வெளிவேடம் ஒரு நாள் வெளிப்படும் | ஆர்.கே. சாமி | VeritasTamil
6 பிப்ரவரி 2024, பொதுக்காலம் 5ஆம் வாரம் - செவ்வாய்
முதல் அரசர் 8: 22-23, 27-303
மாற்கு 7: 1-13
முதல் வாசகம்.
தாவீது எருசலேம் நகரை எழுப்பினார். அவரது மகன் சாலமோன் எருசலேமில் ஓர் ஆலயத்தைக் கட்டினார் என்பது வரலாறு.
இன்றைய முதல் வாசகம், சாலமோன் அரசர் ஆலயத்தை ஆண்டவருக்கு அரப்பணித்து, அவரை நோக்கி மக்கள் முன்னிலையில் சமர்ப்பித்த மன்றாட்டை விவரிக்கிறது. அவரது மனந்திறந்த மன்றாட்டு இஸ்ரயேலருக்குச் செழுமையும் புத்துணர்வும் அளிப்பதாக அமைகிறது
‘என் பெயர் இவ்விடத்தில் விளங்கும்’ என்று அக்கோவிலைக் குறித்து கடவுள் கூறியதை நினைவுகூர்ந்து, எருசலேம் ஆலயத்தை ‘யாவே' அவரது உறைவிடமாகக் கொள்ள வேண்டும் என்றும், இரவும் பகலும் அவரது கண்கள் அந்த ஆலயத்தை நோக்கி இருந்திட வேண்டும் என்றும் பலிபீடத்தை நோக்கி மன்றாடுகிறார்.
நற்செய்தி.
இன்றைய நற்செய்தியில், பரிசேயரும் மறைநூல் அறிஞரும் இயேசுவிடம் வந்து, அவருடைய சீடருள் சிலர் கழுவாத கைகளால் உண்பதைக் கண்டு, திகைத்து, ‘ஏன் யூதர்களின் மரபு வழிமுறையை சீடர்கள் பின்பற்றவில்லை?' என்று கேள்வி கேட்கிறார்கள். இவ்வாறு கேட்டவர்களை ‘வெளிவேடக்காரர்' என்கிறார் இயேசு.
சிந்தனைக்கு.
கடவுள் நாம் நேர்மை உள்ளத்தோடு எழுப்பும் மன்றாட்டுகளுக்குப் பதில் அளிக்கத் தாமதிப்பதில்லை. சாலமோனின் மன்றாட்டை செவிமடுத்தார். எருசலேம் ஆலயத்தை தம் மண்ணக உறைவிடமாக அவர் கொண்டிருந்தார். இயேசு இதே எருசலேம் ஆலயத்தை ‘என் தந்தையின் இல்லம்' என்றார் (யோவான் 2:16) அல்லவா? அக்காலத்தில், அருகிலிருந்தும் தொலைவிலிருந்தும் எருசலேம் ஆலயத்திற்கு ஆண்டுதோறும் விழாக்களுக்கும், சடங்குகளை நிறைவேற்றுவதற்கும் மக்கள் கூடினர். எருசலேம் மண்ணக விண்ணகமாகக் காட்சியளித்தது.
அந்நிலை மாறி, கிரேக்கர் ஆட்சியின் போது யூதர்கள் மத்தியில் தலையெடுத்த பரிசேயருடன் மறைநூல் அறிஞரும் இணைந்து பாமர மக்கள் மத்தியில் குறைகள் கண்டு அவர்களைச் சொல்லாலும் செயலாலும் வதைத்து வந்தனர். இவர்களின அநீதிக்கு எதிராகக் குரல் கொடுத்த இயேசுவை நேரடியாக எதிர்க்க இயலாத நிலையில், சீடர்களின் செயலில் குறைக்கண்டு இயேசுவை மடக்குவதை இன்று வாசிக்கிறோம்.
‘தூய்மை' கடைப்பிடக்கப்பட வேண்டும் என்பது பரிசேயரின் வாதம். ஆனால், நடைமுறையில் இருக்கும் பழக்கவழக்கங்கள் உள்ளம் சார்ந்தவை என்பது இயேசுவின் வாதமாக இருந்தது. உள்ளத் தூய்மைக்கு முதலிடம் அளிக்காத வழிபாடும், பரிசேயரின் எண்ணப்படி, வெறுமனே சட்டத்தை முன்வைத்து கொண்டாடப்படும் வழிபாடும் மாறுபட்டவை.
இன்று நம்மில் பலரும் நம் மூதாதையரின் பழக்க வழக்கங்களைக் குரங்குப்பிடியாய் கொண்டுள்ளனர். ‘நங்கள் இப்படிதான், எதற்கும் விட்டுக்கொடுக்க மாட்டோம்' என்று கங்கணம் கட்டி வாழ்வோர் புறவினத்தாரைப் போல் திருஅவையில் உள்ளனர். இத்தகையோர் இறுதியில் எதையும் உடன்கொண்டு செல்வதில்லை. ‘குறி சொல்கிறவனும், நாள் பார்க்கிறவனும், சகுனங்களை நம்புகிறவனும், சூனியக்காரனும், மந்திரவாதியும், ஏவிவிடுகிறவனும், மாயவித்தைக்காரனும், இறந்தவர்களிடம் குறிகேட்கிறவனும் உங்களிடையே இருத்தலாகாது’ (இச 18:10-11) என்பதுதான் கடவுளின் விருப்பம்.
ஆகவே, ‘கிறிஸ்து உங்களை ஏற்றுக் கொண்டது போல நீங்களும் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளுங்கள். அப்போது கடவுளைப் பெருமைப்படுத்துவீர்கள்’ (உரோ 15:7) எனும் பவுல் அடியாரின் அறிவுரைக்கு ஏற்ப, நற்செய்தியின் மக்களாக வாழ முற்படுவோம்.
நிறைவாக, சாலமோனைப் போல நேர்மையான, தாழ்ச்சிமிகு இறைவேண்டலிலும், வெளிவேடமற்ற, உண்மையான மற்றும் தேவையான மரபு வழிமுறைகளைப் பின்பற்றுவதிலும் நாளுக்கு நாள் நாம் சிறந்து விளங்க வேண்டும். எருசலேம் ஆலயத்தை தமது உறைவிடமாகக் கொண்ட ஆண்டவரே நமது இல்லத்தின் தலைவராக இருந்திட வேண்டும். ‘ஆண்டவரே வீட்டைக் கட்டவில்லையெனில், அதைக் கட்டுவோரின் உழைப்பு வீணாகும்’ (திபா 127:1) என்பதை நாம் உணர வேண்டும்.
இறைவேண்டல்.
அன்பு இயேசுவே, என் உள்ளத்தில் குடிகொண்டிருக்கும் தூய ஆவியாருக்குப் பணிந்து, வெளிவேடத்தன்மையைத் துறந்து, உள்ளத்தில் செருக்கின்றி வாழ எனக்குத் துணைபுரிவீராக. ஆமென்
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452