நற்செய்தியின் வாழும் சாட்சிகளாக மாற இளைஞர்களுக்கு திருத்தந்தை அழைப்பு! | Veritas Tamil
உறுதிப்பூசுதல் அருட்சாதனத்தை நிறைவேற்றுவது ஒரு ஆயரின் மிகப்பெரிய மகிழ்ச்சிகளில் ஒன்று என்றும், ஏனெனில் தூய ஆவியின் வழியாக இளைஞர்கள் இயேசுவை உண்மையாகப் பின்பற்றுவதற்கான வலிமை, ஆர்வம் மற்றும் துணிவைப் பெறுகிறார்கள் என்றும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கூறினார்.
உரோமைக்குத் திருப்பயணம் மேற்கொண்ட ஜெனோவா உயர்மறைமாவட்டத்தைச் சேர்ந்த ஏறத்தாழ 1,000 இளைஞர்களை புனித பேதுரு பெருங்கோவிலில் சந்தித்தபோது இவ்வாறு திருத்தந்தை கூறினார்.
அண்மையில் வரவிருக்கும் தூய ஆவியார் பெருவிழாவைக் குறித்து பேசிய திருத்தந்தை, திருத்தூதர்கள் எவ்வாறு தூய ஆவியைப் பெற்று, இறைவனின் அன்பை உலகிற்குப் பறைசாற்ற அனுப்பப்பட்டார்கள் என்பதை எடுத்துக்காட்டியதுடன் இளைஞர்கள் தங்கள் குடும்பங்கள், நட்பு வட்டாரங்கள் மற்றும் சமூகங்களில் நற்செய்தியின் வாழும் சாட்சிகளாக மாற வேண்டும் என்று அவர்களை ஊக்கப்படுத்தினார்.
மேலும், உறுதிப்பூசுதல் பெற்ற பிறகு பல இளைஞர்கள் பங்குத்தள செயல்பாடுகளிலிருந்து விலகி விடுகிறார்கள் என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை, இளைஞர்கள் நம்பிக்கையில் உறுதியாக இருக்குமாறும், திருஅவையில் தொடர்ந்து ஈடுபாட்டுடன் இருக்குமாறும் அவர்களைக் கேட்டுக்கொண்டார். இறுதியாக, நம்பிக்கைப் பயணத்தில் உறுதியாய் நிலைத்திருந்து, இறைவனின் நண்பர்களாகவும், சீடர்களாகவும், தூதுவர்களாகவும் வாழ்வதாக ஆண்டவருக்கு வாக்குறுதி அளிக்குமாறு இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தது தனது உரையை திருத்தந்தை நிறைவு செய்தார்.