இறையரசு நம் இதயங்களில் வளரட்டும்!.| ஆர்கே. சாமி | Veritas Tamil

28 ஜூலை 2025
பொதுக்காலம் 17ஆம் வாரம் –திங்கள்
விடுதலை பயணம 32: 15-24, 30-34
மத்தேயு 13: 31-35
இறையரசு நம் இதயங்களில் வளரட்டும்!.
முதல் வாசகம்.
முதல் வாசகத்தில், மோசே ஆண்டவருடைய மலையில் கடவுளின் வெளிப்பாட்டை அனுபவிக்கும்போது, இஸ்ரயேலர்கள் கடவுளை வழிபட ஓர் உருவம் இல்லை, ஆகவே ஒரு தங்கக் கன்றுக்குட்டியை உருவாக்குகிறார்கள். அதற்கு மோசேயின் சகோதரர் ஆரோன் உடந்தையாக உள்ளார். இதில் எழும் பிரச்சனை என்னவென்றால், கடவுள் எந்த உருவத்தையும் கடவுளால் உருவாக்கக்கப் பட்டு வழிபடுவதை ஏற்பதில்லை. அது முற்றிலும் சிலை வழிபாடாகிறது.
அப்போது, கடவுளால் பொறிக்கப்பட்ட இரண்டு பலகைகளை (சட்டத்தை) சுமந்துகொண்டு மோசே சீனாய் மலையில் இருந்து இறங்குகிறார். மோசே அதை அறிந்து, சினம், மோசே பொற்கன்று சிலையை அழித்து, தண்ணீரில் கலந்து தூளாக அரைத்து, இஸ்ரயேல் மக்களைக் குடிக்க வைக்கிறார்.
மறுநாள் மோசே கடவுளிடம் பரிந்து பேசுகிறார்: இஸ்ரயேலுக்குப் பதிலாக தன்னையே அர்ப்பணிக்கிறார். மனந்திரும்பாத பாவிகள் "அழிக்கப்படுவார்கள்" என்று கடவுள் பதிலளிக்கிறார், ஆனாலும் மோசே மக்களை வழிநடத்த அனுமதிக்கிறார் – மேலும், நான் தண்டனைத் தீர்ப்பு வழங்கும் நாளில் அவர்கள் பாவத்தை அவர்கள் மேலேயே சுமத்துவேன்” என்றார்.
நற்செய்தி.
நற்செய்தியில், இயேசு உவமைகளைப் பயன்படுத்தி மக்களுக்கு தொடர்ந்து இறையரசைப்பற்றி போதிக்கிறார். இன்றைய கடுகு விதை மற்றும் ரொட்டி மாவில் உள்ள புளிப்பு பற்றிய உவமைகள் கடவுளின் ஆட்சியின் வளர்ச்சியில் நிகழும் நிகழ்வைப் பற்றிப் பேசுகின்றன. ஒரு சில சீடர்களுடன் இயேசு தொடங்கும் படிப்பினை உலகம் முழுவதும் பரவும். கடவுளின் மீட்பின் மறைபொருள் திட்டத்தை வெளிப்படுத்த இயேசு உவமைகளைப் பயன்படுத்துகிறார்.
சிந்தனக்கு.
கடுகு விதை மற்றும் புளிப்பு மாவு என்னும் இரு உருவகங்கள் வழியாக விண்ணரசின் தன்மையை இயேசு எடுத்துரைத்ததை இன்று நற்செய்தியில் அறிந்தோம். இரண்டுமே உருவத்தில் அளவில் சிறியவை.தான். இரண்டின் செயல்பாட்டையும் யாராலும் தடுக்க இயலாது. அவை இயல்பாகவே செயல்படும். இவ்வாறாக, அளவில் சிறியனவாக இருப்பவை மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியனவாக இயேசு இவ்விரண்டையும் பயன்படுத்துகின்றார்.
கடுகு விதை அனைத்து விதைகளிலும் மிகச் சிறியது, ஆனால் அது வளரும்போது அது ஒரு மரமாக மாறும். கடவுளின் அரசுக்கு இதுவே பொருந்தும். கடவுளின் வார்த்தையை ஏற்றுக்கொள்வோர் உள்ளத்தில் உள்ள மிகச்சிறிய தொடக்கங்களிலிருந்து இது தொடங்குகிறது. இது கண்ணுக்குத் தெரியாமல் செயல்படுவதோடு, உள்ளிருந்து ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது. புளிப்புமாவும் இதே போன்றே செயல்படுக்றது. மாவில் புளிப்பு மாவு இல்லாதபோது, அது மாவாகவே இருக்கும், அதன் வடிவத்தில் எதுவும் மாறாது. ஆனால் மாவில் புளிப்பு மாவு சேர்க்கப்படும்போது ஒரு மாற்றம் நிகழ்கிறது.
அவ்வாறே, இறைவார்த்தையைக் கேட்டு அதனை அமைதியாக உள்ளதில் தியானிப்போர் உள்ளத்தில் அது வேரூன்றத் தொடங்கும். அதன் வளர்ச்சியால், அவர்கள் வளம்பெறுவர், நற்செய்தி தூதுவர்களாக மாறுவர்.
இரண்டாவதாக, இயேசு கூறுகிறார்: "வானத்துப் பறவைகள் வந்து அதன் கிளைகளில் கூடுகளைக் கட்டுகின்றன." வேறு வார்த்தைகளில் சொன்னால், நமது நல்ல முன்மாதிரியால், சாட்சிய வாழ்வார் மற்றவர்கள் விண்ணகத்தில் கூடுகளைக் கட்டுவார்கள் என்பதாகும்.
முதல் வாசகத்தில், சீனாய் மலைக்குச் சென்று திரும்பிவரும் மோசே, மக்கள் ஆரோனின் தலைமையில் பொன்னாலான கன்றுக்குட்டியைச் செய்து, வழிபட்டுக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர்கள் கடவுளுக்குக் கீழ்ப்படிவோம் என்று அளித்த வாக்குறுதியைக் காற்றில் பறக்க விட்டனர். கடவுளின் வார்த்தை அவர்களது உள்ளத்தில் வேரூன்றவில்லை. அவர்களது இதயம் வறண்ட நிலமானது. எனவே விண்ணக வாழ்வை நழுவவிட்டனர்.
நாம் வாழுமிடத்தில் நமது எண்ணிக்கை மிகச் சிறியதாக இருக்கலாம். இயேசு சொல்கின்ற சிறிதளவு புளிப்பு மாவு, மாவு முழுவதையும் புளிப்பேறச் செய்வதுபோல், நாம் வாழுமிடத்தில் (அன்பியத்தில் அல்லது அ.தி.ச.வில் ) நாம் செய்யும் சிறிய நற்பணிகூட பெருகத் தொடங்கி இயேசுவை வெளிப்படுத்தும் பெரும்பணியாக ஒருநாள் மாறக்கூடும். அது நமது கண்களுக்கும் புலன்களுக்கும் தெரியாது. அவை வெளிப்படும் நாளில் நாம் இறந்தும் இருக்கலாம். ஆனால், கிறிஸ்துவின் பெயரால் நாம் ஆற்றும் சிறு சிறு நற்பணிகள் சமூகத்தில் கிறிஸ்துவின் மாட்சியை ஒளிவீசச் செய்யும் என்பது திண்ணம்.
ஆம், கடுகுச் செடி கேதுரு மரம் போல வானத்தை நோக்கி நேராக வளராது. மாறாக, அதன் கிளைகள் நான்கு பக்கமும் படந்து பெரும் குடைபோல் காட்டியளிக்கும். ஒரு காலத்தில் திருஅவையும் இறையரசின் ஒப்புவமையாக உலக முழுவதும் தழைத்து வளர்ந்து மானிடருக்கு மீட்பின் அடையாளமாக விளங்கும் என்பதை இயேசு விவரிக்கிறார்.
இறைவேண்டல்.
ஆண்டவரே, என் உள்ளத்தில் நீரே ஊன்றிய நம்பிக்கை என்னும் விதை வளர்ந்து எனக்கும் என்னால் பிறருக்கும் வாழ்வளிக்க அருள்தருள்வீராக. ஆமென்.
ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
