நம் கடவுள் வாழ்வோரின் கடவுள் | அருட்பணி. மரிய அந்தோணிராஜ் | Veritas tamil
பொதுக்காலம் 9ஆம் வாரம் – புதன் 03 06 2026
நம் கடவுள் வாழ்வோரின் கடவுள்
கிறிஸ்தவரும், மிகப் பெரிய விஞ்ஞானியுமான மைக்கேல் பாரடே நோய்வாய்ப்பட்டு மரணப்படுக்கையில் கிடந்தார். அவரைச் சுற்றி அவருடைய வீட்டாரும், உற்றார் உறவினர்களும், நெருங்கிய நண்பர்களும் இருந்தார்கள். எல்லாருடைய முகத்திலும் கவலையும், வருத்தமும் படிந்திருந்தது.
அப்போது அங்கு வந்த ஒரு பத்திரக்கையாளர் மைக்கேல் பாரடேயிடம், “பெரும் மதிப்பிற்குரிய பாரடே அவர்களே! இப்போது உங்களிடம் ஒரே ஒரு கேள்வி கேட்கவேண்டும்?” என்றார். “என்ன கேள்வி?” என்று அவர் கேட்டதற்கு, பத்திரிக்கையாளர் அவரிடம், “ஒரு ஒன்றுமில்லை, நீங்கள் மிகச் சிறந்த விஞ்ஞானி, அதேவேளையில் இறைப் பற்றாளரும் கூட. என்னுடைய கேள்வி இதுதான், “உங்களுக்கு இறப்புக்குப் பின்னர் வாழ்வு உண்டு என்பதில் நம்பிக்கை இருக்கிறதா?” என்று கேட்டார்.
அதற்கு மைக்கேல் பாரடே, “எனக்கு இறப்புக்குப் பின் வாழ்வு உண்டா? இல்லையா? என்பது தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். என் ஆண்டவர் இயேசு கிறிஸ்து இறந்து, இன்றும் உயிர்வாழ்கிறார். ஆதலால் நான் இறந்தாலும், உயிர்வாழ்வேன்” என்று அவர்களுக்கு பதிலளித்தார்.
கிறிஸ்தவர்களாகிய நமக்கு இறப்புக்குப் பின்னும் வாழ்வு உண்டு என்பதை இந்த நிகழ்வானது அருமையாக எடுத்துக்கூறுகிறது.
நற்செய்தி வாசகத்தில் உயிர்த்தெழுதலில் நம்பிக்கை இல்லாத சதுசேயர்கள் சிலர் ஆண்டவர் இயேசுவிடம் ஒரு கேள்வியோடு வருகிறார்கள். அவர்கள் விவிலியத்தின் முதல் ஐந்து நூல்களைத் தவிர மற்ற நூல்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், வானதூதர்களையும் அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அப்படிப்பட்டவர்கள் கேட்கும் கேள்வி இதுதான்:
‘ஒருபெண்ணை மணந்த ஒருவன் மகப்பேறின்றி இறந்துபோக, அவனுடைய சகோதரனே அப்பெண்ணை மணந்து வழிமரபை உண்டாக்க வேண்டும்’ மோசேயின் கட்டளை. அப்படி இருக்கும்போது ஒரு பெண்ணை மணந்த ஒருவன் மகப்பேறின்றி இறந்துபோக, அவனுடைய சகோதரன் அவளை மணக்கிறான். அவனும் மகப்பேறின்றி இறந்து போகின்றான். இப்படியாக அவனுடைய சகோதரர்கள் எழுவரும் அப்பெண்ணை மணந்து மகப்பேறின்றி இறந்து போகின்றார்கள். இறுதியாக அந்தப் பெண்ணும் இறந்துபோகின்றார். அப்படியானால் உயிர்த்தெழுதலின்போது அப்பெண் யாருக்கு மனைவியாக இருப்பார்? ஏனென்றால் அப்பெண்ணை எழுவரும் மணந்தவர்கள் ஆயிற்றே?”
கேள்வியே சற்று குதர்க்கமாகவும், இயேசுவைச் சிக்கலில் மாட்டிவிடுவதுமாக இருந்தாலும், அவர் அதற்கு தெளிவாகப் பதிலளிக்கிறார். “இவ்வுலகில்தான் பெண் கொள்வதும், எடுப்பதும் இருக்கும். மறு உலகில் அப்படி இருக்காது. இறந்த அவர்கள் வானதூதர்களைப் போன்று இருப்பார்கள், அவர்கள் கடவுளின் மக்களாகவும் இருப்பார்கள்” என்கிறார்.
இயேசு தொடர்ந்து அவர்களிடத்தில், கடவுள் மேசேக்கு முட்புதரில் காட்சிதந்த நிகழ்ச்சியைச் சுட்டிக்காட்டி, கடவுள் இறந்தோரின் கடவுள் அல்ல, மாறாக அவர் வாழ்வோரின் கடவுள்” என்று சொல்லி அவர் நம்பி ஏற்றுக்கொண்ட விவிலியத்தின் முதல் ஐந்து நூல்களில் ஒன்றான விடுதலைப் பயண நூலிலிருந்து அவர்களுக்கு விளக்கம் தருகின்றார்.
பலநேரங்களில் நாம் சதுசேயர்களைப் போன்று விவிலியமும் அறியாமல், கிறிஸ்துவையும் முழுமையாக அறியாமல் இருக்கின்றோம். அறியாமைதான் அனைத்துத் தீமைகளுக்கும் காரணமாக இருக்கின்றது. எரோனிமுஸ் என்ற விவிலிய அறிஞர் கூறுவார், “விவிலியத்தை அறியாதவர், கிறிஸ்துவையே அறியாதவர்” என்று. ஆகவே நாம் விவிலியத்தை முழுமையாக வாசிப்போம். கிறிஸ்துவை இன்னும் அதிகமாக அறிந்துகொள்வோம்.
அதேவேளையில் இறப்புக்குப் பின்னால் வாழ்வு உண்டு என்பதை மறவாமல் இருப்போம். இறைவன் அளிக்கும் அந்த வாழ்வைக் கொடையாகப் பெற இந்த மண்ணுலக வாழ்வை அர்த்தமுள்ளதாகுவோம், இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.
-மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.