இயேசுவின் திருஇருதயம் எல்லோருக்கும் திறந்த கதவு! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

பொதுக்காலம் 10 ஆம் வாரம் –  வெள்ளி
இயேசுவின் திருஇதயம்-பெருவிழா

இ.ச. 7: 6-11
1 யோவான் 4: 7-16
மத்தேயு    11: 25-30


இயேசுவின் திருஇருதயம் – எல்லோருக்கும் திறந்த கதவு!

 
முதல் வாசகம்.


இன்று இயேசுவின் திருஇருதய பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். இன்றைய முதல் வாசகமானது, இஸ்ரயேல் மக்கள் ஆண்டவருக்குச் சொந்தமான புனித மக்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பதை மோசே நினைவூட்டுகிறார். 

அவர்கள் எண்ணிக்கையில் பெரியவர்களாக இருந்ததால் அல்ல, மாறாக ஆண்டவர் அவர்களை அன்புகூர்ந்ததாலும் முன்னோர்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற விரும்பியதாலும் அவர்களைத் தேர்ந்தெடுத்தார் என்றும், கடவுளை அன்பு செய்து  அவரது கட்டளைகளைக் கடைப்பிடிப்போருடன் அவர் என்றென்றும் அவரது உடன்படிக்கையையும் பேரன்பையும் நிலை நிறுத்துகிறார் என்றும் நமக்கு அறிவுறுத்தப்படுகிறது.  

இரண்டாம் வாசகம். 

இப்பகுதியில் திருத்தூதர் யோவான், அன்பே இறைவனின் இயல்பு என்பதை வலியுறுத்துகிறார். அன்பு செலுத்துகிறவர் இறைவனிடமிருந்து பிறந்தவர்; அன்பில்லாதவர் இறைவனை அறியாதவர், ஏனெனில் இறைவன் அன்பாகவே இருக்கிறார். மனிதகுலத்தின் மீதான தனது அன்பை வெளிப்படுத்துவதற்காக இறைவன் தமது ஒரே மகனாகிய இயேசு கிறிஸ்துவை உலகிற்கு அனுப்பினார். நாம் இறைவனை அன்பு செய்ததற்காக அல்ல, அவர் நம்மை அன்பு செய்து தமது மகனை நம் மீட்பிற்காக அளித்ததிலேயே உண்மையான அன்பு வெளிப்படுகிறது என்று விவரிக்கிறார்.

நற்செய்தி.

நற்செய்தியில் இயேசு தம் தந்தையான கடவுளைப் போற்றி, உலக ஞானிகளுக்குப் பதிலாக எளிய மனமுடையவர்களுக்கு இறையறிவை வெளிப்படுத்தியதற்காக நன்றி செலுத்துகிறார். தந்தையும் மகனும் ஒருவரை ஒருவர் முழுமையாக அறிந்திருக்கிறார்கள் என்றும், மகன் வெளிப்படுத்துவோருக்கே தந்தையை அறிய முடியும் என்றும் கூறுகிறார். 

சுமைகளாலும் சோர்வாலும் களைத்தவர்களை தம்மிடமே வர அழைத்து, தாம் அளிக்கும் இளைப்பாறுதலை அளிக்க விழைகிறார்.  இயேசுவின் நுகம் இனிமையானதும் சுமை இலகுவானதும் என்பதால், அவரைப் பின்பற்றுவோர் உண்மையான அமைதியையும் ஓய்வையும் பெறுவார்கள் என்று அறிவுறுத்துகிறார் ஆண்டவராகிய இயேசு. 

சிந்தனைக்கு.

இன்று ஆண்வரின் திருஇருதய பெருவிஆவைக் கொண்டாடுகிறோம். இது வெறும் கொண்டாட்டம் அல்ல. இறை அன்பின் வெளிப்பாடு. நாள்தோறும்   கவலை, துன்பம், பிரச்சனை போன்றவற்றால் வேதனையுறும் நமக்கு அடைக்கலம் தரும் ஓர் அன்பான இதயமே ஆண்டவரின் இதயம்.  

இயேசுவின் திரு இருதயத்திற்குள் வாழ்வது என்பது, கடவுளின் அன்பின் மையத்திற்குள் வாழ்வதாகும். கடவுளின்  அன்பு சாந்தமும் தாழ்மையும் உடையது.  இந்த இருதயத்தில்,  தெய்வீக இரக்கத்தின் அரியணையையே காண்கிறோம். நாம் வற்புறுத்தலால் ஆளும் ஒரு அரசனைக் காண்பதில்லை, மாறாக சுயதியாகத்தாலும் இரக்கத்தாலும் ஆளும் அரசர்களுக்கெல்லாம் அரசரையே காண்கிறோம். இயேசுவின் திருஇருதயம் அன்பின் வற்றாத ஊற்று. 


இயேசு, “என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று சொல்லும்போது, நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளிலிலுந்து தப்பித்துக்கொள்வோம் என்று அவர் அர்த்தப்படுத்தவில்லை; மாறாக, அந்தப் பிரச்சனைகள் அவரால், அவருடன், மற்றும் அவருக்குள் உருமாற்றப்படும் என்பதே அதன் பொருள்.   அவர் அதை வெளியிலிருந்து நம்மேல் சுமத்துவதில்லை; மாறாக, தம்முடைய சொந்த நுகத்தில் பங்குபெற—அவருடன் உழைக்க, அவருடன் நடக்க, அவருடன் பாடுபட—அவர் நம்மை அழைக்கிறார். 


இயேசுவின் திருஇருதயம் என்பது போற்றுதலுக்கும் பக்திக்கும் உரிய ஒரு பொருள் அல்ல. அதைவிட விட மேலானது; அது அடைக்கலம், வலிமை மற்றும் தெய்வீக ஒன்றிப்பைத் தேடும் அனைவருக்கும் ஓர் உறைவிடமாகும். இயேசு நமக்கு அருளும்  அழைப்பை ஏற்றால் அமைதி நம்மில் நிலவும் என்பது திண்ணம்.

நாம் அவருடைய இதயத்தில் வாழ்வதும், அவரை நமது இதயத்தில் வாழ அனுமதிப்பதும்  நமக்கான வரமாகும். 


இறைவேண்டல். 

ஆண்டவராகிய இயேசுவே, நான் உம்மை நம்புகிறேன், உம்மை அன்பு செய்கிறேன்,  உம்மை ஆராதிக்கிறேன். இன்றைய இந்த பெருவிழா குறித்த என் புரிதலை, வெறும் பக்தி என்பதைத் தாண்டிய மேலான ஒன்றாக மாற்றி, அதை ஒரு வாழ்க்கை முறையாக ஆக்குவீராக. ஆமென்.

ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452