தெற்கு லெபனோனில் கிறிஸ்தவர்களின் இருப்பைப் பாதுகாப்பதில் உதவி கோரி, அதன் வெளியுறவுத்துறை அமைச்சர் யூசுப் ராகி அவர்கள் திருப்பீடத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இப்பகுதி இடைவிடாத குண்டுவீச்சுகளுக்கு உள்ளாகியுள்ளதால், ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இந்நிலை அங்கே வளர்ந்து வரும் மனிதாபிமான நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

மார்ச் 10, செவ்வாயன்று இடம் பெற்ற தொலைபேசி உரையாடலில், பன்னாட்டு உறவுகளுக்கான திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்களிடம், தூதரக ரீதியாக தலையிட்டு மேலும் மக்கள் இடம்பெயர்வதைத் தடுக்க உதவுமாறு லெபனோன் வெளியுறவுத்துறை அமைச்சர் ராகி அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

மோதல்களைக் குறைப்பதற்கும் பதற்றத்தைத் தணிப்பதற்கும் திருப்பீடம்  எடுத்து வரும் தொடர்ச்சியான முயற்சிகளைப் உறுதிப்படுத்திய பேராயர் காலகர் அவர்கள், லெபனோன் நாட்டு மக்களுக்காக இறைவேண்டல் செய்வதாக உறுதியளித்து தனது ஒன்றிப்பையும் வெளிப்படுத்தியுள்ளார்.

கடந்த திங்கள்கிழமை தெற்கு லெபனோனில் அமைந்துள்ள ஒரு கத்தோலிக்கக் கிராமமான குலாயா (Qlayaa) பகுதியில் நிகழ்ந்த பீரங்கித் தாக்குதலில், தனது பங்கு மக்களுக்கு உதவிக் கொண்டிருந்தபோது மரோனைட் கத்தோலிக்க அருள்பணியாளர் பியர் எல்-ராகி அவர்கள் கொல்லப்பட்ட அந்தத் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்தே, இந்த உதவி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பலியான பங்குத்தந்தை மற்றும் உயிரிழந்த அப்பாவி மக்களுக்காகவும், அந்தப் பகுதியில் மீண்டும் அமைதி நிலவவும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் தொடர்ந்து இறைவேண்டல் செய்து வருகிறார்.

மத்திய கிழக்கு நாடுகளில் அதிக எண்ணிக்கையிலான கிறிஸ்தவர்கள் வாழும் நாடான லெபனோனின் தனித்துவமான அடையாளத்தைத் தக்கவைக்க அங்கிருக்கும் கிறிஸ்தவர்கள் பெரும் முயற்சி எடுத்து வருகின்றனர். இருப்பினும், தற்போதைய சூழலில் அந்நாட்டின் எதிர்காலம் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.

நன்றி வத்திக்கான் செய்தி