கிறிஸ்துமஸ் விழாவில் பரதநாட்டியம் மூலம் உயிர்ப்பெற்ற கிறிஸ்துமஸ் கதை ! | Veritas Tamil

2025 டிசம்பர் 2ஆம் தேதி, மேற்கு இந்தியாவின் கோவா மாநிலம் பிலார் பகுதியில் உள்ள ஹோர்டா டி மரியா, பிலார் திருப்பயண மையத்தில், பிலார் சபை (Society of Pilar) ஏற்பாடு செய்த “சத்பாவ் கிறிஸ்துமஸ்” எனும் பலமத நல்லிணக்கக் கூடுகையில், “ஒளியின் தாலாட்டு (Cradle of Light)” என்ற தலைப்பில் கிறிஸ்துமஸ் கதை, இந்திய பாரம்பரிய நடன வடிவமான பரதநாட்டியம் மூலம் அழகாக வெளிப்படுத்தப்பட்டது.

வியோமி ஆர்ட்ஸ் சென்டர், போர்வோரிம் சார்ந்த ஸ்வரா பிரபுதேசாய் வழங்கிய அர்த்தமுள்ள விளக்கங்களுடன், இம்பனா குல்கர்ணி, பரிஜத் நாயக், ஸ்ருஷ்டி பிரபுதேசாய், சாக்ஷி போர்கர் ஆகிய நான்கு நடனக் கலைஞர்களின் மனதை கவரும் நிகழ்ச்சி, பார்வையாளர்களை முழுமையாக ஈர்த்தது.
மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்திகளை ஆதாரமாகக் கொண்டு, இயேசுவின் பிறப்பைச் சுற்றிய பல்வேறு நிகழ்வுகளை பரதநாட்டியத்தின் ஆழமும் உணர்வும் மூலம் அவர்கள் உயிர்ப்பித்தனர்.

“எங்கள் நடனத்தின் மூலம், இயேசுவின் பிறப்பை மட்டும் அல்லாமல், அதில் வெளிப்படும் அன்பும் நம்பிக்கையும் மக்களிடம் கொண்டு செல்லவே முயன்றோம்,” என்று இந்த நடன நிகழ்ச்சியின் நடன அமைப்பாளரும் இயக்குநருமான இம்பனா குல்கர்ணி தெரிவித்தார்.

நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை அடையாளப்படுத்தும் இந்த பலமதக் கூடுகை, பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களை ஒன்றிணைத்து, நடனம் மற்றும் இசை போன்ற கலாச்சார நிகழ்ச்சிகள் வழியாக ஒற்றுமை, அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்தை ஊக்குவித்தது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த நிகழ்ச்சி, பங்கேற்றவர்களிடமிருந்து மிகச் சிறந்த வரவேற்பைப் பெற்றது.

திரைப்படம் கிளாடியாவில் பணியாற்றிய இசை இயக்குநர், இசையமைப்பாளர், பாடகர் மற்றும் நடிகரான முகேஷ் கட்வால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் ஒரு இனிய இசைப் பாடலைப் பாடி,“இசை எல்லைகளைத் தாண்டி, மனிதகுலத்தின் பொது உணர்வை பேசுகிறது. ‘வசுதைவ குடும்பகம்’—முழு உலகமும் ஒரு குடும்பம்—என்ற இந்த செய்தியை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்,” என்று பகிர்ந்தார்.

மாநில மாற்றுத் திறனாளிகள் ஆணையத்தின் செயலாளர் தாஹா ஹாசிக் மற்றும் மனநல நிபுணர் டாக்டர் இடா முகர்ஜி ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டனர். ஹாசிக், கிறிஸ்துமஸ் செய்தியில் மத சமூகங்களுக்கிடையே நல்லுறவை வளர்ப்பதின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். டாக்டர் முகர்ஜி, கிறிஸ்துமஸின் உலகளாவிய மற்றும் அனைவரையும் உள்ளடக்கும் தன்மையை எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சி, பிலார் திருப்பயண மைய இயக்குநர் அருட்தந்தை லாரன்ஸ் பெர்னாண்டஸ் தலைமையில் பாரம்பரிய விளக்கேற்றத்துடன் தொடங்கியது.
பிலார் அமைந்துள்ள அருட்தந்தை அக்னெல் கலை மற்றும் வணிகக் கல்லூரி மாணவர்கள், கவிஞர் மனோஹர் ராய் சர்தேசாய் எழுதியும் மைக்கேல் மார்டின்ஸ் இசையமைத்தும் உள்ள “மரி மாதேக் பலோக் ஜாலா” என்ற கிறிஸ்துமஸ் கரோலைப் பாடினர். இதைத் தொடர்ந்து, அருட்தந்தை அக்னெல் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கிறிஸ்துமஸ் நாட்டுப்புறப் பாடலை வழங்கினர்.

ஒவ்வொரு நிகழ்ச்சிக்குப் பிறகும் எழுந்த உற்சாகமான கைதட்டல்களுடன், முழு நிகழ்ச்சியும் பார்வையாளர்களை மெய்மறக்கச் செய்தது. ஒரு பங்கேற்பாளர்,
“இன்று நான் மனதளவில் உயர்ந்ததாக உணர்கிறேன்; இந்த நிகழ்ச்சி கிறிஸ்துமஸின் உண்மையான ஆவியைக் காட்டுகிறது,” என்று தனது அனுபவத்தை பகிர்ந்தார்.