அதிக மரங்களை நடுவதற்கு ஆயர் அழைப்பு | Veritas Tamil

 அதிக மரங்களை நடுவதற்கு ஆயர் அழைப்பு

செப்டம்பர் 1, 2025 அன்று கம்போடியாவின் தாஹேனில் உள்ள புனித கூசையப்பர்  தேவாலயத்தில் ஆயர்  என்ரிக் ஃபிகரேடோ படைப்பு பருவத்தைத் தொடங்கி வைக்கிறார். கம்போடிய ஆயர் ஒருவர், அனைத்து தரப்பு மக்களும் அதிக மரங்களை நடுவதன் மூலம் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

செப்டம்பர் 1, 2025 அன்று வடமேற்கு கம்போடியாவின் தாஹேனில் உள்ள  புனித கூசையப்பர்  தேவாலயத்தில் படைப்பு பருவத்தைத் தொடங்கி வைத்து, பட்டாம்பாங்கின் அப்போஸ்தலிக் மாகாணத்தின் தலைவரான சேசு சபை ஆயர் என்ரிக் ஃபிகரேடோ அல்வர்கோன்சாலஸ் கூறினார்: “மரங்களை நட்டு, நெகிழி பயன்பாட்டைக் குறைப்பதன் மூலம் இயற்கை சூழலைப் பாதுகாப்பதில் அனைத்து சகோதர சகோதரிகளும் பங்கேற்கட்டும். இது இந்த பூமியில் வாழும் அனைத்து மனிதகுலத்தின் கடமையாகும்.”

இந்த நிகழ்வில் பாமர மக்கள் தலைவர்கள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் பட்டாம்பாங் மாகாணத்தில் உள்ள சிஹானூரிச் பௌத்த கிளையின் தலைவர் டாக்டர் வி. சோவிச் உட்பட பல மதத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

தொடக்கத்தில், ஆயர் ஆல்வர்கோன்சாலஸ், புத்த துறவிகள் மற்றும் கத்தோலிக்க அருட்தந்தையர்கள் ஒரு அடையாள மரியாதைச் செயலாக சிவப்பு துணியால் ஒரு மரத்தை அலங்கரித்தனர். பின்னர் அவர்கள் தேவாலய வளாகத்திற்குள் ஒரு ஊர்வலத்தில் இணைந்தனர். அதைத் தொடர்ந்து ஆயர்  துறவிகள் மற்றும் அருட்தந்தையர்கள் படைப்பின் பருவம் மற்றும் சுற்றுச்சூழல் பராமரிப்பின் முக்கியத்துவம் குறித்த பிரதிபலிப்புகளைப் பகிர்ந்து கொண்டனர்.  

படைப்புப் பருவம் ஐந்து வாரங்கள் நீடிக்கும். அதாவது படைப்பின் பராமரிப்புக்கான உலக ஜெப நாள் (செப்டம்பர் 1) முதல் புனித பிரான்சிஸ் அசிசியின் விழா (அக்டோபர் 4) வரை ஆகும். 

"படைப்புடன் அமைதி" என்ற 2025 ஆம் ஆண்டின் கருப்பொருளை திருவிவிலியத்தின்  எசாயா 32:14-18   பகுதியான ஊக்குவிக்கிறது. இது தரிசு, போரினால் பாதிக்கப்பட்ட நிலப்பரப்புகளை பசுமையான மற்றும் செழிப்பான நிலப்பரப்புகளாக மாற்ற பிரார்த்தனை மற்றும் செயலுக்கு அழைப்பு விடுக்கிறது. கத்தோலிக்க திருஅவையின் ஜூபிலி ஆண்டுடன் இணைக்கப்பட்ட இந்த பருவம், உலகின் ஏழ்மையான நாடுகளுக்கான கடன் நிவாரணத்திற்கான வேண்டுகோள்களையும் எடுத்துக்காட்டுகிறது மற்றும் காலநிலை நீதிக்கான போராட்டத்தை சுற்றுச்சூழல் நீதியைப் பின்தொடர்வதோடு இணைக்கிறது.