நமது நம்பிக்கை பார்வை தெளிவுற்றிருக்கட்டும்!| ஆர்.கே. சாமி | VeritasTamil

பொதுக்காலம் 6ஆம் வாரம் –புதன்
தொ.நூ.  8: 6-13, 20-22
மாற்கு 8: 22-26


நமது நம்பிக்கை பார்வை தெளிவுற்றிருக்கட்டும்!

முதல் வாசகம்.

  இன்று நாம் வாசிக்கும் பத்தியில், வெள்ளம் ஏற்பட்டு நாற்பது நாள்கள் முடிந்தபின், நோவா முதலில் ஒரு காக்கையை வெளியே அனுப்புகிறார்.  அது மண்ணுலகில் வெள்ளம் வற்றும்வரை போவதும் வருவதுமாக இருந்தது. அடுத்து, அவர் அனுப்பிய புறா, எங்கும் வெள்ளமாக இருந்ததால், அது திருப்பிவிட்டது. இதன்வழி வெள்ள்ம் இன்னும் வற்றவில்லை என்பதை அறிந்து கொண்டார்.
    ஒரு வாரம் கழித்து அவர் மீண்டும் புறாவை வெளியே அனுப்புகிறார், இந்த முறை அது அதன் அலகையில் ஓர் ஒலிவ கிளையுடன் திரும்பியது.  அடுத்த முறை புறா விடுவிக்கப்படும்போது அது திரும்பி வராது, ஏனெனில் அது உட்கார இடம் கிடைத்துவிட்டது.  தண்ணீர் குறைந்து,   நோவா கடவுளுக்கு ஒரு பலியைக் செலுத்துகிறார்.  
மேலும் பூமி முழுவதையும் மீண்டும் ஒருபோதும் அழிப்பதில்லை என்று கடவுள் உறுதியளிக்கிறார்.

நற்செய்தி.

இயேசு ஒரு பார்வையற்றவரைக் குணப்படுத்தியதை நற்செய்தி விவரிக்கிறது. இயேசு பெத்சாய்தாவிற்கு வந்தபோது, ஒருசிலர் பார்வையற்ற ஒருவரை இயேசுவிடம் கொண்டு வந்ததும், இயேசு செய்தவை:
1.    பார்வையற்றவரது கையைப் பிடித்து ஊருக்கு வெளியே அழைத்துச் செல்கிறார்.
2.    அவருடைய விழிகளில் உமிழ்ந்து கைகளை அவர்மேல் வைத்து, “ஏதாவது தெரிகிறதா?'' என்று கேட்டார்.
3.    மனிதரைப் பார்க்கிறேன். அவர்கள் மரங்களைப் போலத் தோன்றுகிறார்கள். ஆனால் நடக்கிறார்கள் என்று பதில் அளிக்கிறார்.
4.    இயேசு மீண்டும்  கைகளை அவருடைய கண்களின்மீது வைக்க,  முழுப்பார்வை பெற்று அனைத்தையும் தெளிவாகக் கண்டார்.
5.    ஊருக்குள் போகவேண்டாம் என்று,  அவருடைய வீட்டிற்கு அனுப்பிவிட்டார்.

சிந்தனைக்கு.

முதல் வாசகத்தையும் நற்செய்தியையும் ஒப்பிட்டுப்  பார்க்கும்போது, ஒரு முக்கிய படிப்பினைய நாம் பெறுகிறோம்.  எந்த ஒரு செயலிலும் வெற்றிபெற படிப்படியான செயல் திட்டமும் முயற்சியும் தேவை. முதல் வாசகத்தில், திடீரென்று நோவா பேழையின் கதவைத் திறந்து வெளியே வரவில்லை. முதலில் தன்னுடன் பேழையில் இருந்த காகத்தை, புறாவை அனுப்பி வெள்ளத்தின் நிலைமையை சோதித்தறிகிறார். பின்னர் ஒரு வாரமக் காலம் காத்திருந்து பொறுமையாக முடிவெடுக்கிறார்.
அவ்வாறே, நற்செய்தியில் இயேசு தன்னிடம் கொண்டுவரப்பட்ட பார்வையற்றவரை ஐந்து படிகளில் குணப்படுத்துகிறார். இன்றைய நவீன காலத்தில், திடீர் உணவு, திடீர் காப்பி என அனைத்தும் கண்மூடி கண் திறக்கும் நேரத்தில்  தயாராகிவிடுகின்றன.  இந்த துரித உலகில  நமக்கு உடனுக்குடன்  காரியம் ஆக வேண்டும். நமக்குப் பொறுமை கிடையாது.  பதறாதக் காரியத் சிதறாது என்பார்கள். அதாவது ஒரு காரியத்தை செய்யும்போது பதட்டப்படாமல். நின்று நிதானமாக அவசரபடாமல். செய்தால் அந்த காரியம் பலன் தரும். இக்கருத்தை திருவள்ளுவர், 
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு (குறள் 467) 
என்கிறார். இக்குறளின் படி, நன்றாகச் சிந்தித்த பிறகே செயலில் இறங்க வேண்டும்; இறங்கிய பிறகு சிந்திக்கலாம் என்பது தவறு. 
கடவுளுடனான நமது உறவும் படிபடியான  செயல்முறைதான்.   தம் ஒரே மகன் இயேசு மீட்பராக உலகிற்கு வர படிப்படியாக  பல வகையில் அவர் தயாரிப்புகளைச் செய்தார். கவுள் பொறுமைகாத்தார். காலம் நிறைவுற்றபோதுதான் அவர் மீட்பரை உலகிற்கு அனுப்பினார். 
நற்செய்தியில்,   பார்வையற்றவரை இயேசுவிடம் கொண்டு வந்தவர்கள், தங்கள் ஆழ்ந்த நம்பிக்கையின் காரணமாக அல்ல, இயேசுவைச் சோதிப்பதன் காரணமாக அவரைக் கொண்டு வந்ததாகத் தெரிகிறது. எனவேதான் இயேசு அவரை ஊருக்கு வெளியே அழைத்துச் சென்று யாரும் காணாதவாறு  குணப்படுத்துகிறார். இயேசு அந்த மனிதனைக் குணமாக்கியதும், “ஊருக்குள்ளேயும் போகாதே” என்று சொல்லித் தன் வீட்டுக்கு அனுப்பியதற்கும் இதுவே காரணமாக இருக்கலாம். 
மேலும், பெத்சாய்தாவில் வசிப்பவர்களின் இதயங்களில் இந்த வல்ல செயல் நம்பிக்கையை ஏற்படுத்தாது என்பதை இயேசு அறிந்திருந்தார். எனவே, ஊருக்கு திரும்ப வேண்டாம் என்று இயேசு அந்த பார்வைப் பெற்றவரை அறிவுறுத்தினார். பெத்சாய்தா மக்கள் நம்பிக்கையில் உண்மை உள்ளவர்கள் அல்ல. அதனால்தான் இயேசு, ‘பெத்சாய்தா நகரே, ஐயோ! உனக்குக் கேடு! என்று சபித்தார் (மத் 11:21)
நம்மில் நாம் கொண்டுள்ள நம்பிக்கையை தூய ஆவியார் நாளுக்கு நாள் ஆழப்படுத்துகிறார். இது ஒரு நாள், இரு நாளில் ஏற்படுவதல்ல. கடுகு விதைப்போன்று மெல்ல மெல்ல, படிப்படியாக வளர்ச்சி பெறும். இது நமது  கண்களுக்குப் புலப்படாத  ஒரு விந்தையாகும்.
நிறைவாக, முதல் வாசகத்தன் இறுதியில்,  ‘பூமி முழுவதையும் மீண்டும் ஒருபோதும் அழிப்பதில்லை என்று கடவுள் உறுதியளித்தார் என்று வாசித்தோம். ஆம்,  கடவுள் அழிப்பதப்றகாக உலகைப் படைக்கவில்லை. அதில் காணும் அனைத்து தீமையையும் அகற்றி, தன் மகன் இயேசுவின் வழியாக மீட்டெடுத்து, புதியதோர் உலகமாக மாற்ற விரும்புகிறார். ஆகவே, புதிய வானமும் புதிய பூமியும் ஒருநாள் உருவாகும் என்பதே நமது நம்பிக்கை. (திவெ 21:5)

இறைவேண்டல்.

“இதோ! நான் அனைத்தையும் புதியது ஆக்குகிறேன்” என்று வாக்களித்த ஆண்டவரே, உமது புதுப்படைபில் நானும் புதுப்பிக்கப்பெற்று வான்வீட்டில் உம்மோடு மகிழ்ந்திருக்க அருள்புரிவீராக. ஆமென்.
 

ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452