திருத்தந்தை பிரான்சிஸ் கல்வி நிறுவனம் | Veritas tamil
கனடாவின் தூய ஜெரோம் பல்கலைக்கழகம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பணிகளையும் போதனைகளையும் முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் 'திருத்தந்தை பிரான்சிஸ் நிறுவனம்' என்ற புதிய கல்வி அமைப்பைத் தொடங்கியுள்ளது. இத்தகைய நோக்கத்தில் தொடங்கப்பட்ட முதல் நிறுவனம் இதுவாகும். மறைந்த திருத்தந்தையின் வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டு, பல்வேறு பாடநெறிகள், கருத்தரங்குகள், ஆன்மீகப் பயிற்சிகள் மற்றும் உருவாக்கத் திட்டங்களை இந்நிறுவனம் செயல்படுத்தவுள்ளது.
இது குறித்து மே 18, திங்களன்று, வத்திக்கான் செய்திக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில், தூய ஜெரோம் பல்கலைக்கழகத்தின் தலைவர் டாக்டர் பீட்டர் மீஹான் அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் போதனைகள் 'இக்காலத்தின் தேவை' என்றும், அந்த ஆன்மீக மரபினை உயிர்ப்புடன் முன்னெடுத்துச் செல்வதே இந்த நிறுவனத்தின் கடமை என்றும் எடுத்துக்காட்டினார்.
நவீன உலகின் சவால்களையும் இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் கோட்பாடுகளையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆழமாக அறிந்திருந்தார் என்றும், புலம்பெயர்ந்தோர் நலன், இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் பாகுபாடின்றி அனைத்து மக்களையும் அரவணைத்தல் போன்றவை திருத்தந்தையின் முக்கியமான பணிகளாகும் என்றும் டாக்டர் மீஹான் அவர்கள் கூறினார்.
மேலும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் முன்னிலைப்படுத்திய 'கூட்டுப்பயணம்' மற்றும் 'இரண்டாம் வத்திக்கான் சங்க முடிவுகளை அமல்படுத்துதல்' போன்ற கருப்பொருள்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சிந்தனைகளுக்கு மேலும் வலுசேர்ப்பதாக குறிப்பிட்ட மீஹான் அவர்கள், இந்த அடிப்படை நோக் கங்களே அந்த நிறுவனத்தின் செயல்பாடுகளின் மையப்புள்ளியாக அமையும் என்றும் கூறினார்.இந்த ஆண்டு இறுதியில் திறக்கப்பட உள்ள இந்த நிறுவனம், 'கத்தோலிக்க தலைமைத்துவ சான்றிதழ்' (Certificate in Catholic Leadership) படிப்பை வழங்குவதோடு, முழுநேர ஆராய்ச்சி அறிஞர்களையும் (Research fellows) பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்ட இந்த அமைப்பு, கத்தோலிக்க திருஅவைக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் சேவை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது; எனவே, கத்தோலிக்கர் அல்லாதவர்களையும் இது அன்புடன் வரவேற்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.