நம்மை வழிநடத்தும் காவல் தூதருக்கு உடன்படுவோம்! | ஆர்கே. சாமி | Veritas Tamil

2 அக்டோபர் 2025                                                                                                                  
பொதுக்காலம் 26ஆம் வாரம் – வியாழன்
தூய காவல் தூதர்கள்-நினைவு

நெகேமியா   8: 1-4a, 5-6, 7b-12
மத்தேயு 18: 1-5, 10

 
 
நம்மை வழிநடத்தும் காவல் தூதருக்கு உடன்படுவோம்!
 

 
முதல் வாசகம்.


இன்றைய முதல் வாசகம், இறைவார்த்தையைக்  கேட்டுப் புரிந்துகொள்வதன் முக்கியத்துவம் எடுத்துரைக்கிறது. யூதர்கள் பாபிலோனிலிருந்து நாடு திரும்பி ஆலயத்தை மீண்டும் கட்டிய மக்கள் ஒன்றாகக் கூடினபோது  மோசே வழி கடவுள் அளித்த கட்டளைகளை நன்கு கற்றறிந்தவரான குரு  எஸ்ரா, திருச்சட்டம் தெளிவாகவும்  (அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில்) வாசித்து விளக்கமளிக்கிறார்.

திருசட்டத்தை வாசிக்கக் கேட்கும்போது, பலர் கடந்த கால தவறுகளை, பாவங்களை நினைவ்வகூர்ந்து அழுகிறார்கள்.  ஆனால் நெகேமியா, எஸ்ரா ஆகியோர் மக்களை நோக்கி,  “இன்று கடவுளாகிய ஆண்டவரின் புனித நாள்; எனவே நீங்கள் அழுது புலம்ப வேண்டாம்” என்றும்,  “அமைதியாய் இருங்கள்; ஏனெனில் இன்று புனித நாள், துயரம் கொள்ளாதீர்கள்” என்றும் திடப்படுத்தினர். நிறைவாக மக்கள் மகிழ்ச்சிபொங்க அந்நாளைக் கொண்டாடி மகிழ்ந்தனர். 

நற்செய்தி.


நற்செய்தியில், இயேசு குழந்தைகள் மீது தமக்கிருக்கும் அன்பையும் அக்கறையையும் மட்டுமல்ல, எல்லா பெரியோர் மீதும் தம்முடைய தந்தை நிலையிலான அக்கறை காட்டுகிறார் என்பைத வெளிப்படுத்துகிறார்.  முதலில்,  சீடர்கள் அவர்களுக்குள் எழுந்த  யார் பெரியவர் என்ற வினாவுக்கு,  யார் பெரியவர் என்பதைப் பற்றி அவர்கள் கவலைப்படக்கூடாது, மாறாக ஒரு குழந்தையின் நம்பிக்கையை மட்டும் கொண்டிருக்க வேண்டும்  என்று விவரிக்கிறார். குழந்தைகள் மத்தியில்  எந்தத் தீங்கும் அல்லது குழப்பமும் ஏற்படாததன் முக்கியத்துவத்தையும் இயேசு தம் சீடர்களுக்கு நினைவூட்டுகிறார்.

மேலும், அவர்களின் காவல் தூதர்கள் கடவுளின் முன்னிலையில் இருக்கிறார்கள் என்று முடிக்கிறார். 

 
சிந்தனைக்கு.


முதல் வாசகத்தில், கடவுளின் வார்த்தையைக் கேட்பது மட்டும் போதாது என்பதும், தெளிவான வாசிப்பு மற்றும் விளக்கம் இன்றியமையாதது என்பதும் வலியுறுத்தப்படுகின்றது. இறைவார்த்தை மக்களுக்குப் புரியும்படி எடுத்துரைக்கப்பட  வேண்டும். இன்றைய வாசகத்தில் நெகேமியா மற்றும் இறைவார்த்தை வல்லுனரான எஸ்ரா, திருச்சட்டம் தெளிவாகவும்  வாசிக்கப்படுவதோடு அது அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் விளக்கப்பட வேண்டும் என்கிறார்கள்.

இதோ போல், திருத்தூதர் பணிகள் நூலில் (8:27-31) எத்தியோப்பிய அரச அலுவலர் ஒருவர் எருசலேம் சென்று, கடவுளை வணங்கி விட்டுத் திரும்பிச் சென்று கொண்டிருந்தார்.   பிலிப்பு ஓடிச் சென்று, அவர் எசாயாவின் இறைவாக்கு நூலை வாசிப்பதைக் கேட்டு, “நீர் வாசிப்பதின் பொருள் உமக்குத் தெரிகின்றதா?” என்று கேட்டார். அதற்கு அவர், “யாராவது விளக்கிக்காவிட்டால் எவ்வாறு என்னால் தெரிந்துகொள்ள முடியும்?” என்ற கேள்வியை எழுப்பினார். 

ஒவ்வொரு திருப்பலியிலும் அருள்பணியாளர்கள் அல்லது திருத்தொண்டர்கள் மறையுரை ஆற்றுகிறார்கள். இதன் நோக்கம் என்ன? மறையுரையால் அருள்பணியாளர்கள் அல்லது திருத்தொண்டர்கள் திருநூலை மக்கள் சுவைத்து அறிந்துகொள்ளச் செய்கிறார்கள்.  ஏனெனில்,  தெளிவான வாசிப்பு மற்றும் விளக்கம் ஆகியவை கடவுளுடைய வார்த்தையைக் கேட்பது மட்டும் போதாது என்பதை வலியுறுத்துகின்றன: அது மக்களுக்குப் புரியும் வகையில் இருக்க வேண்டும். அந்த எத்தயோப்பிய நிதி அமைச்சர், கூறியதைப்போல், “யாராவது விளக்கிக்காட்டாவிட்டால் எவ்வாறு நம்மால் தெரிந்துகொள்ள முடியும்?”

ஆகவேதான் திருப்பலியின முதல் பகுதியில் இறைவார்த்தை விருந்து அளிக்கப்படுகிறது. இவ்வேளையில் (மறையுரை) அன்றைய வாசகங்களின் வார்த்தைகள் உடைக்கப்பட்டு மக்களுக்கு விளங்கும் வகையில் விருந்தாகப் படைக்கப்படுகிறது. இந்த விருந்தில் பங்குபெற்றபின் நற்கருணை விருந்துக்கு அழைத்துச் செல்லப்படுகிறோம்.

இன்றைய முதல் வாசகத்தில், இறைவார்த்தை  வாசிக்கப்படும்போது, மக்கள் அழுதார்கள் என்று நெகேமியா குறுப்பிடுகிறார். இந்த உணர்ச்சிபூர்வமான எதிர்வினை இறைவார்த்தை கேட்போர் உள்ளத்தில் ஆழமான ஊடுருவும் சக்தியைக் கொண்டுள்ளது என்பதைக் குறிக்கிறது: இறைவாரத்தை  கண்டிக்கிறது, மனசாட்சியை எழுப்புகிறது, பாவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது, கடவுளுக்காக ஏங்கச் செய்கிறது, வாழ்வை மறுசீரமைக்க ஆசைப்படுகிறது.

கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; இருபக்கமும் வெட்டக்கூடிய எந்த வாளினும் கூர்மையானது; ஆன்மாவையும் ஆவியையும் பிரிக்கும் அளவுக்குக் குத்தி ஊடுருவுகிறது; எலும்பு மூட்டையும் மச்சையையும் அவ்வாறே ஊடுருவுகிறது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது என்று எபிரேயர் திருமுகத்தில் ( 4:12) அறிவுறுத்தப்படுகிறோம்.

இன்று காவல் தூதர் விழாவைக் கொண்டாடுகிறோம். குறிப்பாக, காவல் தூதர்கள்  குழந்தைகளுடன் கைகோர்த்து நடப்பதாக   பெரும்பாலும் சித்தரிக்கப்படுகிறார்கள். இது உண்மைதான் என்றாலும், அவர்கள் நம் வாழ்நாள் முழுவதும் நம் ஒவ்வொருவருடனும் கைகோர்த்து நடப்பவர்கள். இது கடவுளால் அவர்களுக்கு வழங்கப்பட்ட அவர்களின் புனிதக் கடமை என அறிகிறோம். 
‘நம்பிக்கை கொண்ட ஒவ்வொருவர் அருகிலும் காவல் வானதூதர் ஒருவர் பாதுகாப்பவராகவும், வழிதுயையாகவும் இருந்து அவரை வாழ்வுக்கு அழைத்துச் செல்கிறார்’ என்று புனித  பெரிய பாசில் கூறியுள்ளதை நினைவகூர்வோம்.

நிறைவாக, நமது காவல் வானதூதர் உண்மையானவர், கூர்மையான மற்றும் சக்திவாய்ந்த அறிவாற்றல் கொண்டவர், கடவுளின் விருப்பத்துடன் முழுமையாக இணைக்கப்பட்ட ஒரு விருப்பத்தைக் கொண்டவர், மேலும் நம்மைப் பாதுகாத்து கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு நம்மை வழிநடத்தும் ஒரே நோக்கத்திற்காகவே படைக்கப்பட்டவர் என்ற நம்பிக்கையை ஏற்று வாழ்வோம். 

இறைவேண்டல்.

கடவுளின் தூதரே, என் அன்பான பாதுகாவலரே, என்னை தொடர்ந்து ஒளிரச் செய்யவும்,  தீயோனிடமிருந்து பாதுகாக்கவும், என்னை நேர்வழியில் வழிநடத்தவும் என்னைச் சூழ்ந்திருப்பீராக. ஆமென்.


ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452