இயேசுவின் வார்த்தை: வல்லமையும் விடுதலையும் அளிப்பது! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

பொதுக்காலம் 22ஆம் வாரம் -செவ்வாய்
1 செப்டம்பர் 2026 

1  கொரி 2: 10b-16
 லூக்கா 4: 31-37

 இயேசுவின் வார்த்தை: வல்லமையும் விடுதலையும் அளிப்பது!

 முதல் வாசகம்.
 
இன்றைய முதல் வாசகத்தில், கடவுளின் ஆவியானவர் கடவுளுடைய  ஆழமான செய்பாடுகளை நமக்கு வெளிப்படுத்துகிறார் என்று பவுல் கூறுகிறார். மனித அறிவால் மட்டும் கடவுளின் உண்மைகளைப் புரிந்துகொள்ள முடியாது; தூய ஆவியாரின் உதவியால் மட்டுமே அவற்றை அறிந்துகொள்ள முடியும் என்கிறார் பவுல்.

மேலும், கடவுளின் ஆவியைப் பெற்றவர்களால்தான் ஆன்மீக உண்மைகளைப் புரிந்துகொள்ளவும், சரியாக ஆராய்ந்து அறியவும் முடியும் என்பதோடு, தூய  ஆவியா,ஐக் கொண்டிராத ஒருவருக்கு  இவை புரியாதவையாகத் தோன்றும் என்று அறிவுறுத்துகிறார். 

 நற்செய்தி.

இன்றைய நற்செய்தியில், இயேசு கப்பர்நாகூமில் போதித்தபோது, மக்கள் அவருடைய அதிகாரமுள்ள போதனையைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள். அங்கு அசுத்த ஆவியால் பிடிக்கப்பட்ட ஒரு மனிதன் இருந்தான். இயேசு அந்த அசுத்த ஆவியைக் கடிந்து, அந்த மனிதனை விட்டு வெளியேறும்படி கட்டளையிட்டார். அசுத்த ஆவி அவனுக்கு எந்தத் தீங்கும் செய்யாமல் அவனை விட்டு வெளியேறியது.

இதைக் கண்ட அனைவரும் வியந்து, “இவர் அதிகாரத்தோடும் வல்லமையோடும் அசுத்த ஆவிகளுக்குக் கட்டளையிடுகிறார்; அவைகள் வெளியேறுகின்றன” என்று பேசிக்கொண்டதை லூக்கா விவரிக்கிறார்.

சிந்தனைக்கு. 
இன்றைய இரு வாசகங்களின் மையச் செய்தியாக “தூய ஆவியாரால் கடவுள் உணர்த்தும்   உண்மையை அறிந்து, இயேசுவின் அதிகாரமுள்ள வார்த்தைக்கு கீழ்ப்படிதல் வேண்டும் ” என்பதையொட்டி சிந்திக்க அழைக்கப்படுகிறோம்.
 
முதல் வாசகத்தில், புனித பவுல், கடவுளின்  உண்மைகளை மனித அறிவால் மட்டும் அறிந்துகொள்ள முடியாது என்றும் தூய  ஆவியானவர் அவற்றை நமக்கு வெளிப்படுத்துகிறார் என்று கூறுகிறார். இரண்டாவது வாசகமான நற்செய்தியில், இயேசு அசுத்த ஆவியை அதிகாரத்தோடு கட்டளையிட்டு வெளியேற்றுகிறார் என்று லூக்கா கூறுகிறார். 

நேற்று தொடங்கி, வார நாள்களின் திருப்பலி வாசகங்களில் லூக்கா நற்செய்தியிலிருந்து வாசிக்கத் தொடங்கினோம். திருவருகைக் காலம் (Advent) வரை தொடர்ந்து லூக்கா நற்செய்தியிலிருந்து வாசிப்போம். லூக்கா நற்செய்தி குறிப்பாக பிற இனத்தவராக இருந்து திருமுழுக்குப் பெற்ற கிறிஸ்தவர்களுக்கு எழுதப்பட்டது என்பதை நினைவில் கொள்வோம்.

லூக்கா  திருத்தூதரான பவுலின் தோழரும் உடன் பணியாளருமாக இருந்தவர். எனவே, இருவரின் செய்தியிலும் ஓர் ஒத்தமையைக் காண்கிறோம். தூய ஆவியானவரின் பணி நமக்கு எடுத்துரைக்கப்படுகிறது.  தூய ஆவியார் கடவுள் உணர்த்தும்   உண்மையை நாம் அறியச் செய்கிறார். ஆகவே, தூய ஆவியாரால்  வழிநடத்தப்பட்டு, கிறிஸ்துவின் மனதைப் பெற்று, அவரது வல்லமையான வார்த்தையின்படி வாழ தூய ஆவியாரின் துணை இன்றியமையாதது. இவர் ஒரு காலத்தில் மறக்கப்பட்ட ‘கடவுளாக’ இருந்தவர். இக்காலத்தில் இவரது ஆற்றலும் பணியும் மிகவாகவே உணரப்படுகிறது.

தூய ஆவியாரே, இயேசுவக்குத் துணிவுடன் சாட்சி கூற நமக்கு உதவுவதோடு நம்மை இயக்குகிறார். நம்முடைய வாழ்க்கையிலும் பல நேரங்களில் பயம், கோபம், பொறாமை, வெறுப்பு, கவலை, சுயநலம் போன்றவை நம்மை ஆட்கொள்கின்றன. அவை நம்முடைய மன அமைதியையும், உறவுகளையும், இறைநம்பிக்கையையும் பாதிக்கின்றன என்பதை மறுக்க இயலாது. ஆனால்   இயேசுவிடம் நாம் வரும்போது,  நம்மை கட்டிப்போடும் அனைத்திலிருந்தும் அவரால்  நம்மை விடுவிக்க முடியும்.
 
நற்செய்தியில், இயேசு பேயைக் கடிந்துகொண்டு, அதன் எதிர்ப்பை அடக்கி, துன்புறுத்தப்பட்ட மனிதனை விடுவிக்கிறார்.   “அவருடைய வார்த்தையில் என்ன இருக்கிறது?” என்று மக்கள் வியக்கிறார்கள். இங்கே, காண முடியாத ஆன்மீக உலகிற்குள்ளும் சென்றடையும் அதிகாரத்தைக் கொண்ட ஒருவராக இயேசு இருக்கிறார்; அந்த அதிகாரத்தால் அவர் அசுத்த ஆவிக்கு கட்டளையிடுகிறார்.

இயேசு சொந்த ஊரான நாசரேத்திலிருந்து விரட்டப்பட்டார். அவர் அச்சப்பட்டு முடங்கிவிடவில்லை.  அவரோ அதே கலிலேயா  பகுதியில் கப்பர்நாகூமில் இருந்து பணியை மேற்கொள்கிறார். இங்கே தம் சீடர்களை அழைக்கிறார். இதுவும் தூய ஆவியாரின் இயக்கம் என்றார் மிகையாகாது.

நிறைவாக, இயேசுவின் வார்த்தையை கேட்பது மட்டும் போதாது; தூய ஆவியாரின் வழிகாட்டுதலில்  அதை நம் வாழ்க்கையில் செயல்படுத்த வேண்டும். அப்போது நமது குடும்பத்திலும், பணியிடத்திலும், சமூகத்திலும் இயேசுவின் அமைதியும் விடுதலையும் வெளிப்படும்.
 
இறைவேண்டல்.

ஆண்டவராகிய இயேசுவே, என் இதயத்திலிருந்து எல்லா தீமையையும் பாவத்தையும் அகற்றி, உமது ஆட்சி என் ஆன்மாவை முழுமையாக ஆட்கொள்ளும்படி அருள்வீராக. ஆமென்.
 
 
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியகல்வி மையம்,
+60122285452

Tamil Survey Popup Image