உயிர்த்தெழுந்த கிறிஸ்துவை அறிவிக்கும் சீடத்துவம்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil
பொதுக்காலம் 16ஆம் வாரம் – புதன்
புனித மகதலா மரியா-விழா
இனிமைமிகு பாடல் 3: 1-4
யோவான் 20: 1, 11-18
உயிர்த்தெழுந்த கிறிஸ்துவை அறிவிக்கும் சீடத்துவம்!
முதல் வாசகம்.
முதல் வாசகத்தில் மணப்பெண் தன் அன்புக்குரியவரை ஆவலுடன்
தேடுகிறாள். இரவில் தன் படுக்கையில் அவரைத் தேடியும் காணவில்லை.
பின்னர் நகரின் வீதிகளிலும் சந்தைகளிலும் தேடி, இறுதியில் அவரைக்
கண்டடைகிறாள். அவரைக் கண்டபின் அவரை விடாமல் தன் தாயின்
வீட்டிற்கு அழைத்துச் சென்றாள் என்று அறிகிறோம்.
இந்த வாசகம், இறைவனை ஆவலுடன் தேடும் ஆன்மாவின்
ஏக்கத்தையும், அவரைக் கண்டடையும் பேரானந்தத்தையும்
எடுத்துரைக்கிறது. இறைவனை உண்மையோடு தேடுகிறவர்களுக்கு
அவர் தம்மை வெளிப்படுத்துகிறார் என்பதையும் இது உணர்த்துகிறது.
நற்செய்தி.
வாரத்தின் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மகதலா
மரியா இயேசுவின் கல்லறைக்குச் சென்று, கல்லறை திறந்திருப்பதைக்
காண்கிறாள். பின்னர் கல்லறையின் வெளியே நின்று
அழுதுகொண்டிருந்த அவளுக்கு வெண்ணாடை அணிந்த இரு
வானத்தூர்கள் இயேசுவின் உடலை வைத்திருந்த இடத்தில் ஒருவர்
தலைமாட்டிலும் மற்றவர் கால்மாட்டிலுமாக அமர்திருக்கக் கண்டார்
என்று யோவான் பதிவு செய்துள்ளார்.
அதன் பிறகு உயிர்த்தெழுந்த இயேசு அவளுக்குக் காட்சியளிக்கிறார்.
ஆனால் முதலில் அவர் யார் என்பதை மரியா அறியவில்லை. அவரைத்
தோட்டக்காரர் என்று எண்ணினார். ஆனால், அவர் அவளுடைய
பெயரை, “மரியா” என்று அழைத்தபோது, அவர் தான் ஆண்டவர்
என்பதை உணர்ந்து “ரபூனி” (போதகரே) என்று அழைக்கிறாள்.
அப்போது இயேசு, தாம் உயிர்த்தெழுந்ததைச் சீடர்களுக்குச் சென்று
அறிவிக்குமாறு மரியாவிடவடம் கூறுகிறார். அதன்படி மரியா
சீடர்களிடம் சென்று, “நான் ஆண்டவரைக் கண்டேன்” என்று அறிவித்தார்
என்று யோவான் நற்செய்தியாளர் தவறாமல் விவரிக்கிறார்.
சிந்தனைக்கு.
இன்று திருஅவையானது, புனித மகதலா மரியா-விழாவைக் கொண்டாட
அழைக்கிறது. புனித மகதலா மரியா புதிய ஏற்பாட்டில் மிகவும்
முக்கியமான பெண் சீடர்களில் ஒருவர். "மகதலா" என்பது கலிலேயா
கடற்கரையில் இருந்த மகதலா என்ற ஊரைக் குறிக்கிறது. அதனால் அவர்
மகதலா மரியா என்று அழைக்கப்படுகிறார் என்று அறிகிறோம்.
அவருடைய வாழ்க்கை பின்னணியை ஆராய்ந்தால் பின்வரும் விபரங்கள்
தெரியவருகின்றன.
இயேசு அவரிடமிருந்து ஏழு பேய்களை விரட்டினார் (லூக்கா 8:2;
மாற்கு 16:9). இதனால் அவர் புதிய வாழ்வைப் பெற்று, முழு
மனதுடன் இயேசுவைப் பின்பற்றினார்.
அவர் தமது சொந்த பொருள்களால் இயேசுவுக்கும் அவரது
சீடர்களுக்கும் உதவி செய்தார் (லூக்கா 8:1-3).
இயேசுவின் சிலுவைப் பாடுகளின்போதும், பலர் விலகிச்
சென்றபோதும், அவர் சிலுவையின் அருகில் உறுதியாக நின்றார்
(யோவான் 19:25).
இயேசு அடக்கம் செய்யப்பட்ட இடத்தையும் அவர்
கவனித்திருந்தார் (மத்தேயு 27:61).
உயிர்த்தெழுந்த ஆண்டவரின் முதல் சாட்சி
யோவான் 20:1-18-ன்படி, வாரத்தின் முதல் நாளில் அதிகாலையில்
கல்லறைக்குச் சென்றவர்களில் மகதலா மரியாவும் ஒருவர். அங்கு
உயிர்த்தெழுந்த இயேசு முதன்முதலில் அவருக்கே தோன்றினார். இயேசு
அவரை பெயர் சொல்லி அழைத்தபோது, அவர் "ரபூனி!" (போதகரே!)
என்று மகிழ்ச்சியுடன் அழைத்தார்.
அதன்பின் இயேசு "என் சகோதரர்களிடம் சென்று நான் என்
தந்தையிடமும் உங்கள் தந்தையிடமும், என் கடவுளிடமும் உங்கள்
கடவுளிடமும் ஏறிச் செல்கிறேன் என்று அறிவி" (யோவான் 20:17)ரஎன்று
அவரை அனுப்பினாரென்று நற்செய்தியாளர் யோவான் மேலும்
சாட்சியம் பகிர்கிறார்.
திருஅவை புனித மகதலா மரியாவை "திருத்தூதர்களுக்கான
அப்போஸ்தலர்" என்று சிறப்பிக்கிறது. காரணம், இவர்தான்
முதன்முதலில் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் நற்செய்தியை முதலில்
அப்போஸ்தலர்களுக்குச் சென்று அறிவித்தவர் ஆவார்.
மேலும், இவர் ஏழு பேய்களிடமிருந்து விடுவிக்கப்பட்டார் என்று
அறிகிறோம். ஏழு என்ற எண் திருவிவிலியத்தில் முழுமை என்பதைக்
குறிக்கும் அடையாளமாகும். எனவே, அவர் முழுமையாக பேய்களின்
ஆதிக்கத்தில் இருந்திருக்கலாம் என்பதை, அல்லது பாவமும் தீமையும்
நிறைந்த வாழ்விலிருந்து அவர் பெற்ற விடுதலை முழுமையானதும்
நிறைவானதுமான விடுதலையாக இருந்தது என்பதை இது
சுட்டிக்காட்டுவதாக நாம் பொருள்கொள்ள வேண்டும்.
நிறைவாக, யோவான் நற்செய்தி மகதலா மரியா சிலுவையின் அடியில்
இயேசுவின் தாயாருக்கும் அவருடைய அத்தைக்கும் அருகில்
நின்றிருந்தார் என்று குறிப்பிடுகிறது. (19:25). இதன்வழி மகதலா மரியா
இயேசுவின் இறுதிவரை அவருக்கு உண்மையுடன் துணைநின்ற சீடராக
இருந்தவர் என்பதையும் அறிகிறோம்.
ஆகவே, மகதலா மரியாவைப்போல் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின்
சாட்சிகளாக நற்செய்தியை மற்றவர்களிடம் அறிவிக்க வேண்டிய
சீடர்களாகவும், துணிவும் பற்றும் உள்ள சீடர்களாகவும் நாம் வாழ
வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைக்கும் புனிதராக இவர் நமக்கு
விளங்குகிறார்.
இறைவேண்டல்.
அன்பும் இரக்கமும் நிறைந்த ஆண்டவரே, உமது உயிர்ப்புக்கு முதல்
சாட்சியாக புனித மகதலா மரியாவைக் கொண்டதைப்போல், உம்மை
முழு மனதுடன் தேடவும், மனமாற்றத்தின் வாழ்வை அருள் தாரும்.
ஆமென்.
ஆர். கே. சாமி (மலேசியா). ஜெனிசிஸ்
விவிலியக் கல்வி மையம் +6
0122285452
