பயத்தை அகற்றி அன்பின் கதவுகளைத் திறப்போம்! - திருத்தந்தை பதினான்காம் லியோ | Veritas Tamil

இயேசு கிறிஸ்துவின் வழியாக இறைவனின் மறைபொருளை நாம் அணுகவும், மறைநூலின் உண்மைகளை உணரவும், சட்டத் திட்டங்களைக் கடந்து இறை அனுபவத்தைப் பெறவும் தூய ஆவியார் நமக்கு உதவுகிறார் என்று திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கூறினார்.

மே 24, ஞாயிறன்று, புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான நம்பிக்கையாளர்களுக்கு வழங்கிய அல்லேலூயா வாழ்த்தொலிச் செய்தியில் இவ்வாறு திருத்தந்தை மொழிந்தார்.

தொடக்கக்கால திருஅவையின் மீது பொழியப்பட்டு, இன்றும் நம் ஒவ்வொருவருக்கும் வாழ்வின் ஒளியாகவும் வலிமையாகவும் வழங்கப்பட்டு வரும் தூய ஆவியாரின் அருட்கொடையை எண்ணிப் பார்க்க இந்த தூய ஆவியார் பெருவிழா நமக்கு அழைப்பு விடுக்கிறது என்று  திருத்தந்தை குறிப்பிட்டார்.

மேலும் இன்றைய திருவழிபாடு தூய ஆவியாரை கதவுகளைத் திறப்பவர் என்ற உருவகத்தின் மூலம் நமக்கு அறிமுகப்படுத்துகிறது என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை, சீடர்கள் பயத்தினால் கதவுகளைப் பூட்டிக்கொண்டு அமர்ந்திருந்தபோது,  ஆவியார் பலத்த காற்றாக வந்து அந்தக் கதவுகளைத் திறந்து, உயிர்த்த கிறிஸ்துவின் நற்செய்தியை உலகிற்கு அறிவிக்க அவர்களைத் தூண்டினார் என்றும்  எடுத்துக்காட்டினார்.

தொடர்ந்து சீடர்கள் பயத்தினால் முடங்கிக் கிடக்காமல், உலகம் எதிர்கொள்ளும் சவால்களுக்குத் துணிவுடன் பதிலளிக்கவும், அனைவருக்கும் இடமளிக்கும் ஒரு திறந்த இல்லமாக திருஅவை மாறவும் தூய ஆவியார்  வழிசெய்கிறார் என்று கூறிய திருத்தந்தை, நம்மிடம் உள்ள சுயநலம் மற்றும் தவறான எண்ணங்களை அகற்றி, வேற்றுமைகளைத் தாண்டி, நாம் அனைவரும் சகோதரத்துவத்துடன் வாழ அவர் நம்மை உருமாற்றுகிறார் என்றும் எடுத்துரைத்தார்.

இறுதியாக, மூடியிருக்கும் அனைத்துக் கதவுகளும் திறக்கப்படவும், அமைதி நிறைந்த ஒரு சகோதரத்துவ உலகைக் கட்டியெழுப்பவும் தூய ஆவியாரின் அருளை வேண்டி தனது அல்லேலூயா வாழ்த்தொலிச் செய்தியை திருத்தந்தை நிறைவு செய்தார். 

Tamil Survey Popup Image