சிலுவையை ஏற்கும் சீடத்துவம் நிலைவாழ்வு பெறும்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

பொதுக்காலம் 6ஆம் வாரம் –வெள்ளி
தொ.நூ. 11: 1-9
மாற்கு 8: 34- 9: 1
சிலுவையை ஏற்கும் சீடத்துவம் நிலைவாழ்வு பெறும்!
முதல் வாசகம்.
வரலாறுக்கு முந்தைய முதல் பதினோரு அதிகாரங்களின் இறுதிக்கு வந்துவிட்டோம். மக்களை அனைவரும் ஒன்றாய்க்கூடி “நாம் நமெக்கென, வானகங்களை முட்டுமளவிற்கு கோபுரம் ஒன்றை எழுப்புவோம். நாம் பிரிந்து பூமி எங்கும் பரவிப் போகாமல் அதில் ஒன்றாய் வாழலாம். நம் புகழை அந்தக் கோபுரம் நிலைநாட்டும்” என முடிவெடுத்து பாபேல் என்ற கோபுரத்தைக் கட்ட ஆரம்பித்தனர். இதில் பாபேல் என்பது பாபிலோனுக்கு தொடக்கத்தில் கொடுக்கப்பட்ட எபிரேயப் பெயர் என்று அறிகிறோம்.
கடவுளோ வெறுப்புற்று, அவர்களின் முயற்சிக்கு எதிராக, ஒருவர் மற்றவர் பேச்சைப் புரிந்துகொள்ள முடியாதபடி மொழியில் குழப்பத்தை ஏற்படுத்தினார். ஆண்டவராகிய கடவுள் அவர்களை உலகம் முழுவதும் சிதறுண்டு போகச் செய்ததால், அவர்களின் பாபேல் கோபுர முயற்சி தோல்வியில் முடிந்தது.
நற்செய்தி.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு சீடத்துவத்தின் உண்மை நிலையை சித்தரிக்கிறார். அவரைப் பின்பற்றும் சீடர்கள் எப்படி இருக்கவேண்டும் என்பதை எடுத்துரைக்கின்றார். அவர்கள் முதலில் தன்னலத்தைத் துறக்க வேண்டும். காரணம் இயேசு எல்லாருக்கும் எல்லாமானவர், அவர் ஒரு குறிப்பிட்ட மக்களினத்திற்கு மட்டும் உரியவர் அல்ல. இயேசு எல்லாருக்கும் உரியவர், உலகை மீட்க வந்த மீட்டபர். ஆகவே, இயேசுவின் சீடராக இருப்பவரும் அவரைப்போல் பொதுநல பார்வையுடையோராய் விளங்க வேண்டும். நான், என் குடும்பம், என் இனம் என்ற குறுகிய வட்டத்திற்குள் வாழ்வதைப் புறக்கணிக்க வேண்டும்.
மேலும், இரண்டாவது தகுதியாக இயேசு சொல்வது: சிலுவையைச் சுமப்பதாகும். பிறர் நலன் கருதி துன்பங்களைத் தாங்கிக்கொள்பவராக இருக்க வேண்டும் என்கிறார். சீடத்துவ வாழ்வு என்றாலே சிலுவை என்ற போராட்டம் நிறைந்த வாழ்வு என்று தான் அர்த்தம். இயேசு எப்படி சிலுவைகளைத் தாங்கிக்கொண்டு இறைத் திருவுளத்தை நிறைவேற்ற இறுதி வரை போராடினாரோ, அருடைய சீடர் என்போர் இப்போராட்டத்திற்கு விதிவிலக்கு அல்ல. என்றும் மனத்திடனோடு இயேசுவைப் பின் செல்ல வேண்டும் என்கிறார் ஆண்டவர்.
சிந்தனைக்கு.
‘இயேசுவின் பின்னால் நானும் செல்வேன் திரும்பிப் பார்க்க மாட்டேன்’ என்ற பாடல் இன்னும் ஓரிரு வாரங்களில் பிறக்கவுள்ள தவக்காலத்தில் மூலை முடுக்குகள் மற்றும் பட்டித்தொட்டிகளெல்லாம் ஒலிக்கும். பின்னர் ஓய்துபோகும். இது இயல்பாகிவிட்டது. உண்மை சீடத்துவத்திற்கு இது பொருந்தாது. பேருக்கும் புகழுக்கும் வாழ நினைப்பது ஒருபோதும் சீடத்துவத்திற்கு அழகாகாது.
நற்செய்தியில் ‘ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பார் எனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?’ என்று இயேசுவின் ஒரே கேள்விதான் இராணுவத் துறையில் ஒரு சிறந்த போர் வீரனாகத் திகழ்ந்த புனித இஞ்ஞாசியாரை மனமாறச் செய்தது.
புனித பவுலடிகளார் இயேசுவால் ஆட்கொண்ட பிறகு அவருக்குரிய பெரிய பதவியெல்லாம் குப்பை எனக் கருதினார் (பிலி 3:8), அவரது முன் மாதிரிகையைப் பின் தொடர்ந்து, புனித இஞ்ஞாசியார் தான் கொண்டிருந்த இராணுவத் தளபதி என்ற உயர் பதவியைத் துச்சமெனக் கருதி, அரசப் போர் வீரனாக இருப்பதைத் துறந்து, இயேசு கிறிஸ்துவின் போர் வீரனாக மாறினார்.
ஆம், பாவத்தில் உழலும் இவ்விபசாரத் தலைமுறையினருள், என்னைக் குறித்தும் என் வார்த்தைகளைக் குறித்தும் வெட்கப்படும் ஒவ்வொருவரையும் பற்றி மானிட மகனும் தம்முடைய தந்தையின் மாட்சியோடு தூய வானதூதருடன் வரும்போது வெட்கப் படுவார்” என்கிறார் இயேசு.
நற்செய்தியைப் பறைசாற்ற வெட்கப்படுவோர் ‘கிறிஸ்தவர்’ என்ற பெயருக்கு மட்டும் சொந்தக்காரர், இயேசுவுக்கு அல்ல. ஆகவே, சீடத்துவமானது மேலோட்டமாக, பட்டும் படாமல் வாழும் வாழ்வல்ல. அது ஆலய வழிபாட்டோடு முடிந்துவிடும் வாழ்வும் அல்ல.
சீடத்துவம் என்பது ஒரு விளக்கு போன்றதாகும். விளக்கு இருப்பது முக்கியமல்ல. விளக்கு எரிந்துகொண்டிருக்கிறதா? என்பதுதான் முக்கியம். நேற்றைய சற்செய்தியில், ‘ஆண்டவரே, உமக்கு பாடுகளும் மரணமும் வேண்டாம்’ என்றுரைத்த பேதுருவை, அப்பாலே போ சாத்தானே’ என்று கடிந்துகொண்டார் ஆண்டவர். சீடத்துவத்தில் நாம் சந்திக்கவுள்ள பாடுகளைப் புறக்கணித்தால் நாமும் ‘சாத்தான்கள்’ தான். இதை மறுப்பதற்கில்லை.
நாம், சிலுவையைக் கடவுளுடைய ஞானமாகவும் அவருடைய வல்லமையாகவும் பார்க்க வேண்டும். கிறிஸ்துவுக்காக தன்னை இழப்போர் வாழ்வு பெறுவர்’
இறைவேண்டல்.
அன்பான ஆண்டவரே! துணிவோடு ஒரு சீடனாக வாழ எனக்குக் கற்றுத்தாரும். காயங்களைப் பற்றிக் கவலைப்படாமல் நான் என் வாழ்நாளில் பணிப் புரிவேனாக! தன்னலத்தைத் துறந்து, நான் உழைப்பேனாக! ஆமென்
ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
