வாரத்தையில் நிலைத்திருத்தல் – சீடத்துவத்தின் மேன்மை | அருட்பணி.குழந்தை இயேசு பாபு | Veritas Tamil

பாஸ்கா 5-ம் வாரம் – புதன்
தி.பணிகள்  15: 1-6
யோவான்  15: 1-8
 

வாரத்தையில் நிலைத்திருத்தல் – சீடத்துவத்தின் மேன்மை
  
முதல் வாசகம்.

 திருத்தூதர் பணிகள் நூலில் உள்ளபடி,  அக்காலத்தில், எருசலேம் பகுதியில் இருந்து வந்த யூதக் கிறிஸ்வர்கள் அந்தியோக்கியாவில், கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டாலும், மோசேயின் முறைமைப்படி புறவினத்தாரும் விருத்தசேதனம் செய்தாக வேண்டும் என்று வாதிட்டு வந்தனர்.   பவுல் அடிகளுக்கும் பர்னபாவுக்கும் யூதரல்லாத புறவினத்து மக்கள் விருத்தசேதனம் செய்வதில் உடன்பாடில்லை. திருமுழுக்கே போதுமானது என்றார்கள. 

எனவே,  அந்தியோகியாவின் கிறிஸ்தவச் சமூகம் பவுலையும் பர்னபாவையும் மற்றவர்களையும் எருசலேமில் உள்ள திருத்தூதர்களிடம் கலந்தாலோசிக்க அனுப்பினர்.  பவுலும் பர்னபாவும் எருசலேம்  அடைந்தபோது  அங்கிருந்த இதர கிறிஸ்தவர்களும்  திருத்தூதர்களும், மூப்பர்களும் அவர்களை வரவேற்றார்கள். அப்போது கடவுள் தங்கள் வழியாக புறவினத்தார் மத்தியில்  செய்த அனைத்தையும் அவர்கள் அறிவித்தார்கள். நிறைவாக,  யூதரல்லாத புறவினத்தார் விருத்தசேதனம் செய்வது பற்றி  ஆய்ந்து பார்க்கத் திருத்தூதரும் மூப்பரும் ஒன்று கூடினர் என்று லூக்கா குறிப்பிடுகிறார்.

நற்செய்தி.

நற்செய்தியில் இயேசு தன்னுடைய சீடர்களிடம், அவர்களுக்கு நன்கு அறிமுகமான திராட்சைச் செடி, கிளைகள் ஆகியவற்றை உருவங்களாகக் கொண்டு, அவருக்கும் தம் சீடர்களுக்கும் இடையே உள்ள  உறவு எப்படி இருக்கவேண்டும் என்று விவரிக்கின்றார். 

கிளைகள் தானாகக் கனி தர இயலாது. இயேசுவை விட்டுப் பிரிந்து நாம் எதுவும் செய்ய இயலாது. நமது ஆற்றல், திறமை, கொடைகள் ... அனைத்தும் அவரிடமிருந்தே நாம் பெற்றுக்கொள்கிறோம்.  

இயேசுவோடு இணைந்திருப்பவர் மிகுந்த கனி தருவார். நமது நம்பிக்கை நல்ல பலன் தரவேண்டுமென்றால், இயேசுவோடு இணைந்து நாம் செயல்படவேண்டும். ‘என்னிடமுள்ள கனி கொடாத கிளைகள் அனைத்தையும் அவர் தறித்துவிடுவார். கனி தரும் அனைத்துக் கிளைகளையும் மிகுந்த கனி தருமாறு கழித்துவிடுவார்’ என்றும், நீங்களும் என்னோடு இணைந்திருந்தாலன்றிக் கனி தர இயலாது. நானே திராட்சைக் கொடி; நீங்கள் அதன் கிளைகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார்” என்றும் அறிவுறுத்துகிறார்.

சிந்தனைக்கு.

புனித யோவான் நற்செய்தியின் பதினைந்தாம் அதிகாரத்தில், கிளைகளுக்கு உயிர் கொடுக்கும் உண்மையான திராட்சைக் கொடியாக இயேசு இருப்பதைப் பற்றிப் பேசுகிறார். இயேசு கூறும் இந்தத் திராட்சைச்செடி உவமை யோவான் நற்செய்தியில் மட்டுமே எடுத்துக்காட்டப்படுகிறது.

இயேசு தன்னை "உண்மையான திராட்சைச்செடி" என்றும், தந்தையாகிய கடவுளைத் "தோட்டக்காரர்" என்றும், நம்மை அதன் "கொடிகள்" என்றும் உவமையாகக் கூறுகிறார். திராட்சைக் கொடி என்ற இந்த உவமையில் இயேசு நாம் அவரோடு கொண்டிருக்க வேண்டிய ஒன்றிப்பை வலியுறுத்துகிறார். மற்றும் இணைந்திருத்தல், நிலைத்தருத்தல் ஆகியவையும் இவ்வாசகத்தில் முக்கிய அறிவுறுத்தலாக உள்ளன.

1.    கிறிஸ்துவுடன் இணைப்பு – வாழ்வின் ஆதாரம்

கிளை செடியுடன் இணைந்திருக்காவிட்டால் அது உலர்ந்தும் பின்னர் மடிந்தும் போகும்.  அதுபோல, நாம் இயேசுவுடன் உறவில்லாமல் இருந்தால் நம் நம்பிக்கை வாழ்வு பலனற்றதாகி விடும்.    செடி (இயேசு) கொடி (நாம்) இந்த இரு தரப்புக்கும் இடையே நிலவும் உறவு இணைபிரியா அன்பின் உறவு ஆகும். 

2.    பலன் அளிக்கும் வாழ்க்கை

கிறிஸ்துவில் நிலைத்திருப்பவர்கள் அன்பு, அமைதி, பொறுமை போன்ற நற்குணங்களைக் கொண்டிருப்பார்கள். கிறிஸ்துவில் ஒன்றித்திருப்பவர்  தன் சொல்லாலும் செயல்களாலும் மற்றவர்களுக்கு நன்மை செய்வார் என்பது திண்ணம்.

ஒரு செழிப்பான திராட்சைக் கொடி இயற்கையாகவே ஏராளமான திராட்சைகளைத் தருவதைப் போலவே, கிறிஸ்துவுடன் இணைந்த சீடர்களும் கடவுளின் மாட்சிக்காவும் மற்றவர்களின் நன்மைக்காகவும் ஏராளமான ஆன்மீகக் கனிகளைத் தருவர்.  

"என்னை விட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது" (யோவான் 15:5) என்று இயேசு கூறுவது, விசுவாச வாழ்வில் இயேசுவின் மீதான சார்ந்திருத்தலின் அவசியத்தை வலியுறுத்துகிறது. நாம் அவரைச் சார்ந்து வாழ்ந்தோமானால் பன்மடங்குப் பலன் தரும் சீடர்களாவோம்.

நிறைவாக, வழக்கமாக, தோட்டக்காரர்கள் இந்தக் காய்க்காத அதாவது, பலன்தராத கொடிகளைத் தரித்துவிட்டுக்கொண்டே இருப்பர். அதுமட்டுமன்றி, இவைகளை வளரவிட்டோமென்றால், மொத்த திராட்சைச் செடியும் காய்க்காமல் போய்விடும். ஆதலால், சீடத்துவத்தில் நாம் பலன் தர வேண்டும் என்ற படிப்பினை இங்கே மேலோங்கி நிற்கிறது.  

முதல் வாசகத்தில் விருத்தசேதனம் எனும் வெளிப்புற சடங்கு  முக்கியமல்ல மாறா,  திருமுழுக்கால் பெறும்  கிறிஸ்துவின் அருளே  இன்றியமையாதது என்று அறிந்தோம். அவ்வாறே, நற்செய்தியில், கிறிஸ்தவர்கள் என்று காட்டிக்கொள்ளும் வெளி அடையாளங்களில் அன்று, மாறாக  கிறிஸ்துவில் நிலைத்திருப்பதே ஆன்மீக வாழ்க்கையின் அடித்தளம் என்று வலியுறுத்தப்படுகிறோம்.

இறைவேண்டல்.

என் அன்பில் நிலைத்திருங்கள் என்றருளிய ஆண்டவரே, உம்மில் எந்நாளும், எச்சூழலிலும் பற்றுறுதிக்கொண்டு நிலைத்திருக்க என்னை காத்தருள்வீராக ஆமென்.


ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
அலைப்பேசி +6 0122285452