கிறிஸ்துவின் வார்த்தையை வாழ்வாக்குவோம்! | ஆர்.கே.சாமி | Veritas Tamil
பொதுக்காலம் 23ம்.வாரம்-சனி
12 செப்டம்பர் 2026
1 கொரி 10: 14-22
லூக்கா 6: 43-49
கிறிஸ்துவின் வார்த்தையை வாழ்வாக்குவோம்!
முதல் வாசகம்.
1. இந்த வாசகத்தில், சிலை வழிபாட்டை தவிர்த்து, கடவுளுக்கு மட்டுமே உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று பவுல் அறிவுறுத்துகிறார். மேலும், கிறிஸ்துவின் திருவிருந்தில் பங்கேற்பது, கிறிஸ்துவோடு நமக்குள்ள ஒன்றிப்பை வெளிப்படுத்துகிறது என்றும், அதேபோல், சிலைகளுக்குப் படைக்கப்பட்டவற்றில் பங்கேற்பது சிலை வழிபாட்டோடு தொடர்பை ஏற்படுத்துகிறது என்றும் எடுத்துரைக்கிறார்.
o எனவே, ஒரே நேரத்தில் ஆண்டவருக்கும் பாத்திரத்திலும் அலகையின் பாத்திரத்திலும் பங்கேற்க முடியாது என்பதை வலியுறுத்தும் பவுல் அடிகள், கடவுளின் மக்களாகிய நாம், வேறு எந்த தெய்வத்துடனும் அல்லது சிலை வழிபாட்டுடனும் சமரசம் செய்யக்கூடாது என்று எச்சரிக்கிறார்.
நற்செய்தி.
1. இயேசு இன்றைய நற்செய்தியில், மனிதனின் உள்ளமும் அவன் செயல்களும் எப்படி தொடர்புடையவை என்பதைத் தெளிவுப்படுத்துகிறார். இப்படிப்பினையை விவரித்து அறிவுறுத்த ஓரிரு உவமைகளைப் பயன்படுத்துகிறார். அவற்றுள், முதலாவதாக நல்ல மரம் நல்ல கனிகளையும், கெட்ட மரம் கெட்ட கனிகளையும் தரும் என்றும், அதுபோல, நல்ல இருதயத்திலிருந்து நல்ல செயல்களும், தீய இருதயத்திலிருந்து தீய செயல்களும் வெளிப்படும் என்கிறார்.
o ஒருவருடைய வாயிலிருந்து வரும் வார்த்தைகள் அவருடைய இருதயத்தில் இருப்பதை வெளிப்படுத்துகின்றன என்பதை முன்வைத்து பேசுகிறார். இயேசுவை “ஆண்டவரே” என்று அழைப்பது மட்டும் போதாது; அவர் சொல்வதைக் கேட்டு அதன்படி வாழ வேண்டும்.
o இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு அவற்றை நடைமுறைப்படுத்துகிறவன், ஆழமாகத் தோண்டி பாறையின் மேல் அடித்தளமிட்ட வீட்டைப் போன்றவன். வெள்ளம் வந்தாலும் அந்த வீடு உறுதியாக நிற்கும் என்கிறார்.
நிறைவாக, இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு, அவற்றின்படி நடக்காதவன் உறுதியான அடித்தளமற்ற வீட்டைப் போன்றவன்; சோதனை வந்தபோது அது இடிந்து விழும் என்று முடிக்கிறார்.
சிந்தனைக்கு.
இன்றைய இரு வாசகங்களும் நம்முடைய யம்பிக்கைஆனது வெறும் வார்த்தைகளாக இல்லாமல், நம் வாழ்க்கையில் உண்மையாக வெளிப்பட வேண்டும் என்ற முக்கியமான செய்தியைத் தருகின்றன.
திருத்தூதர் பவுல், “சிலைவழிபாட்டை விட்டு விலகுங்கள்” என்று எச்சரிக்கிறார். கிறிஸ்தவர்களின் வாழ்க்கையில் கடவுளுக்கு உரிய இடத்தை வேறு எதுவும் பிடிக்கக் கூடாது. நற்கருணையில் நாம் பங்கேற்கும்போது, கிறிஸ்துவின் உடலிலும் இரத்தத்திலும் பங்கேற்கிறோம். எனவே, கிறிஸ்துவோடு ஒன்றிணைந்த வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு, அதே நேரத்தில் கடவுளுக்கு எதிரானவற்றோடு சமரசம் செய்வது விரோதமானது என்பதை மனதில் நிறுத்த வேண்டும்.
சிலைவழிபாடு என்பது தெய்வங்களின் சிலைகளை வைத்து வழிபடுவதை உணர்த்துவதாக இன்று பொருள்கொள்ளப்படுகிறது. அது மனிதனின் கைவேலைப்பாடுகளில் உருவாகிய தெய்வ வழிபாடுகள் மட்டுமல்ல. இன்றைய காலத்தில் பணம், பதவி, புகழ், அதிகாரம், பொருள் ஆசை, சமூக அந்தஸ்து அல்லது நமது சொந்த விருப்பம் போன்றவற்றை கடவுளுக்கு மேலாக வைக்கும்போது, அவை நம் வாழ்க்கையின் “சிலைகளாக” மாறுகின்றன.
இன்றைய நற்செய்தியில் இயேசு , “நல்ல மரம் கெட்ட கனியைத் தருவதில்லை; கெட்ட மரம் நல்ல கனியைத் தருவதில்லை” என்று முழங்குகின்றார். ஒரு மரத்தின் தன்மையை அதன் கனிகளால் அறிய முடியும். அதுபோல, ஒரு மனிதனின் உள்ளத்தில் என்ன இருக்கிறது என்பதை அவனுடைய வார்த்தைகள், செயல்கள், உறவுகள் மற்றும் வாழ்க்கை முறைகள் வெளிப்படுத்துகின்றன.
உணமையில் நம்மில் பச்சொந்திதனம் மிகைந்துள்ளது என்றால் மிகையாகாது. இயேசு நம்மிடம் கேட்பது: “நீ என்னைப் பற்றி பேசுகிறாயா? அல்லது என்னைப் போல வாழ்கிறாயா?” என்பதாகும்.
நல்ல கனி என்பது அன்பு, மன்னிப்பு, பொறுமை, இரக்கம், நேர்மை, தியாகம், சேவை போன்றவற்றில் வெளிப்படுகிறது. கேட்பது மட்டும் போதாது
நற்செய்தியின் இறுதியில் இயேசு மிகவும் அழகான ஓர் உவமையைத் தருகிறார். அவருடைய வார்த்தைகளைக் கேட்டு, அவற்றின்படி செயல்படுகிறவன், பாறையின் மேல் வீட்டைக் கட்டிய மனிதனைப் போன்றவன் என்கிறார்.
இரண்டு வாசகங்களும் சொல்லும் ஒரே செய்தியாதெனில், “கிறிஸ்துவைத் தேர்ந்தெடுத்தால், வேறு சிலைகளுக்கு இடம் கொடுக்காதீர்கள் என்பதும், கிறிஸ்துவின் வார்த்தையைக் கேட்டால், அதன்படி வாழுங்கள்” என்பதுமாகும்,
நற்கருணையைப் பெறும்போது, கிறிஸ்துவோடு ஒன்றிணைகிறோம். அந்த ஒன்றிணைவு நமது அன்றாட வாழ்க்கையிலும் தெரிய வேண்டும். திருப்பலியில் நாம் பெறும் கிறிஸ்து, வீட்டிலும், பணியிடத்திலும், சமூகத்திலும் நமது செயல்களில் வெளிப்பட வேண்டும் என்பது நமது சாட்சிய வாழ்வுக்கு இன்றியமையாததாகும்.
நிறைவாக, பாறையின் மீது கட்டப்பட்ட வீடு போல நமது வாழ்க்கையையும் கிறிஸ்துவின் மீது கட்டுவோம். உலகம் மாறலாம்; சூழ்நிலைகள் மாறலாம்; சோதனைகள் வரலாம். ஆனால் கிறிஸ்துவின் மீது கட்டப்பட்ட வாழ்க்கை உறுதியாக நிற்கும். நெப்பாலில் ஏற்பட்ட பெரும் அழிவுக்கு நாம் உட்பட்டாலும் கிறிஸ்துவில் நாம் கொண்ட நம்பிக்கை நிலைக்கும். மாறாக, புனித பவுல் அடிகள் சுட்டிக்காட்டியதைப்போல. அன்னிய தெய்வங்கள், சிலைவழிபாடு ஆகியவற்றில் நமது நம்பிக்கை மையம் கொண்டிருந்தால், நமக்கு வாழ்வென்பது எட்டா கனியாகும்.
இறைவேண்டல்.
ஆண்டவரே, என் இருதயத்தை நல்ல மரமாக மாற்றுவீராக. என் வாழ்க்கையில் உமக்கு முதலிடம் தரும் அருளையும் தருவீராக, ஆமென்.
ஆர்.கே.சாமி (மலேசியா)
