நல்லவன் வாழ்வான்.. நான்கு மறை தீர்ப்பு!| ஆர்.கே. சாமி | VeritasTamil

பொதுக்காலம் 6ஆம் வாரம் –செவ்வாய்
தொ.நூ.  6: 5-8; 7: 1-5, 10
மாற்கு   8: 14-21

 நல்லவன் வாழ்வான்.. நான்கு மறை தீர்ப்பு!

முதல் வாசகம்.

நோவா கதையின் இன்றைய வாசகத்தில் இரு பகுதிகள் விரிக்கப்படுகின்றன. முதல் பகுதி 6: 5-8 வரை உள்ளது. இதை குருக்கள் மரபினர் தொகுத்தனர். இரண்டாம் பகுதியான நோவாவின் கதையை (7: 1-5, 10 ) யாவே மரபினர் எழுதினர் என்று அறிகிறோம்.
தொடக்கத்தில்  மனிதர்களின் கீழ்ப்படியாமை மற்றும் பாவம் ஆகியவற்றால் கடவுள் விரக்தியடைந்தவராக சித்தரிக்கப்படுவதைக் காண்கிறோம்.  கடவுள் அவர்களைப் படைத்தார் மற்றும் ஆரம்பத்தில் அவர்களை மிகவும் நன்றாகக் கண்டார்.  ஆயினும்கூட, சுயநலம் நிறைந்த தீய வழியைப் பின்பற்றி  கடவுளிடமிருந்தும் அவரின் அன்பிலிருந்தும் விலகினர்.  
இதற்கு நோவாவும் அவரது குடும்பத்தினரும் மட்டும் விதிவிலக்காக கடவுள் முன் வாழ்ந்தனர்.   நோவா கடவுள் முன் நேர்மையாளராக விளங்கினார். எனவே கடவுள் நோவாவைத் தேர்வுச் செய்து. வாழ்க்கையின் இன்றியமையாதவற்றில் ஒன்றாக விளங்கும்  தண்ணீரை, அதன் சக்தியை எதிர்மறையான முடிவுகளுக்கு மாற்றிய வாழ்க்கையின் அழிவுக்கு ஆதாரமாக இருக்க கடவுள் திட்டமிடுகிறார்.  
பேழையில் இருக்கும் மனிதர்களும் விலங்குகளும் மட்டுமே காப்பாற்றப்பட வேண்டும்.  நோவா கடவுளின் வழிகாட்டுதலின்படி பேழையைக் கட்டியவுடன்    ஒவ்வொரு விலங்குகளையும் பேழைக்குள் எடுக்குமாறு கடவுள் நோவாவிடம் கூறுகிறார்.  அதன் விபரம் பின்வருமாறு:
1.    தக்க விலங்குகள் எல்லாவற்றிலிருந்தும் ஆணும் பெண்ணுமாக ஏழு சோடிகள் 
2.    தகாத விலங்குகளிலிருந்து ஆணும் பெண்ணுமாக ஒரு சோடி.   
3.    வானத்துப் பறவைகளில் இருந்து  ஆணும் பெண்ணுமாக ஏழு சோடிகள். 

தொடர்ந்து. அதற்கான காரணத்தை நோவாவுக்கு எடுத்துரைக்கிறார். அதவது, ஏழு நாள்களில் மண்ணுலகின்மேல் நாற்பது பகலும் நாற்பது இரவும் நான் மழைபெய்யும் என்றும்,  உயிரினங்களை எல்லாம் இந்த நிலத்திலிருந்து அழித்தொழிக்க உள்ளதாகவும் கூறுகிறார். 
ஆண்டவர் கட்டளையிட்டபடியே நோவா எல்லாவற்றையும் செய்தார். ஏழு நாள்களுக்குப்பின் மண்ணுலகில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
நற்செய்தி.

இன்றைய நற்செய்தியில் இயேசு தம் சீடரிடம், “பரிசேயர், ஏரோதியர் ஆகியோரது புளிப்பு மாவைக் குறித்து மிகவும் கவனமாய் இருங்கள்” என்கிறார்.   பரிசேயர், ஏரோதியர் ஆகியோரின் புளிப்பு மாவு என்று சொல்கின்றபோது, அவர்களின் தவறான போதனை (மத் 16:12), அவர்களின் வெளிவேடம் (லூக் 12:1)¸ ஒழுக்கக்கேடான மற்றும் உலகப் போக்கிலான வாழ்க்கை (மாற் 6: 17-29) ஆகியவற்றைத்தான் இயேசு குறிப்பிடுகின்றார். இவற்றிலிருந்து தம் சீடர்கள் கவனமாக இருக்கவேண்டும் என்று இயேசு பேசுகின்றார்.

சிந்தனைக்கு.

இன்றைய முதல் வாசகத்தில், மண்ணுலகில் மனிதர் செய்த தீமைகளை கண்டு மனம் நொந்துகொள்கிறார். மனிதர்களிடையேயும், சமூகங்களிடையேயும் நல்லெண்ணம், அமைதி இல்லை. பொறாமையும், தன்னலமும் தலைவிரித்தாடின. தோழமையும் பரிவிரக்கமும் மறைந்து போயின.  இந்நிலையில் கடவுள் புதுப்படைப்பை உருவாக்க திடுடமிடுவதாக இந்த யாவே மரபினர் கூறுகின்னர். தீயோர் மத்தியில் ‘நோவா’ என்பவரை ஒரு நேர்மையாளராகக் கடவுள் பார்க்கிறார். வெள்ளத்தை ஏற்படுத்தி தீயோரை அழித்து புதிய உலகம் படைக்கிறார். இந்த கதையை ஒரு படிப்பினையாக யோவே மரபினர் யூதர்களுக்குத் தெரிவிக்கின்றனர். நல்வர்களுக்கு ஆண்டவர் என்றும் துணையிருந்து கப்பார் என்பது தெளிவாகிறது.
நற்செய்தியில், ஐந்து அப்பங்களைக் கொண்டு, ஐயாயிரம் பேருக்கு உணவு அளிக்கும் வல்லமை நிறைந்த இயேசு துணை இருக்கும்போது, சீடர்கள் ஏன் கலங்க வேண்டும்? இதற்கு இயேசு நல்லதொரு விளக்கத்தை முன்வைக்கிறார்.  அவர் சீடரைப் பார்த்து, “இன்னும் உங்களுக்குப் புரியவில்லையா?” என்று கேட்கிறார். இயேசு உடனிருக்கும் வேளையில் அனைத்தும் நலம் பெறும். ஐயாயிரம் பேர் பத்தாயிரம் பேராக இருந்தாலும் அஞ்சுவதற்கு ஒன்றிமில்லை. கடலையே பிளந்தவருக்கு இது எம்மாத்திரம்?
நாமும் பல தருணங்களில் ஆண்டவர் நம்மோடு, நம்முடன் உள்ளார் என்பதை மறந்துவிடுகிறோம். அவர் சீடரைப் பார்த்து, “இன்னும் உங்களுக்குப் புரியவில்லையா?” என்று கேட்கிறார் என்று மாற்கு குறிப்பிட்டுள்ளார். சந்தேகம் மற்றும் குழப்பத்தின் விதைகள் நம்மைச் சுற்றி உள்ளன.   பரிசேயர் மற்றும் ஏரோதின் தீய புளிப்பைக் காண சீடர்களின் இயலாமையைப் போலவே, நாமும் நம் சமூகத்தில் உள்ள நீயனவற்றைக் காணத் தவறிவிடுகிறோம். சில வேளைகளில் சுயநல போர்வையில் அநீதிகளைக் கண்டும் காணாமல் போகிறோம். 
நோவாவை நேர்மையாளராக அடையாளம் கண்ட கடவுள், நம்மிலும் அத்தகைய நேர்மையைக் காண விரும்புகிறர். பரிசேயர், ஏரோதியர் போல் வெளிவேடத்தை  ஏற்பவர் அல்ல நம் கடவுள்.   மீட்பைப் பெற விரும்புகிறவர்கள் தங்களுடைய வாழ்நாள் முழுவதும் கடவுளுக்கு உண்மையாக இருக்க வேண்டும். இயேசுவோ, ‘உன் நம்பிக்கை உன்னை நலமாக்கிற்று’ என்று  கூறுகிறார். இங்கே அறைக்குறை நம்பிக்கைக்கு இடமில்லை. 

 
இறைவேண்டல்.
 இயேசுவே, நீர் என்னோடு நாளும் பொழுதும் இருப்பதற்காக உமக்கு நன்றி.    எனவே, நான் எது பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை என உணரும் ஞானத்தை எனக்குத் தந்தருளும்.  ஆமென்.
  

ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452