இதயத்தைக் கிழித்துக் கொள்ளும் காலமே தவக்காலம்! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Ash Wednesday | Daily Reflection
தவக்காலம் - திருநீற்று புதன்
I: யோவேல்: 2: 12-18
II:திபா 51: 1-2. 3-4ய. 10-11. 12,15
III: 2 கொரி: 5: 20-6: 2
IV: மத்: 6: 1-6,16-18
இதயத்தைக் கிழிப்பது என்றால் என்ன? இராமாயணத்தில் ராமரிடம் தான் கொண்டுள்ள அன்பைக் காட்ட அனுமார் தன் இதயத்தைக் கிழித்துக் காட்டியதாக புராணம் சொல்கிறது. ஏன் இன்றைய கால கட்டத்திலும் கூட அன்பர்கள் தங்கள் அன்பை பகிர்ந்து கொள்ள" என் இதயத்தைத் திறந்து பார்த்தால் நீ தான் இருப்பாய்" என கூறுவதை நாம் கேட்டிருக்கிறோம். ஒருவிதத்தில் இதயத்தைத் திறத்தலோ அல்லது கிழித்தலோ நமது அன்பை பிறருக்குக் காட்டும் ஒரு அடையாள மொழியாக விளங்குகிறது. அதைப் போலவே நம் தந்தையாம் கடவுளிடம் நாம் கொண்டுள்ள உள்ளார்ந்த அன்பை வெளிப்படுத்த நாம் நம் இதயத்தைக் கிழித்துக்கொள்ள உகந்த காலமே இத்தவக்காலம்.
இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் யோவேல் " உங்கள் உடைகளைக் கிழித்துக்கொள்ளாதீர்கள். மாறாக உங்கள் இதயங்களைக் கிழித்துக் கொள்ளுங்கள் " என்று கூறுகிறார். யோவேல் கூறிய இதயத்தைக் கிழித்தல் மனமாற்றத்தைக் குறிப்பதாகும். அது எவ்வாறு தந்தையிடம் நமதன்பை வெளிப்படுத்துவதற்கு ஒப்பாகும் என நாம் எண்ணலாம். நம் விண்ணகத்தந்தையைப் பொறுத்தவரை அவருடைய பிள்ளைகள் நாம் நம் வீழ்ச்சிகளையும் தீச்செயல்களையும் எண்ணி மனதை வருத்தி அவரை நோக்கிச் செல்வதே அன்பின் மிகப்பெரிய வெளிப்பாடாகும்.
இதையே திருப்பாடல் ஆசிரியர் 51 :17ல் " கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே; கடவுளே! நொறுங்கிய, குற்றமுணர்ந்த உளத்தை நீர் அவமதிப்பதில்லை" என்று பாடுகிறார்.
கடவுள் அன்பு பாராட்டுபவர். குற்றங்களை கணக்கில் கொள்ளாதவர். எனவே இதயத்தைக் கிழித்துக் கொண்டு நம் செயல்களுக்காக மனம் வருந்தி நொறுங்குண்டவர்களாய் அவர்முன் செல்லும் போது அவர் அன்பாய் நம்மை ஏற்றுக்கொள்கிறார். நம் அன்பையும் ஏற்றுக்கொள்கிறார். அத்தகைய அன்புக்காக அவர் ஏங்குகிறார் என்றாலும் அது மிகையாகாது.
இவ்வாறாக நம் இதயத்தைக் கிழித்துக்கொள்ளுதல் தந்தையிடம் நம் அன்பை வெளிக்காட்டும் அடையாளமாகவும் திகழ்கிறது. இச்செயலே நம்மை கடவுளோடு ஒப்புரவாக்குகிறது. கடவுளோடு நாம் ஒப்புரவாகும் இச்செயல் சக மனிதரோடும் நம்மை ஒப்புரவாக்குகிறது. இவ்வொப்புரவு நம்முடைய இறைவேண்டலிலும், நோன்பிலும், பிறரன்புச் செயல்களிலும் வெளிப்படும் என்பதில் ஐயமில்லை.
கிறிஸ்தவ வாழ்விற்கு மனமாற்றமே அடித்தளம். இந்த மனமாற்றமே கடவுளின் கருணைமிகுந்த அன்பை நாம் அனுபவிக்கக் காரணியாக விளங்குகிறது. இப்படிப்பட்ட இம்மனமாற்றம் நம் வாழ்வு முழுதும் தொடரப்பட வேண்டியதொன்றாக இருந்தாலும், தவக்காலம் என்பது நமது மனமாற்றத்தை இன்னும் ஆழமானதாகவும் அர்த்தமுள்ளதாகவும் ஆக்குவதற்கு ஏற்புடைய காலமாக இருக்கின்றது. நம் இதயத்தைக் கிழித்துக்கொண்டு நம்மை நாமே ஆழமாக அறிந்து கொண்டு , கடவுளோடும் ,
சுயத்தோடும் , பிறரோடும் , இயற்கையோடும் உள்ள உறவுகளை சீர்படுத்தும் காலமாகவும் இருக்கின்றது இத்தவக்காலம். அன்பு, பரிவு, மன்னிப்பு, சகோதரத்துவம், பகிர்வு போன்ற உயரிய பண்புகளை நம்மிலே வளர்பிறையாக்கிடும் காலம் இத்தவக்காலமே. இறைவேண்டலில் இறைவனோடு ஒன்றிக்கவும், நோன்பிருந்து பாவமெனும் இவ்வுலக மாயையிலிருந்து விடுபடவும், பிறரன்புச் செயல்களால் அனைவரும் இறைகுழந்தைகள் என்னும் உணர்வில் வாழ்ந்திடவும் நம் இதயங்களைக் கிழித்துக்கொள்வோம். நொறுங்குண்ட இதயத்தை கடவுளுக்கு பலிதந்து அவரோடு என்றும் இணைய இத்தவக்காலத்தை தகுந்த வழியில் பயன்படுத்துவோம்.
இறைவேண்டல்
நொறுங்கிய மனத்தை அன்போடு ஏற்கும் இறைவா!
எங்கள் இதயங்களை மனமாற்றத்தால் கிழித்துக்கொண்டு தீச்செயல்களை விடுத்து உமக்கும் பிறருக்கும் எம் அன்பை வெளிப்படுத்துவர்களாக மாற இத்தவக்காலத்தில் உமது அருளை நிறைவாகத் தாரும். ஆமென்..
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
- Reply
Permalink