தரமற்ற உணவு ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 30.09.2024
செறிவூட்டிய அரிசி
பட்டத்தில் விளைந்தது போய் வருடம் முழுதும் பனிகாலத்தில் கூட விளைந்து கிடைக்கும் மரபணு மாறிய தடித்த தோல் கொண்ட ஆப்பிள் தக்காளி.
பெயிண்ட் அடித்தாற் போல் கரும்பச்சை பீர்க்கங்காய் / பாகற்காய்.
காணாமல் போக்கி(விரட்டி)விட்டு நாட்டு வெங்காயத்தை போலவே தோற்றம் கொண்ட இப்பத்த வெங்காயம்.
தினம் தினம் புழுவுக்கு மருந்தடித்து வளர்ந்த கையடக்க குட்டை புடலை.
மறந்து போன சம்பா மிளகாய்.
என்னமோ "சி"யும் "கா" வும் பெயர் கொண்ட மரபணு மாறிய கத்திரிக்காய்.
மென்றால் மாவு போன்று அரைபடும் மறந்து (அழிந்து) போன நாட்டு ஆப்பிள்.
தேடினாலும் காண கிடைக்காத, தொட்டால் கரைந்து விடும் நாட்டு பிளம்ஸ்.
பூவனும் சாம்பிராணியும் ஆண்ட தேசத்தில் இப்போ G9 வாழைப்பழங்கள்.
விதையில்லா மாதுளை.
ரசத்தில் கிள்ளிப்போட்டு வந்த வாசனை இப்போ அள்ளிப்போட்டும் வராத ஹைபிரிட் கொத்துமல்லி.
பியூரடான் குருனையில் சவுக்கியமா வளர்ந்த இஞ்சி.
புத்துணர்ச்சிக்கு குடிக்கும் நீக்கமற விஷம் கலந்த இளநீர்.
சமையல் எண்ணையை போன்றே தோற்றமளிக்கும் மலிவு விலை சமையல் (வாகன) எண்ணை.
பத்து வருசத்துக்கு முன்னே கேள்வியே படாத "தீப" எண்ணை.
கிடைத்ததை தின்று பண்ணையில் வளரும் மரபணு மாற்றிய மீன்களும்/ இறால்களும்.
45நாளில் கோழியாய் வளர்ந்து 50வது நாளுக்குள் தட்டில் உணவாகிய அதிசய குஞ்சுகள்.
விதை முதல் அறுவடை வரை கோசும்,காளிபிளவர்ம் எப்படி வளர்ந்து வருதுனு அறிந்து கொள்ளாத அறியாமை.
இப்படி சொல்லி கொண்டே போக ஆயிரக்கணக்கில் இருக்கு.
பல ரிவ்யூவ் பார்த்தும் அபிப்பிராயம் கேட்டு துணிக்கும், போனுக்கும், வாகனத்திற்கும் பெரும் பணத்தை செழவழித்து வாங்க காட்டும் பகட்டு மும்முரம்.
மேலே சொன்ன எந்த உணவு காய்கறிகளும் தன் சந்ததியை விருத்தி செய்ய தெரியாத மலட்டு விதைகள் கொண்டதுனு அறிந்து கொண்டவர்கள் எவ்வளவு பேர் இருப்போம்?
இதை தான் அன்றாடம் உணவாக சமைத்து உண்டு வருகிறோம்.
மாற்றம் நம்மில் நம் வீட்டில் இருந்து தொடங்க வேண்டும் ஒருவரை சுட்டி காட்டி பேசும் போது மீதம் நான்கு விரல்களும் நம்மை நோக்கி இருக்கிறதை மறந்திட வேண்டாம்ங்க. நம் செயல்கள் சரியானாலே மற்றவை தானாக சரியாகிவிடும்.
மலிவான விலையில் தான் வேண்டும்னு அது எந்த கிடையில் கிடைக்குதுனு கடைக்கு கடை படியேறி விசாரித்து வாங்கும் கூட்டத்தில் இருந்து கொண்டு நல்ல பொருளை புறந்தள்ளும் புத்திசாலியா இருக்கும் நாம இதற்கு எல்லாம் பொங்காம அதுக்கு மட்டும் பொங்கி என்ன பயன்.
எதுக்காக சொல்றேன்னா. அதுக்காக சொல்கிறேன்.
அதுவரை அடுத்தடுத்த அதிர்ச்சிகள் தொடர்சியாகி அன்றாட வழமையான செய்தியாக தான் போகிறது.
நாம் மாறாத வரை அதிர்ச்சிகள் தொடரும்.
-சாமானியன்
ஞா சிங்கராயர் சாமி
கோவில்பட்டி